ADVERTISEMENT

படமா இல்லை வீடியோ கேமா? சாஹோ - விமர்சனம் 

08:01 AM Aug 31, 2019 | vasanthbalakrishnan

பாகுபலி என்ற மிகப்பெரும் முயற்சி, அதுவும் மிகப்பெரும் வெற்றி பெற்ற முயற்சிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படம், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம், ஜாக்கி ஷெராஃபிலிருந்து அருண் விஜய் வரை பல மொழியிலும் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படம், பாடல்களுக்கு நான்கு, பின்னணி இசைக்கு ஒன்று என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள படம், 'வாஜி சிட்டி' என்ற பிரம்மாண்டமான கற்பனை நகரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம், கடைசியாக... பல முறை சொல்லப்பட்டது போல, ஹாலிவுட்டுக்கு சவால் விடும் இந்திய படம்... என பல வகையிலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வெளிவந்திருக்கும் 'சாஹோ', எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?

ADVERTISEMENT


ADVERTISEMENT


வாஜி சிட்டி... மிக அதிக பணம் புழங்கும், மிகப் பெரும் கேங்ஸ்டர்களும் குற்றவாளிகளும் கோலோச்சும் உலகின் மிகபணக்கார நகரம், அல்லது நாடு. (துபாய் போல என்று எடுத்துக்கொள்ளலாம்). அங்கு, கேங்ஸ்டர்கள், தொழிலதிபர்களுக்கு எல்லாம் தலை, ராய் குரூப்ஸ். ராய் குரூப்ஸின் தலைவர் ராய், கொல்லப்பட, அந்த மிகப்பெரும் பீடத்திற்கு அடுத்து யார் வருவது என்ற அதிகாரப் போட்டி நடக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாவில், மும்பையில் நூதன முறையில், தாங்கள் திருடினோம் என்பதே தெரியாமல் பலர் திருட்டில் பங்குகொள்ளும் திருட்டு, ஒரு நகைக்கடையில் நடக்கிறது. அந்தத் திருடனைப் பிடிக்க அண்டர் கவர் போலீஸ் அஷோக் சக்ரவர்த்தி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்படுகிறது. மும்பை சம்பவத்துக்கும் வாஜி சிட்டிக்கும் என்ன தொடர்பு? இரண்டு ட்விஸ்டுகள், இருநூறு சண்டைக்காட்சிகள், நான்கு பாடல்கள், நானூறு பில்ட்-அப்புகள், ஒரு ஐநூறு (இது திரையரங்கின் சீட் எண்ணிக்கை அல்ல) கொலைகளுடன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது 'சாஹோ'.

நிறைய வி.எஃப்.எக்ஸ், கொஞ்சம் செட், கொஞ்சம் உண்மை என வாஜி சிட்டி, நம் கண்களை பிரம்மிக்க வைக்கிறது. பாடல்கள் உட்பட, படம் நடக்கும் இடங்களின் தேர்வு மிகச் சிறப்பு. உண்மையில் படத்தின் பிரம்மாண்டத்தை உணர வைப்பவை லொகேஷன்கள்தான். அந்த உணர்வில் பெரும் பகுதி மதியின் மிக மிக சிறப்பான ஒளிப்பதிவில் ஏற்படுவதுதான். இத்தனை பிரம்மாண்டமும் படத்திற்கு உதவுவது, காட்சிகள் தோன்றிய சில நிமிடங்கள்தான். அதன் பிறகு, படத்தை நடத்திக் கொண்டு செல்லவேண்டிய திரைக்கதையில் பிரம்மாண்டம் இல்லை என்பது பிரம்மாண்டமான குறையாக இருக்கிறது. பிரபாஸின் அறிமுகக் காட்சியே, ஒரு பக்காவான தெலுங்குப் பட உணர்வை ஏற்படுத்தி, ஏமாற்றத்தை உண்டாக்குகிறது. அங்கு தொடங்கும் ஏமாற்றம் படம் நெடுக பல இடங்களிலும் நேர்கிறது. என்னதான் பொழுதுபோக்குப் படங்களென்றாலும், பிரம்மாண்ட படங்களென்றாலும், அது அனிமேஷன் படங்களாகவே இருந்தாலும் படத்தின் சம்பவங்களில் நம்மை தொடர்புபடுத்த எமோஷன்களும் பெயரளவிலாவது காரணங்களும் தேவை. சாஹோவில் அந்த இரண்டும் பெரும்பாலும் இல்லையென்பதே குறை. உதாரணத்திற்கு மும்பையின் பரபரப்பான ஒரு பகுதியில் ஒரு பழைய மேன்சன் போன்ற ஒரு குடியிருப்பில் சண்டையொன்று நடக்கிறது. அங்கு திடீரென ஒரு அறையில் மலைப் பாம்பு இருக்கிறது. இன்னொரு அறையில் கருஞ்சிறுத்தை உறுமுகிறது. வழியில் நெருப்புக்கோழி நடந்து செல்கிறது. இதற்கு பெயரிளவிலாவது தர்க்கமோ காரணமோ சொல்லியிருக்கலாம். சந்திரமுகியில் வரும் மலைப்பாம்பின் புதிரே இன்னும் விடுபடாமல் இருக்கும் நமக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்தான். இந்தக் காட்சி ஒரு சோறு பதம்.



கதைக்கு ஏற்ற பிரம்மாண்டம்... அல்லது பிரம்மாண்டமாகத்தான் எடுப்போம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கேற்ற வலிமையான கதை... இந்த இரண்டு அணுகுமுறையிலும் இல்லாமல், பிரம்மாண்டமான காட்சிகளின் கோர்வையாக சாஹோ இருக்கிறது. கதையும் ஒரு நேர்கோட்டில் பயணிக்காமல் பல இடங்களில் 'டேக் டைவர்ஷன்' எடுப்பது படத்திலிருந்து இன்னும் நம்மை தள்ளிவைக்கிறது. திலீப் சுப்பராயன் உள்பட பலர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகள் சில இடங்களில் அசர வைக்கின்றன, பல இடங்களில் நம்மையே அசதியாக்குகின்றன. அந்த அளவுக்கு அதிகம், அந்த அளவுக்கு நீளமும் கூட. பல இடங்களில் 'இது படமா இல்ல, வீடியோ கேமா?' என்று எண்ண வைக்கின்றன.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் உண்மையிலேயே சிறப்பாகத்தான் இருக்கிறது. அந்த சுவாரசியத்தை படத்தின் தொடக்கத்திலிருந்தே ஆங்காங்கே காட்டியிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். 'சாஹோ' பின்னணி இசையிலும் தமிழ் வடிவத்தின் வசனங்களிலும் கே.ஜி.எஃப் படத்தின் பாதிப்பு அதிகம். சில காட்சிகளிலுமே கூட தாக்கம் தெரிகிறது. ஆனால், அந்தத் தாக்கம் நமக்கு ஏற்படவில்லை. நான்கு இசையமைப்பாளர்களும் பாடல்களில் கைவிட்டுவிட (காதல் சைக்கோ மட்டும் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் அது வரும் இடம்???) ஜிப்ரான் மட்டும் பின்னணி இசையில் தன்னந்தனியாகப் போராடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து படத்தைத் தங்கியிருப்பவர் ஒளிப்பதிவாளர் மதி. 'ஆம்பளைங்க இவ்வளவு சுயநலமா இருந்தா, உங்களை பெத்த நாங்க எப்படி இருப்போம்?', 'போர்ல சில தருணங்கள்ல ராஜாவே இறங்கி சண்டை போட வேண்டியிருக்கும்' போன்று சில இடங்களில் கவனிக்கவைக்கும் தமிழ் வசனங்களை எழுதியிருப்பவர் 'கே.ஜி.எஃப்' புகழ் அஷோக்.



பிரபாஸ், இத்தனை பெரிய பட்ஜெட்டைத் தாங்கக் கூடிய நாயகனாக உண்மையிலேயே வளர்ந்துவிட்டார். உழைப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை, ஸ்டைலில் நல்ல முயற்சி செய்கிறார், ஆனால் பாகுபலி இரண்டு பாகங்கள் நடித்த களைப்போ என்னவோ, முகத்தில் தெரிகிறது. பாகுபலி, பாகுபலி என்று மீண்டும் மீண்டும் ஒப்பிடுவது தவறு, என்றாலும், அவர் செட் பண்ணிய பெஞ்ச் மார்க்காக பாகுபலி இருக்கிறது. நடிப்பில் 'சாஹோ' பிரபாஸ் 'பாகுபலி'யை தொடவில்லை என்றே தோன்றுகிறது. பிரபாஸுக்குப் பிறகு, படத்தில் ஒரு பெரிய நடிகர்கள் கூட்டமே இருந்தாலும் மனதில் நிற்பவர்கள் ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய் இருவர் மட்டுமே. அருண் விஜய்க்கு செம்ம ஸ்டைலிஷ் பாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். 'ஆஷிகி 2' மூலம் ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருக்கும் நாயகி ஷ்ரத்தா கபூர், படத்தின் இன்னொரு ஆறுதல்.

பிரம்மாண்டமான ஒரு படத்தை உருவாக்க நினைப்பது தவறல்ல, அது பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால், அத்தனை பிரம்மாண்டத்தையும் பார்க்கும் ரசிகனை படத்துடன் ஒன்ற வைக்கும் புள்ளி வலிமையான திரைக்கதை என்பது எப்போதும் மாறாத உண்மை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT