ADVERTISEMENT

பா.ரஞ்சித்திடம் இருந்து இன்னொரு குண்டு!  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - விமர்சனம் 

10:31 PM Dec 07, 2019 | vasanthbalakrishnan

சினிமா என்பது எல்லோருக்கும் ஒன்றாக இருப்பது இல்லை. சிலருக்கு அது பொழுதுபோக்கு, சிலருக்கு அது வியாபாரம், சிலருக்குக் கலை, சிலருக்கு ஆயுதம். பா.ரஞ்சித்திற்கு சினிமா, தான் பேச நினைத்த அரசியலை பேச, பேசப்படாத குரலை ஒலிக்க, திறக்கப்படாத கதவுகளை, காதுகளை திறக்கும் ஆயுதமாகத்தான் இருக்கிறது. தான் இயக்கிய ஒவ்வொரு படத்தையும் அப்படிப்பட்ட ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய ரஞ்சித், தான் தயாரிக்கும் படங்களையும் அவ்வாறே உருவாக்குகிறார். சரி, தவறு, ஆதரவு, எதிர்ப்பு அனைத்திற்கும் இடையே தனது 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' மூலம் அதே அரசியல் பேசும் பிற இயக்குனர்களையும் தன் வழித்தோன்றல்களாக உருவாக்குகிறார். 'பரியேறும் பெருமாள்' பெற்ற வெற்றி, வரவேற்பை தொடர்ந்து வந்திருக்கிறது அதியன் ஆதிரை இயக்கியுள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.

ADVERTISEMENT



இரண்டாம் உலகப் போருக்காகத் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆயுதங்கள், குண்டுகளை முறையாக அழிக்கிறோம் என்று பெரும் தொகைக்கு டெண்டர் எடுக்கும் இரண்டு ஊழல் நிறுவனங்கள் அவற்றை கடலின் ஆழமான பகுதிகளில் கொட்டுகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போது பல்வேறு ஊர்களில் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கும் குண்டுகள் வெடிப்பதில் உயிர்கள் பலியாகின்றன. ஆனால், அரசுகளாலும் போலீசாலும் உண்மை மறைக்கப்பட்டு, இவை வேறு விதமான விபத்துகளாக செய்திகளில் வெளிவருகின்றன. இப்படி ஒரு குண்டு, சென்னை மாமல்லபுரத்தில் கரை ஒதுங்குகிறது. அந்த குண்டு, பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருடப்பட்டு பழைய இரும்பு, உலோகத்தை வாங்கி விற்கும் கடையில் லாரி ட்ரைவராகப் பணிபுரியும் செல்வத்தின் (தினேஷ்) லாரிக்கு வந்து சேர்கிறது. செல்வம், கடும் உழைப்பை முதலாளிக்குக் கொடுத்தும் அதற்கான வருமானமில்லாத... அவ்வப்போது அதை எதிர்த்து கேள்வி கேட்டு, முதலாளியின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட... சொந்தமாக ஒரு லாரி வாங்கி அந்த முதலாளியின் முன் ஓட்டவேண்டுமென்ற தனது தந்தையின் கனவை சுமந்து திரிகிற... 'என் மனசுக்குப் பிடிச்ச ட்ரைவர் வேலையைத்தான் நான் செய்வேன், ஆனா உன்ன செம்மயா வச்சுப்பேன்' என்று சிட்டுவை (ஆனந்தி) காதல் செய்கிற... ஒரு இளைஞன். சிட்டு, தங்கள் வீட்டுப்பெண் காதலை மறக்க பூசை செய்து அந்தத் தண்ணியை குடிக்கச் செய்யும் குடும்பத்தில் பிறந்த... தொடர்ந்து பேச்சைக் கேட்காத தங்கையை அழைத்துச் சென்று ஆணவக் கொலை செய்யத் தயங்காத அண்ணனை கொண்ட... 'எங்க வீட்ல இருந்து எப்படி தப்பிச்சு வர்றதுன்னு எனக்குத் தெரியும், நீ ஒன்னும் கூட்டிப்போக வேண்டாம் என்ற தைரியம் கொண்ட... காதலில் உறுதியாக நிற்கும் டீச்சர் வேலைக்குப் படித்த இளம் பெண். ஒரு பக்கம் குண்டு... ஒரு பக்கம் சிட்டு... குண்டுக்காகத் துரத்தும் போலீஸ், சிட்டுவுக்காகத் துரத்தும் அவளது அண்ணன் என இரண்டு பிரச்னைகளில் ஒரே நேரத்தில் சிக்கியிருக்கும் செல்வம் என்னவாகிறான், குண்டு என்னவாகிறது என்பதே 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.

ADVERTISEMENT



போர்களின் பின்னணியையும் அவை சாதாரண மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறையையும் விளக்கி ஒரு பக்கம் உலக அரசியலை பேசும் படம், பழைய இரும்புக் கடையில் முதலாளியின் உறிஞ்சல், தொழிலாளர்களின் வாழ்க்கை, கனவு, கண்ணீர், நகைச்சுவை என இன்னொரு பக்கம் மறு எல்லையை தொடுகிறது. அதிகம் பார்க்காத பழைய இரும்புக்கடை வாழ்க்கையை உண்மைக்கு மிக அருகில் காட்டி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. இரும்புக்கடை, பழைய லாரி, பாண்டிச்சேரி ஃபேக்டரி என எந்தத் தளத்திலும் சினிமாவுக்கான பூச்சு இல்லாமல் அப்படியே படமாகியிருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். இப்படி இரு விதமான தீவிரமான விஷயங்களை பேசும் படத்தை தினேஷ் - ’முனீஷ்காந்த்’ ராமதாஸ் காமெடி, குண்டு என்ன செய்யுமோ என்ற சஸ்பென்ஸ் இரண்டும் சேர்த்து ஜனரஞ்சகமாகக் கொடுத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர். அடிமைப்பட்டுக் கிடக்கும் பழைய இரும்புக் கடை தொழிலாளி அணிந்திருக்கும் சேகுவேரா டி-சர்ட், குண்டுடன் சேர்ந்து கரையொதுங்கும் குளிர்பான பாட்டில் என குறியீடுகளும் குறையில்லாமல் இருக்கின்றன. "இந்த நாட்டு குண்டு இங்க வெடிக்காது, அந்த நாட்டு குண்டு அங்க வெடிக்காது, இல்ல?", உள்பட பல வசனங்கள் எளிமையாகவும் வலிமையாகவும் இருக்கின்றன. ஒரு காட்சியில் தனது முதலாளிக்கு ஃபோன் போடும் ராமதாஸ், "ஹலோ, நான் சுப்பையா பேசுறேன்" என தனது உண்மையான பெயரை சொல்ல, முதலில் யாரென தெரியாமல் குழம்பும் மாரிமுத்து, பிறகு "ஏன்... 'பஞ்சர்'னு உன் பேரை சொல்ல மாட்டியா?" என்று திட்டுகிறார். இது காமெடியாகத் தெரிந்தாலும், உள்ளே ஆயிரம் கதையை சொல்கிறது, தங்கள் சொந்த பெயர்களை கூட வைத்துக்கொள்ள முடியாத மக்கள் இருந்ததை, இருப்பதை எளிமையாக சொல்லிச் செல்கிறது இந்தக் காட்சி. இப்படி படத்தில் நேர்மறை பண்புகள் நிறைய.



"உனக்கும் எனக்குமாடா பிரச்னை? நம்ம ரெண்டு பேரையும் கொல்ல ஒருத்தன் வந்துருக்கான்டா" என உலக அளவிலான அரசியலையும் உள்ளூரில் நடக்கும் சாதிப் பிரச்னைகளையும் ஒப்பிடும் வசனம் ஒன்று உள்ளது. இதுதான் படத்தின் அணுகுமுறையாகவும் இருக்கிறது. ஆனால், இந்த முயற்சி படத்தின் குறையாக மாறிவிட்டது. அந்த குண்டு, அது என்னவாகுமோ எங்கு வெடிக்குமோ என்ற பயம், அந்த குண்டை உலகுக்குக் காட்டி அதன் மூலம் உலகுக்கு உண்மையை சொல்ல முயலும் பெண் போராளி, குண்டை மறைக்க எது வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் என துரத்தும் போலீஸ் - கார்ப்பரேட் கூட்டணி என முக்கிய கதையே சுவாரசியத்திற்கு போதுமானதாக இருக்க, பிற விஷயங்கள் சேர்க்கப்பட்டது கூடுதல் சுமையாகவும் விறுவிறுப்பை குறைப்பதாகவும் அமைந்துள்ளது. பெண் போராளி, பத்திரிகையாளர், JNU முன்னாள் மாணவி என்ற பரிமாணங்களுடன் வரும் ரித்விகா நடித்துள்ள பாத்திரம் தைரியமான, ஆக்டிவான பெண்ணாக இருந்தாலும் சில இடங்களில் சாத்தியங்களை மீறி குண்டை துரத்திக்கொண்டே பயணிப்பதும் நம்பகத்தன்மையை குறைக்கிறது. இவ்வளவு பெரிய விஷயம் நடந்து கொண்டிருக்கையில் அதில் அரசு, காவல்துறை, கார்ப்பரேட் என பெரிய அளவில் அதிர்வில்லாமல் சிறிய குழுக்களின் துரத்தல், தேடலுடன் முடிவதும் கேள்விகளை ஏற்படுத்துகிறது.


தினேஷ்... கதாபாத்திரத்துக்காக எதையும், எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருந்து சிறப்பாக நடித்துள்ளார் தினேஷ். ஆனந்தி, தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள வெள்ளந்தியான அழகி. நடிப்பிலும் குறையில்லை. படத்தில் நம்மை பெரிதும் கவர்வது ’முனீஷ்காந்த்’ ராமதாஸ். சிறு எதிர்மறை குணமும் கொண்ட நகைச்சுவையான பாத்திரத்தில் பின்னியெடுக்கிறார். இவ்வளவு சீரியஸான படத்தில் இவர் தரும் காமெடி நிவாரணம் படத்திற்கு பெரும் பலம். ரித்விகா, மாரிமுத்து, லிஜிஷ், சார்லஸ் வினோத் என நடிகர்களின் பங்களிப்பு மிக சிறப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த குண்டு காட்டப்படும்போது டென்மாவின் பின்னணி இசை நமக்கு திகிலை ஏற்படுத்துகிறது. பாடல்களும் களத்துக்கான நேட்டிவிட்டியுடனும் தாக்கத்துடனும் இருக்கின்றன. டென்மா, முதல் படத்திலேயே தனது இசையால் கவனத்தை பெறுகிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் தேவையான அளவில் பயன்படுத்தி சிறப்பான விசுவல்களை உருவாக்கியிருக்கிறது. பழைய இரும்புக் கடை, அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை, இவற்றை பதிவு செய்துள்ள 'நிலமெலாம்' பாடலில் செல்வாவின் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறது என்றே சொல்லலாம். ராமலிங்கத்தின் கலை மிக நேர்த்தியாக, நிஜமாக அந்த உலகத்தை உண்டாகியிருக்கிறது. ஆண்டனியின் ஒலி வடிவமைப்பும் படத்தின் உண்மைத்தன்மைக்கு உதவியிருக்கிறது.

மிகப் பெரிய அளவில் வெடிக்காவிட்டாலும் அதியன் ஆதிரையின் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், இந்தப் படம் இன்னொரு குண்டாகத்தான் வந்திருக்கிறது. இதன் வெடிப்பில் புதிய விஷயங்கள் வெளிவந்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT