ADVERTISEMENT

பேய் படமா? காமெடி படமா? 'சூ மந்திரகாளி' விமர்சனம்  

03:01 PM Sep 24, 2021 | santhosh

ADVERTISEMENT

'சூ மந்திரகாளி' என்று சொன்ன உடனேயே எதோ மந்திர மாந்திரீகம் நிறைந்த பயங்கரமான பேய் படமோ என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த படத்திலோ மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தாலும் அதையும் தாண்டி சமூகத்துக்கு அவசியமான மெஸேஜ் ஒன்று இருக்கிறது. அப்படி என்ன மெசேஜ்..?

ADVERTISEMENT

பங்காளியூர் என்ற கிராமம் முழுவதும் வெறும் பங்காளிகளே வாழ்கிறார்கள். அந்த ஊரில் யாருக்குமே மாமா, மாப்பிள்ளை, முறைப்பெண் என எந்த சொந்தமும் இல்லாததால் ஒருவருக்கொருவர் பொறாமை, பகையுடன் வாழ்கின்றனர். யாருக்கு எந்த நல்லது நடந்தாலும் அதை கெடுகின்றனர். யாருக்கு எந்த கெட்டது நடந்தாலும் அதை கொண்டாடுகின்றனர். இப்படி இருக்கும் சொந்த பந்தத்தை திருத்த நாயகன் கார்த்திகேயன் வேலு பில்லி சூனியத்தை நாடுகிறார். இதற்காக பக்கத்தில் இருக்கும் மலை கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு மந்திரவாதியாக இருக்கும் நாயகி சஞ்சனா பர்லியை சந்திக்கிறார். அவர் மீது காதல் கொள்கிறார். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு, தன் ஊருக்கு கூட்டி சென்று அவரது மந்திர மாயாஜாலம் மூலம் தன் ஊர் மக்களை திருத்த திட்டம் தீட்டுகிறார். நாயகனின் இந்த திட்டம் நிறைவேறி திருமணம் நடந்ததா? பங்காளியூர் மக்கள் திருந்தினார்களா? என்பதே கலகலப்பான 'சூ மந்திரகாளி' படத்தின் மீதி கதை!

ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பொறாமை என்பது எந்த அளவு ஆபத்தாக மாறுகிறது என்பதை மிகவும் ஜனரஞ்சகமாகவும், கலகலப்பாகவும் அதேசமயம் அயர்ச்சி ஏற்படாதவாறு ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை. 'சூ மந்திரகாளி' என்ற தலைப்பை கேட்டவுடன் திகில் படம் போன்ற உணர்வை இப்படம் தந்தாலும், படம் பார்க்கும்போது அந்த உணர்வு முற்றிலுமாக மறைந்து முழுக்க முழுக்க காமெடி கலந்த சட்டையர் படமாக அமைந்து சிந்திக்கவும், வாய் விட்டு சிரிக்கவும் வைத்துள்ளது. ஒரு சின்ன பட்ஜெட்டில் அதுவும், முற்றிலுமாக புதுமுகங்களை வைத்து இந்த அளவு அயர்ச்சி இல்லாமல் படத்தை எடுத்து ரசிக்கவைத்ததற்கே இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் நாயகன், நாயகி புதுமுகங்களாக இருந்தாலும் நடிப்பில் அவர்கள் தேர்ந்த நடிகர்கள் போல் நடித்துள்ளனர். குறிப்பாக பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நடிகர் கிஷோர் தேவ் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களுக்கே உண்டான நளினத்தை உடலசைவு மூலம் அழகாக வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இரண்டு ஊர் மக்களும் நடிப்பில் புதுமுகம் என்ற உணர்வை தர மறுகின்றனர். இவர்களது டைமிங் வசனங்களும், ரைமிங் காமெடிகளும் முன்னணி காமெடி நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளுக்கு இணையாக சிரிப்பு மூட்டியுள்ளன. அந்த அளவு ப்ரொபெஷனல் ஆக்டிங்கில் கலக்கியுள்ளனர்.

நவிப் முருகனின் பின்னணி இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஜெ.கே ஆண்டனியின் கலையும், முகமது பர்ஹான் கேமராவும் காட்சிகளை அழகாக மாற்றியுள்ளன.

சொந்தபந்தங்களுக்கு இடையேயான பொறாமை, அது மற்றொருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என ஒரு சீரியஸான மெசேஜ் கொண்ட கதையை காமெடியாகவும், ஜனரஞ்சமாகவும், அதேசமயம் சிந்திக்கவைக்கும்படி கூறியுள்ள 'சூ மந்திரகாளி' படத்தை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக குடும்பத்துடன் ரசிக்கலாம்.

'சூ மந்திரகாளி' - இது மந்திரம் இல்லை! மெசேஜ்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT