ADVERTISEMENT

இது கமல் படமா..? லோகேஷ் கனகராஜ் படமா..? - விக்ரம் விமர்சனம்

07:17 PM Jun 03, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமல் நடிப்பில் 1986ஆம் ஆண்டு ரிலீசான விக்ரம் திரைப்படம் அந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாமல் போனது. இதனை சரிக்கட்டும் வகையில் 2022-ல் கமலை வைத்து அதேபெயரில் ஒரு படத்தை இயக்கி திரைக்குக் கொண்டுவந்துள்ளார் அவரது ஃபேன்பாயான லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களில் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கியுள்ள படம், நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கமலின் வெள்ளித்திரை பிரவேசம், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் என மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள விக்ரம் எப்படி இருக்கிறது?

படத்தின் ஆரம்பத்திலேயே டன் கணக்கில் காணாமல் போன போதைப் பொருள் இருக்கும் இடத்தை அறிந்த நடிகர் ஹரீஷ் பெரோடி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முகமூடி கொலைகாரர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலையைத் துப்பு துலக்க வருபவரான ஃபகத் ஃபாசில், இறந்துபோன கமலின் அதிர்ச்சியூட்டும் பின்னணியைக் கண்டுபிடிக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதி தலைமையில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து கமல் இறந்ததற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? விஜய் சேதுபதி காணாமல் போன போதைப் பொருளைக் கண்டுபிடித்தாரா? முகமூடி கொலைகாரர்களின் பின்னணி என்ன? என்பதே விக்ரம் படத்தின் மீதி கதையாக விரிகிறது.

ஒரு பக்கம் டன் கணக்கில் காணாமல்போன போதைப் பொருளைத் தேடிக்கொண்டிருக்கும் வில்லன் விஜய் சேதுபதி கேங். மற்றொரு பக்கம் மர்மமான முறையில் காவலர்களைக் கொலை செய்யும் முகமூடி கொலைகாரர்களைத் தேடிக்கொண்டிருக்கும் ஃபகத் ஃபாசில். மற்றொரு பக்கம் முதல் காட்சியிலேயே இறந்துபோகும் கமல்ஹாசன் யாரென துப்புத்துலக்கும் போலீஸ் என பல லேயர்களாக கதைகளைப் பின்னி, அதனைத் தனது பாணியில் தெளிவாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

1986 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் கதாபாத்திரத்தை வைத்து, தற்போது இருக்கும் சூழலுக்கேற்ப ஒரு கதையை உருவாக்கி அதில் 1986 விக்ரம் மற்றும் கைதி படங்களின் கதாபாத்திரங்களையும் உள்ளடக்கி லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்ஸையே இப்படத்தில் உருவாக்கிவிட்டார் இயக்குநர். பரீட்சார்த்த முயற்சியாக இருந்தாலும் இதனை வெற்றிகரமாகச் செய்து முடித்ததில் வியக்க வைக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

முதல் பாதியில் ஃபகத் ஃபாசிலையும், விஜய் சேதுபதியையும் ஸ்கோர் செய்ய விட்டு, இரண்டாவது பாதியில் மொத்தமாக அப்லாஸ்களை அள்ளிவிடுகிறார் கமல். மெதுவாகத் தொடங்கி மெல்ல கதைக்குள் நகரும் முதல் பாதி, இடைவேளைக்குச் சற்றுநேரத்திற்கு முன்னால் விறுவிறுப்படைய தொடங்குகிறது. அங்கு தொடங்கும் அந்த பரபரப்பு இரண்டாம் பாதி முழுவதும் பரவி ரசிகர்களுக்கு ஒரு கமகம பிரியாணி விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஆங்காங்கே வரும் கைதி பட ரெஃபெரன்ஸ் மற்றும் சூர்யாவின் மிரட்டலான கேமியோ போன்ற பல காட்சிகள் படத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்ததோடு, கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ்களாகவும் பரவசமூட்டுகின்றன.

ஆனால், என்னதான் கைதி படத்தில் ஆக்சன் காட்சிகள் துப்பாக்கிச் சூடு காட்சிகள் நிறைந்திருந்தாலும் அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது அதில் இருந்த தரமான செண்டிமெண்ட் காட்சிகள். இந்தப் படத்தில் அப்படியான செண்டிமெண்ட் கொஞ்சம் மிஸ் ஆவது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக ஃபகத் ஃபாசில் சம்பந்தப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள் மனதில் ஒட்டிய அளவுக்கு கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த லோகேஷ் கனகராஜ், எமோஷனல் காட்சிகளுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்.

இது கமல் படமா, இல்லை லோகேஷ் கனகராஜ் படமா என்று கேட்டால் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் படம் என்றே சொல்லத் தோன்றும். அந்த அளவுக்கு கமலை வைத்து செய்ய நினைத்த அனைத்தையும் சிறப்பாகச் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலும் அதற்கேற்றாற்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார், வழக்கம் போலவே. 60 வயதைக் கடந்தும் ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்திலும் பின்னி பெடல் எடுத்துள்ளார் கமல். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நடிப்பில் இன்னமும் என்னென்ன வேரியேஷன்ஸ் காட்ட முடியுமோ அதை எல்லாம் சிறப்பாகச் செய்து மீண்டும் ஒருமுறை இன்ஸ்பயர் செய்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் அதகளப்படுத்தி தியேட்டரை கைத்தட்டல்களால் அதிரச் செய்துள்ளார்.

மாஸ்டரில் வரும் வில்லன் போன்ற கதாபாத்திரத்திலேயே இந்தப்படத்திலும் வருகிறார் விஜய் சேதுபதி. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக வரும் இவர், சிறப்பாகவே நடித்திருந்தாலும் பல்லைக் கடித்துக்கொண்டு பல இடங்களில் பேசும் வசனங்கள் புரியவே இல்லை. இருந்தும் தன் உடல் மொழியாலும் நடிப்பாலும் காட்சிகளுக்கு உயிரூட்டி தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளார். படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கைதி ரெபரன்ஸ்ஸாக வரும் நரேன், கமல்ஹாசன் உடனேயே பயணித்து தனக்குக் கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். அதேபோல் கமலுடன் நடித்துள்ள சந்தான பாரதி, இளங்கோ குமரவேல் ஆகியோர் சிறிது நேரமே படத்தில் தோன்றினாலும் மனதில் பதியும்படி நடித்துச் சென்றுள்ளனர்.

படத்தின் முதல் பாதி முழுவதும் வரும் ஃபகத் ஃபாசில் படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறியுள்ளார். சின்ன சின்ன எமோஷனல் காட்சிகளுக்குக் கூட தன் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி அடடே போட வைத்துள்ளார். இவரின் காதலியாக வரும் காயத்ரியும் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். விஜய் சேதுபதியின் மனைவிகளாக வரும் சிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோர் சில காட்சிகளிலேயே வந்து சென்றுள்ளனர். மலையாளம் கலந்த தமிழ் பேசும் கரப்ட் போலீஸ் அதிகாரியான செம்பன் வினோத் ஜோஸ் அமைதியான வில்லத்தனம் காட்டி கவனம் பெற்றுள்ளார். கடைசியாக வந்தாலும் மாஸ் காட்டி ரசிகர்களைத் திக்குமுக்காட வைக்கிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக இவர் தோன்றிய பிறகு கைதி இரண்டாம் பாகம், விக்ரம் மூன்றாம் பாகத்திற்கான லீடுகள் படத்தில் தென்பட்டவுடன் திரையரங்கு கைத்தட்டல்களால் அதிர்கிறது.

கமல்ஹாசனுக்குப் பிறகு படத்தின் முக்கிய கதாநாயகனாகப் பார்க்கப்படுவது அனிருத். பத்தல பத்தல பாடல் மூலம் தியேட்டரை நடனமாட வைத்த இவர், பின்னணி இசையில் காட்சிக்குக் காட்சி பல்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படியான இசையைச் சரியான இடங்களில் பொருத்தி, படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அனிருத்தின் கடுமையான உழைப்பு படம் பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும் அளவிற்குச் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் உலகத்தரம். குறிப்பாக இரவு நேரக் காட்சிகளுக்கான லைட்டிங் மற்றும் ஆங்கில்கள் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளது. இவ்வளவு தரமான படைப்பை எடுக்க உதவியதற்குக் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பங்கும் அளப்பரியது. இவரின் ஒவ்வொரு செட்களும் அதில் வரும் விதவிதமான துப்பாக்கிகளுமே படத்தை கண்சிமிட்டாமல் பார்க்க வைக்கின்றன. அதேபோல் அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்குப் பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் பரபரப்பின் உச்சம்.

கமல் ரசிகராக வளர்ந்து, சினிமாவிற்கு வந்து, அதே கமலை வைத்து இப்படியொரு படத்தைக் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். அதேபோல் நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இளைஞர்களுக்கும், ஆக்சன் படத்தை ரசிக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்ஸுக்கும் (அதீத வன்முறை காட்சிகள் ஓகே என்றால்) நல்ல சம்மர் ட்ரீட் இந்த விக்ரம்.

விக்ரம் - ஆக்ஷன் அதகளம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT