ADVERTISEMENT

எப்படி இருக்கிறது 'விக்ரம் வேதா' இயக்குநர்களின் புதிய படைப்பு..? சுழல் - விமர்சனம்

10:53 PM Jun 19, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

சுழல் விமர்சனம்

விக்ரமாதித்தன் முதுகில் வேதாளம் ஏறிக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் பதில் கூறுவதை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்து உருவாகிய விக்ரம் வேதா வெற்றி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியின் அடுத்த படைப்பாக ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவை மையமாக வைத்து, அதில் சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு ஆழமான கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர் சுழல். இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் பாணியில் ஒடிடியில் வெளியாகியுள்ள இந்த தொடர் விக்ரம் வேதா கொடுத்த அதே அனுபவத்தை கொடுத்ததா..?

ADVERTISEMENT

கோயம்புத்தூரை ஒட்டி உள்ள ஒரு மலை கிராமமான சாம்பலூரில் ஒரு மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் போராட்டம் நடத்துகின்றனர். இதை அந்த தொழிற்சாலையின் முதலாளி ஹரிஷ் உத்தமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் கதிர் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு தடியடி நடத்திக் கலைக்கிறார். இதையடுத்து அன்று இரவே அந்த தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. அதேநேரம் தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபனின் இளையமகள் நிலவும் அன்று இரவே காணாமல் போகிறார். கூடவே ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவும் ஒரு புறம் சிறப்பாக நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சிமெண்ட் தொழிற்சாலை எப்படி தீப்பற்றி எரிந்தது? காணாமல் போட பார்த்திபனின் மகள் என்னவானார்? இந்த மயான கொள்ளை திருவிழாவுக்கும் நடந்த இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே சூழல் தொடரின் மீதி கதை.

தமிழில் வெளியான தொடர்களிலேயே அதிக அளவு மொழிகளில் டப் செய்யப்பட்ட தொடராக வெளிவந்துள்ள இந்த சூழல் தொடரின் முதல் நான்கு எபிசோடுகளை பிரம்மாவும், அடுத்த நான்கு எபிசோடுகளை அனுசரணும் இயக்கியுள்ளனர். புஷ்கர் காயத்ரியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இத்தொடர் எபிசோடுக்கு எபிசோடு பல்வேறு திருப்புமுனைகள் கொண்டு ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்து ரசிக்க வைத்துள்ளது. தொடர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு எபிசோடும் கடக்கும் பொழுது இந்த குற்றத்தை அவர் செய்திருப்பாரோ, இல்லை இவர் செய்திருப்பாரோ, அல்லது அவர்கள் செய்திருப்பார்களோ என்று யோசிக்க வைத்து கடைசியில் யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்டை வைத்து ரசிகர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டில் பயணித்தது போன்ற ஒரு உணர்வை தந்துள்ளது இத்தொடர். சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய குற்ற செயலை கதை கருவாக எடுத்துக் கொண்டு அதை மயான கொள்ளை திருவிழாவோடு பின்னிப்பிணைந்து, அதன் வழியே கதையாடல்களை உருவாக்கி திரைக்கதை அமைத்து, கடைசிவரை யாரும் கண்டுபிடிக்காத வகையில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டு கதையோடு ஒன்ற வைத்துள்ளனர் சுழல் தொடரின் கிரியேட்டர்களான புஷ்கர் காயத்ரி. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்த தொடரில் முடிந்த அளவு எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு திரைக்கதையை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் அமைத்து மீண்டும் ஒரு வெற்றி படைப்பை கொடுத்துள்ளனர் புஷ்கர் காயத்ரி.

நிமிர்ந்த நடை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான வசன உச்சரிப்பு என 'திமிரு ' டன் திரியும் போலீஸ் அதிகாரியாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தி உள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நாம் அன்றாடம் பார்த்து பழகும் போலீஸ் அதிகாரிகளை அப்படியே எதார்த்தமாக நம் கண்முன் நிறுத்துகிறார் ஸ்ரேயா ரெட்டி. அதேசமயம் மகனை இழந்து வாடும் தாயாக நெகிழ்வான நடிப்பும், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பும் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். யூனியன் லீடராக நடித்திருக்கும் பார்த்திபன் தனக்கே உரித்தான நக்கல் நையாண்டி வசனங்களை தவிர்த்து விட்டு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் நிறைவாக செய்து மகளை இழந்து வாடும் தந்தையின் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், படத்தின் நாயகனாகவும் நடித்துள்ள கதிர் மிகவும் இயல்பான போலீசாக அலட்டல் இல்லாத நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார். எந்த ஒரு காட்சியிலும் தான் நடிப்பதே வெளியே தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இதே நடிப்பை அவர் தொடரும் பட்சத்தில் சினிமாவில் அவருக்கான வாய்ப்பு கதவு பிரகாசமாக திறந்துள்ளது.

ஸ்ரேயா ரெட்டியின் மகனாக நடித்திருக்கும் எஃப் ஜே நடிப்பில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்த்தமான நடிப்பை மிக இயல்பாக வெளிபடுத்தி கவனம் பெற்று உள்ளார். இவருக்கும் இவரது அம்மா ஸ்ரேயா ரெட்டிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி வெகுவாக கவர்ந்துள்ளது. இவருடன் இணைந்து பார்த்திபன் இளைய மகளாக நடித்துள்ள கோபிகா ரமேஷ் நன்றாக டஃப் கொடுத்து நடித்துள்ளார். கோபிகா, எஃப் ஜேவுக்குமான கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. இவர்களைப் போலவே படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். அதேபோல் திரைக்கதையிலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹரிஷ் உத்தமன், பிரேம் குமார், இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், லதா ராவ், யூசுப் உசைன், நித்திஷ் வீரா, சந்தானபாரதி ஆகியோர் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். எப்போதும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சற்று ஓவர் ஆக்டிங் செய்து நடித்துள்ளார். உணர்ச்சி பொங்கும் படியான காட்சிகளில் கண்களை பெரிதாக திறந்து அதிகமான நடிப்பை அளவில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

முகேஷ்வரனின் ஒளிப்பதிவில் மலையும் மலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், மயான கொள்ளை திருவிழா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளன. அதேபோல் சாம் சி எஸ் -ன் பின்னணி இசை காட்சிகளுக்கு காட்சி திகில் கூட்டி ரசிகர்களை இசையால் கட்டிப் போட்டுள்ளது. இவரது பின்னணி இசை இன்னொரு நாயகனாக மாறியுள்ளது. அதேபோல் அருண் வெஞ்சாரமுடுவின் கலை இயக்கமும் மிக மிக சிறப்பாக அமைந்து காட்சிகளை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு எபிசோடுகளுக்கிடையே வரும் ட்விஸ்டுகள் ரசிக்க வைத்தாலும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு புரியவைப்பதற்காக மிகவும் நீண்டு கொண்டு போய் முடியும்படி அமைந்துள்ளதால் அவைகள் ஆங்காங்கே சற்று அயர்ச்சியை கொடுப்பதை தவிர்க்கவும் முடியவில்லை. அதேபோல் சந்தானபாரதியின் கதாபாத்திரம் மேம்போக்காக அமைந்துள்ளதாலும், இரண்டு மூன்று எபிசோடுகளுக்கு பிறகு வரும் திருப்பங்களும், நீண்டு எடுக்கப்பட்ட தேவையற்ற காட்சிகளும் சுவாரஸ்யத்தை சற்று குறைத்துள்ளன. இருந்தும் படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் அதில் சொல்லப்பட்ட மெசேஜும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளதால் இத்தொடர் தவிர்க்க முடியாத ஒரு தரமான தொடராக மாறி உள்ளது.

சுழல் - தரம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT