ADVERTISEMENT

ஸ்கோர் செய்தாரா அஸ்வின்?- என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்!

09:39 PM Jan 14, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் முதல் படம் 'என்ன சொல்ல போகிறாய்'. டிவி ஷோவில் அவருக்கு கிடைத்த வரவேற்பு இந்தப்படத்தின் மூலமும் கிடைக்குமா..?

ADVERTISEMENT

காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக வரும் அவந்திகாவுக்கும் அஸ்வினுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கிடையே, தனக்கு வரும் கணவனுக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருந்திருக்கவேண்டும் என்று கண்டிஷனோடு வரும் அவந்திகா, அஸ்வினின் காதல் கதையை கேட்கிறார். இதுவரை யாரையும் காதலிக்காத அஸ்வின், அவந்திகாவிற்காக தான் ஏற்கனவே காதல் தோல்வி அடைந்ததாக பொய் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் முன்னாள் காதலியாக தேஜு அஷ்வினியை நடிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் உண்மையாகவே அஸ்வினும், தேஜுவும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதேபோல் அவந்திகாவும் அஸ்வினை காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் அஸ்வின் திருமணத்தில் சிக்கல் ஏற்படுகிறது. பிறகு இந்த சிக்கலிலிருந்து தப்பித்து அஸ்வின் யாரை கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

நாயகன் அஸ்வின் நடிப்பில் அறிமுக நாயகன் என்ற உணர்வைத் தராமல் சிறப்பாக நடித்துள்ளார். முக்கியமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். ஒரு நடிகராக நல்ல பெயர் கிடைக்கும்படி நடித்துள்ளார். நாயகி தேஜஸ்வினி பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார். பல முக்கியமான காட்சிகளில் இவரே தனி ஆளாக நின்று தனது நடிப்பால் படத்தை தாங்கியுள்ளார் எனலாம். இவரது போல்டான நடிப்பு படத்துக்கு வேகம் கூட்டி உள்ளது. அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். முக பாவனையிலும், வார்த்தை உச்சரிப்பிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் புகழ் கிச்சு கிச்சு மூட்ட தவறியுள்ளார். இருந்தும் காமெடி காட்சிகளை விட நெகிழ்ச்சியான காட்சிகளில் நன்றாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். இவரிடமிருந்து ஆங்காங்கே ஒரு நல்ல குணச்சித்திர நடிகர் வெளிப்பட்டுள்ளார். புகழை காட்டிலும் லொள்ளு சபா சாமிநாதன் காமெடியில் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் டெல்லி கணேஷ் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் மனதில் பதிகின்றனர்.

விவேக் மெர்வின் இசையில் ஃபாலோ மி பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர காட்சிகளை அழகாக கையாண்டுள்ளார்.

ஒரு முக்கோண காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்திய இயக்குநர் திரைக்கதையில் ஏனோ கோட்டை விட்டுள்ளார். கான்செப்ட் ஆக நல்ல கதையாக தெரிந்தாலும் திரைக்கதை தொய்வும், படத்தின் நீளமும் அயர்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியை இன்னமும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.

என்ன சொல்ல போகிறாய் - என்னத்த சொல்ல!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT