Skip to main content

தமிழகத்தில் 'தூத்துக்குடி' நிகழ்ந்தது, 'போபாலு'ம் நிகழ்ந்தால்? உறியடி 2 - விமர்சனம்

Published on 03/04/2019 | Edited on 12/04/2019

வெளிவந்தபோது பல காரணங்களால் கவனிக்கப்படாமல் போய், பிறகு இணையத்தில் கொண்டாடப்படும் அன்பே சிவம் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் போன்ற படங்களின் வரிசையில் உள்ள படம் 'உறியடி'. சினிமாவுக்கென எந்த கூடுதல் அழகும் சேர்க்கப்படாத அதன் கச்சாத்தன்மையும், புதிய கதைக்களம், அதிரடியான, நம்பகத்தன்மை வாய்ந்த திரைக்கதையும் 'உறியடி'யின் பலம். 'உறியடி'க்குக் கிடைக்காத நல்ல தயாரிப்பு நிறுவனம், விளம்பரம், பட்ஜெட் என அத்தனையுடனும் வெளிவந்திருக்கும் 'உறியடி 2'வில் உறியடியின் வீச்சும் தாக்கமும் இருக்கிறதா?

 

uriyadi 2



சாதி மறுப்பு திருமணம் செய்த சமூக சீர்திருத்த மனம் கொண்ட தந்தையின் மகன் 'லெனின் விஜய்'யாக விஜயகுமார். என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுடன் தனது ஊருக்கு அருகிலேயே செங்கதிர்மலையில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு நடக்கும் விஷவாயுக் கசிவு விபத்தில் தனது இரு நண்பர்களில் ஒருவர் உயிரிழக்க, விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்கிறார் விஜய். தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென்று தெரிகிறது. அதே நேரம் தொழிற்சாலை பிரச்சனையில் உள்ளூர் சாதிக் கட்சி நுழைந்து அனுகூலமடைகிறது. மாநிலத்தை ஆளும் கட்சியும் அந்தக் கூட்டணியில்  கைகோர்க்கிறது. பெரும் முதலாளிகளின் லாபவெறிக்கு மக்களின் உயிரை பந்தி வைக்கும் அரசியல்வாதிகளை மக்களுடன் இணைந்து நாயகன் விஜய் குமார் எப்படி திருப்பியடிக்கிறார் என்பதே இந்த உறியடி 2.

 

uriyadi 2 heroine



ஒரு தொழிற்சாலை இயங்கும் முறையை, அதில் தொடர்புடைய வாயுக்கள் உள்பட தெளிவாகக் குறிப்பிட்டு இதுவரை அதிக திரைப்படங்கள் சொன்னதில்லை. படத்தின் தொடக்கக் காட்சிகள் 'செங்கதிர்மலை' ஊர் மேல் நமக்கே ஒரு பரிவு ஏற்படுத்தும் வண்ணம் பாத்திரங்களை நமக்கு நன்கு அறிமுகம் செய்கின்றன. விஷவாயுக்கசிவு நிகழ்வதை படிப்படியாகப் பதற்றம் ஏற்றிக்காட்டும் இடைவேளைக்கு முந்தைய காட்சியும், விஷவாயுக் கசிவு ஏற்படுத்தும் துயரங்களைக் காட்டும் காட்சிகளும் முழு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சாதி அரசியலின் அசிங்கமான முகத்தை இந்த பாகத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் விஜய். "இந்த சாதியில் பிறந்தாலே நாங்க உங்களுக்கு சொந்தம்னு எதுவும் எழுதியிருக்கா?" போன்ற வசனங்கள் கூர்மையாகப் பேசுகின்றன. ஒரு பாதி போபால் விஷவாயு பேரழிவையும் ஒரு பாதி தூத்துக்குடியையும் நினைவுபடுத்துகின்றன. படம் முழுவதும் நிறைந்திருக்கும் சமூக அக்கறைக்கு விஜய்குமாரையும் இப்படி ஒரு படத்தை தயாரித்தளித்திருக்கும் நடிகர் சூர்யாவையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அதே சமூக அக்கறையும் அரசியலும் படத்தில் பேச்சாக, வசனங்களாக நீண்டுகொண்டே போகின்றன. விஷவாயுக் கசிவின் தாக்கத்தைக் காட்டும் காட்சிகளும் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம்.

 

uriyadi  villains



லெனின் விஜய்யாக விஜய் குமார், இன்னும் தெளிவாக இன்னும் பொலிவாக இன்னும் நன்றாக நடித்திருக்கிறார். 'டா' போடும் போலீசை உடனே 'டா' போடும் இடத்திலும் க்ளைமாக்சில் 'தத்தகிட தத்தகிட தித்தோம்' நிகழ்த்தும்போதும் முழு நாயகனாக ஈர்க்கிறார். வெகுளி+காமெடி நண்பராக 'பரிதாபங்கள்' சுதாகருக்கு தமிழ் சினிமாவில் இதுதான் ஒரு நல்ல தொடக்கம். நன்றாகவும் நடிக்கிறார். இவர்களைத் தவிர்த்து, நாயகி விஸ்மயா உள்பட பெரும்பாலானவர்கள் புதிய முகங்கள் அல்லது பிரபலமாகாத முகங்கள். இதுவே பாத்திரங்களை இயல்பாக்குகிறது. முக்கியமாக தொழிலதிபர் துரை, சாதிக்கட்சித் தலைவர் சங்கர் இருவரும் நல்ல நடிப்பால் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள். நாயகி விஸ்மயாவுக்கு காதலையும் தாண்டிய கதாபாத்திரம். அதைப் பயன்படுத்தி நல்ல நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

'96'இல் காதலால் கசிந்துருக வைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, 'உறியடி'யில் புரட்சியையும் ரௌத்திரத்தையும் கடத்த முயன்றிருக்கிறார். 'உறியடி' முதல் பாகத்தின் 'தத்தகிட தத்தகிட தித்தோம்' பின்னணி இசைதான் படத்தையும் நம் மனதையும் ஆக்கிரமிக்கிறது. 'வா வா பெண்ணே' பாடல் மென்மை. இதுதான் கோவிந்தின் ஸ்டைல், பலம் போல... பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு தொழிற்சாலையை அமானுஷ்யமாகவும், செங்கதிர்மலை கிராமத்தை யதார்த்தமாகவும் படமாக்கியுள்ளது. லினுவின் படத்தொகுப்பு, சிறப்பு.

தொழில்நுட்ப ரீதியில் உறியடியை விட உறியடி 2 மேம்பட்டு இருந்தாலும் குறி வைத்து தெறிக்க அடிப்பதில் முதல் பாகம் அளவுக்கு இல்லை.  உறியடி... குடிமக்களின் உயிரை எளிதாகக் கருதும் அரசியல்வாதிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் விழும் அடி, இன்னும் கொஞ்சம் ஓங்கி, குறிவைத்து அடித்திருக்கலாம்.         

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.