ADVERTISEMENT

லாபம் என்றால் என்ன? - ‘லாபம்’ விமர்சனம்.

12:23 PM Sep 11, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் இன்றைய சூழலில் எப்படி ஒருபக்கம் பயோபிக் படங்களின் டிரெண்ட் போய்க்கொண்டிருக்கிறதோ, அதேபோல் விவசாய படங்களின் டிரெண்ட்டும் ஒருபக்கம் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுவாக விவசாய படங்கள் என்றாலே, அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்தே வெளிவந்துகொண்டிருக்கும். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் இந்த ‘லாபம்’ படமோ விவசாயத்தில் உள்ள மறைமுக லாபத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட முயற்சி செய்துள்ளது. அப்படி எடுத்த முயற்சியில் வெற்றியா? தோல்வியா? என்பதைப் பார்ப்போம்.

பெருவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜய்சேதுபதி, நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிராமத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் கிராம விவசாய சங்கத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். விவசாயத்தின் அருமை பெருமைகளைக் கரைத்துக் குடித்த விஜய் சேதுபதி, கிராம மக்களை ஒன்று திரட்டி, அவர்களின் நிலங்களில் கூட்டுப் பண்ணை திட்டம் மூலம் விவசாயம் செய்து, அதில் உள்ள சூட்சமங்களை மக்களுக்குப் புரியவைத்து அதில் லாபம் பார்க்கிறார். அந்த லாபத்தை மக்களுக்குப் பிரித்து கொடுக்கிறார். இந்தத் திட்டத்தைப் பிடிக்காத முன்னாள் விவசாய சங்கத் தலைவரும், அந்தக் கிராமத்தின் பெரிய பணக்காரருமான ஜெகபதி பாபு சூழ்ச்சி செய்து விஜய் சேதுபதியை விவசாயம் பார்க்க விடாமல் தடுத்து ஊரைவிட்டு அடித்து துரத்திவிடுகிறார். ஊரைவிட்டு வெளியே சென்ற விஜய் சேதுபதி ஜெகபதி பாபுவின் எதிர்ப்புகளை மீறி மீண்டும் ஊருக்குள் வந்து விவசாயம் செய்தாரா, இல்லையா? என்பதே ‘லாபம்’ படத்தின் மீதி கதை.

உண்மையில் லாபம் என்றால் என்ன? என்ற கருத்தை ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். அதற்காக அவர் அதிகம் மெனக்கெட்டு காட்சிக்கு காட்சி லாபத்துக்கு விளக்கம் தருவது போன்றே திரைக்கதை அமைத்துள்ளார். இது ரசிக்கும்படி இருந்ததா என்றால்... ஓகே ரகம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. பொதுவாக ஜனநாதன் படங்கள் என்றாலே அதில் ஏதோ ஒரு சமுதாயக் கருத்தை மையமாக வைத்து, அதைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிக்கும்படி கொடுத்துவிடுவார். ஆனால் இந்தப் படத்திலோ பொழுதுபோக்கை காட்டிலும் கருத்துகள் மட்டுமே அதிகமாக டாமினேட் செய்து சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ளூர், வெளியூர் அரசியலில் ஆரம்பித்து உலக அரசியல் வரை விவசாயத்தில் எந்த அளவு கலந்திருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதிலேயே நேரத்தைக் கழித்திருக்கிறார் மறைந்த இயக்குநர் ஜனநாதன்.

விவசாய சங்கத் தலைவராக வரும் விஜய்சேதுபதி, காட்சிக்கு காட்சி விவசாயத்தின் அருமை பெருமைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே என்னவோ படம் முழுவதும் அவர் பிரசங்கம் செய்வது போலவே தோன்றுகிறது. அதேபோல் படம் முழுவதும் அவர் தோற்றத்தில் கண்டினியுட்டி மிஸ் ஆவதால் விஜய்சேதுபதியின் முகம் மனதில் பதிய மறுக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு லுக்கில் வருகிறார். இதனாலேயே அவர் நடிப்பில் எதார்த்தம் இல்லாததுபோல் தோன்றுகிறது.

பாடகி கிளாராவாக அமர்க்களமாக அறிமுகமாகிறார் நாயகி சுருதிஹாசன். ஆனால் அவர் அறிமுக காட்சியில் இருந்த அமர்க்களம், படத்தில் கொஞ்சம் கூட இல்லை. படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரது கதாபாத்திரம் கதைக்குள் திணிக்கப்பட்டுள்ளது போலவே தோன்றுகிறது. படத்தில் அவ்வப்போது விஜய்சேதுபதியுடன் தோன்றி பாதியிலேயே மறைந்துள்ளார்.

வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, வழக்கத்துக்கு மாறான வரவேற்பை பெற முயற்சி செய்து வழக்கமான வரவேற்பையே பெற்றுள்ளார். இந்தப் படத்திலும் அவருக்கு அதே ஸ்டீரியோடைப் வில்லன் வேடம். ஜெகபதி பாபுவுக்கு பி.ஏ.வாக நடிகை சாய் தன்ஷிகா சிறிது நேரம் கவர்ச்சி காட்டி மறைந்துள்ளார். விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், டேனி, நிதிஷ் வீரா, கலையரசன் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் வயல்வெளிகளின் தூரமான எக்ஸ்டீரியர் காட்சிகள் அழகு. இமானின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை மட்டும் சற்று ஓகேவாக இருக்கிறது. கணேஷ் குமார் மற்றும் அகமது ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும்கூட சற்று கவனமாகவும், ஷார்ப்பாகவும் கத்திரியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஒருவேளை படம் முழுவதுமாக முடிவதற்கு முன்னால் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் காலமான காரணத்தினால் படத்தொகுப்பில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணமும் ஒருபக்கம் எழத்தான் செய்கிறது.

உண்மையிலேயே லாபம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது? தற்போது நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் லாபம் என்பது வரமா, சாபமா? என்பதை ஆழமாக மட்டுமே விவரித்துள்ளது ‘லாபம்’ படம்.

லாபம் - கருத்து கந்தசாமி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT