Skip to main content

செங்களம்- விமர்சனம்

 

nn

 

மாதாமாதம் தொடர்ந்து தரமான வெப் சீரிஸுகளை கொடுத்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனம் இந்த முறை பொலிட்டிக்கல் திரில்லர் ஜானரில் செங்களம் வெப்சீரிசை வெளியிட்டுள்ளது. பொதுவாக வெப் சீரிஸ் என்றாலே மிகவும் ராவாகவும், திரில்லர் வகை, ரொமான்ஸ் வகை, ஹாரர் வகை வெப் சீரிஸ்களே அதிகம் ரிலீஸ் ஆகும் இதிலிருந்து சற்றே மாறுபட்டு பொலிடிக்கல் திரில்லர் ஜானலில் வெளியாகியிருக்கும் செங்களம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது?

 

ஒரு பக்கம் கலையரசன் மற்றும் அவரது தம்பிகள் இரண்டு கொலைகள் செய்துவிட்டு காட்டில் பதுங்கிக் கொண்டே எம்எல்ஏ, ஊர் சேர்மன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை ஒவ்வொன்றாக கொலை செய்துக் கொண்டு இருக்கின்றனர். இன்னொரு பக்கம் இவர்களை போலீஸ் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ இல்லாமல் தனி கட்சியாக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக வம்சாவழியாக சரத் கொகித்சவா குடும்பம் விருதுநகர் பகுதியில் சேர்மேனாக இருந்து வருகிறது. இந்த தலைமுறையில் இவரது மகன் பவன் சேர்மன் ஆக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டாம் தரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் பவன் இறந்து விட அந்த சேர்மன் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வாணி போஜன் முயற்சி செய்கிறார். அதற்கு உறுதுணையாக நன்கு அரசியல் அறிவு படைத்த கலையரசனின் தங்கை ஷாலி நிவேகாசை கூடவே வைத்து கொண்டு சாமர்த்தியமாக காய் நகர்த்தி சேர்மன் பதவியை பிடித்து விடுகிறார் வாணி போஜன். இதை அடுத்து இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? இதில் இருக்கும் வாரிசு அரசியலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கலையரசனின் தங்கையின் திட்டம் என்ன? என்பதே இந்த வெப் சீரிஸ் இன் நீண்ட கதையாக விரிகிறது.

 

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலனின் காதல், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ் முதல் நான்கு ஐந்து எபிசோடுகள் மிகவும் மெதுவாக நகர்ந்து பின் போகப் போக வேகம் எடுத்து ஒரு கிளிப்பிங் ஆன அரசியல் வெப் சீரிஸ் ஆக ரசிக்க வைத்துள்ளது. ஒரு முழு நீள திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைத்துள்ள இயக்குனர் அதை வெப் சீரிஸ் ஆக மாற்றுவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டிருக்கிறார். அது முதல் நான்கு ஐந்து எபிசோடுகளில் வெட்ட வெளிச்சமாக தெரிந்து அயர்ச்சியையும் கொடுத்துள்ளது. பின் வெப் சீரிஸ் கதை கருவுக்குள் அடியெடுத்து வைக்கும் கடைசி நான்கு எபிசோடுகள் மிக திரில்லிங்காகவும் தற்போது உள்ள சூழலில் நடக்கும் மாநில அரசியலை தழுவி நடக்கும் கதை களம் ஆகியவை மிக க்ரிப்பிங் ஆக அமைந்து காட்சிகளுக்கு வலு சேர்த்து ரசிக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் தற்போது உள்ள சூழலில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கி அதை விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் அரசியலாக காண்பித்து சில பல நிஜ நிகழ்வுகளை உல்டா செய்து அதை வெப் சீரிஸ் ஆக கன்வெர்ட் செய்து கவனம் பெற்று இருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன். பயிற்சியை கொடுக்கும் முதல் நான்கு ஐந்து எபிசோடுகளின் நீளத்தை இன்னும் கூட குறைத்து இருக்கலாம்.

 

கலையரசன் அவரது தம்பிகள் டேனியல் அண்ணி போப், லகுபரன் ஆகியோர் எதார்த்தமாகவும் காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை நிறைவாகவும் கொடுத்திருக்கின்றனர். இவர்களது அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் தனது அனுதாபமான நடிப்பால் பார்ப்பவர்களை கலங்க செய்துள்ளார். இவர்களுடன் இணைந்து படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவைகளில் அரசியல் பெரும்புள்ளிகளாக வரும் சரத் லோகித்சவா, பவன், வேல ராமமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் குறிப்பிடும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். அதேபோல் வாணி போஜன் கலையரசனின் தங்கை ஷாலி நிவேகாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் திரில்லிங்காகவும் அதேசமயம் சாமர்த்தியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவையே படத்திற்கு மிகப்பெரிய ஜீவனாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஷாலினி நிவேக்காஸின் திருப்பம் நிறைந்த காட்சிகள் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களுடன் இணைந்து போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜய், அரசியல் வாரிசுகளாக வரும் பிரேம்குமார், பூஜா வைத்தியநாத் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

 

தருண் குமார் இசையில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் காடு சம்பந்தப்பட்ட காட்சிகளும், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு முழு நீள திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு அதை ஒரு வெப் சீரிஸ் ஆக மாற்றும் போது அதில் இருக்கும் சவால்களை மிகவும் சிறப்பாக கையாண்டு அதற்கேற்றால் போல் திரைக்கதை அமைக்கும் பட்சத்தில் அந்த வெப் சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். ஆனால் இந்த வெப்சீரிஸ் சோ இந்த விஷயத்தில் சற்றே தடுமாறி பல இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்ந்து அயர்ச்சி கொடுத்தாலும் கடைசி கட்ட மூன்று, நான்கு எபிசோடுகள் சிறப்பாக அமைந்து இந்த செங்களத்தை கரை சேர்த்திருக்கிறது.

 

செங்களம் - அரசியல் சடுகுடு