ADVERTISEMENT

ஹீரோவாக முதல்படம்... ஜெயித்தாரா சதீஷ்? நாய் சேகர் - விமர்சனம்!

06:53 PM Jan 14, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காமெடியனாக நடித்து ஹீரோவாக மாறிய நடிகர்கள் வரிசையில் தற்போது சதீஷும் இணைந்துள்ளார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக களமிறங்கும் முதல் படம். அதுவும் ஒரு ஃபேண்டஸி படம். மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் எப்படி இருக்கும்? என்பதை கற்பனை, காமெடி, காதல் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஜார்ஜ் மரியானின் நாய், நாயகன் சதீஷை கடித்து விடுகிறது. இதனால் சதீஷ் கொஞ்சம் கொஞ்சமாக நாயாக மாறுகிறார். அதேபோல் கடித்த நாய் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனாக மாறுகிறது. இதனால் சதீஷின் குடும்பம், வேலை, பவித்ரா உடனான காதல் என அனைத்து விஷயங்களிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலிலிருந்து சதீஷும், நாயும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

சதீஷ் நாயகனாக நடித்தாலும், இது நகைச்சுவை படம் என்பதால் அவருடைய கதாபாத்திரத்தை சற்று சுலபமாகவே செய்துள்ளார். குறிப்பாக, நாயாக மாறும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ரசிக்கும்படி வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் கதைக்கு எவ்வளவு தேவையோ அதை நிறைவாக செய்துள்ளார். நாயகியாக அறிமுகமாகியுள்ள குக் வித் கோமாளி 2 புகழ் பவித்ரா காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பில் ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் அதை சில காட்சிகளில் ஈடுசெய்யும் வகையில் நடித்து பாஸ் ஆகியுள்ளார். நாயாக வரும் லேப்ரடார் நாய்க்கு மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். இவரது வசன உச்சரிப்பும் நாயின் ஆக்சன் காட்சிகளும் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. இதுவே படத்துக்கு வேகத்தை கூட்டி குழந்தை ரசிகர்களை திரையரங்கிற்கு வர செய்யும்படி அமைந்துள்ளது.

பாட்டு பாடும் வில்லனாக நடித்திருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வரும் எபிசோடுகள் நிஜமாகவே சர்ப்ரைஸ் பேக்கேஜ். இவரது காமெடி கலந்த வில்லத்தனம் சிறப்பாக அமைந்து கைத்தட்டல் பெற்றுள்ளது. அதேபோல் இன்னொரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கதைக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் குக் வித் கோமாளி பாலா, மனோபாலா, இளவரசு, லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், குக் வித் கோமாளி சுனிதா, ஞானசம்பந்தம், லொள்ளுசபா மாறன் ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து ரசிக்க வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் காமெடி ஃபேண்டஸி திரைப்படம். இந்த புதுமையான கதைக்களத்தை நகைச்சுவையான திரைக்கதை மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். அதற்கு பலன் கிடைத்ததா என்றால் ஓரளவுக்கு ஓகே என்றே சொல்லத் தோன்றுகிறது. படத்தின் முதல் பாதி சற்று ஸ்லோவாக ஆரம்பித்து பிறகு இரண்டாம் பாதியில் இருந்து வேகமெடுக்க தொடங்கி இறுதியில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிந்துள்ளது. நகைச்சுவை காட்சிகளும் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன. சில இடங்களில் சோதிக்கவும் செய்துள்ளது. எங்குமே கைதட்டி வாய் விட்டு சிரிக்கும்படியான காமெடி காட்சிகள் இல்லை என்றாலும், படம் முழுவதையும் ஒரு சிறு புன்னகை உடனேயே கடக்கும்படி படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் கைதட்டல் பெறுகின்றன. இப்படியான சில காட்சிகள் படத்தையும் காத்து கரை சேர்த்துள்ளன. ஃபேண்டஸி படம் என்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் பார்க்க வேண்டாமென்று படக்குழுவினர் டைட்டில் கார்டில் போடுகின்றனர். அதனால் லாஜிக் பார்க்காமல் குழந்தைகளோடு படத்தை காண திரையரங்குக்கு சென்றால் ஏமாற்றம் இல்லாமல் வெளியே வரலாம்.

நாய் சேகர் - குழந்தைகளுக்காக!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT