ADVERTISEMENT

நெருக்கடியில் சிக்கிய பாலச்சந்தர்... நெகிழ வைத்த ரஜினி!

04:36 PM May 05, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

"வாழ்க்கையில் நன்றி என்பது மிகமுக்கியம். நமக்கு வாழ்க்கை கொடுத்தவர்கள், நம்மை வாழ்க்கையில் உயர்த்திவிட்டவர்கள், உன்னதமான இடத்திற்குச் சென்று நாம் ஒளிவீசக் காரணமாக இருந்தவர்களை வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் மறக்கக்கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வாறு நன்றி மறக்காமல் நடந்துகொண்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.

'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலமாக கே.பாலச்சந்தர் சார் நடிகர் ரஜினிகாந்தை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தில், ரஜினிகாந்திற்கு அருமையான கதாபாத்திரத்தை பாலச்சந்தர் சார் கொடுத்திருப்பார். அந்தப்படம் வெளியான பிறகு ஒரே இரவில் நடிகர் ரஜினிகாந்த் பிரபலமானார். நடிகர் ரஜினிகாந்தின் கலைவாழ்க்கை பயணத்தில் எந்த அளவிற்கு ஒளியேற்றும் விளக்காக பாலசந்தர் சார் இருந்தார் என்பதற்கு 'மூன்று முடிச்சு', 'தப்பு தாளங்கள்', 'நினைத்தாலே இனிக்கும்' எனப் பல படங்களை உதாரணமாகக் கூறலாம். அதன் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நிறைய படங்களில் நடித்தது, புகழ் பெற்றது, சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் உன்னதமான இடத்தில் அமர்ந்தது என அனைத்தும் நாமறிந்ததே.

முதலில் வேறுநிறுவனங்களுக்கு படம் இயக்கிவந்த கே.பாலச்சந்தர், ஒரு கட்டத்திற்குப் பிறகு கவிதாலயா எனச் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். கவிதாலயா தயாரிப்பிலும் 'ராகவேந்திரா', 'நெற்றிக்கண்' எனப் பல படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தால் காமெடியிலும் கொடிகட்டிப்பறக்க முடியும் என்பது கே.பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' திரைப்படம் மூலம் நிரூபணமானது. அப்படம்தான் ரஜினிகாந்தின் வேறொரு பக்கத்தை மக்களிடம் காட்டியது.

'மணல் கயிறு' படத்தின் மூலம் தன்னுடைய தயாரிப்பைத் தொடங்கிய கவிதாலயா நிறுவனம் பல படங்களைத் தயாரித்ததன் மூலம் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் தமிழ்த் திரையுலகில் வலம்வந்தது. அந்தச் சமயத்தில், நடிகர் பிரபுவை வைத்து 'டூயட்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்க கே.பாலச்சந்தர் திட்டமிட்டார். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்தக் காலகட்டத்தில், படம் ஆரம்பிக்கும்போதே பாதி பணம் கொடுத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிவிடுவார்கள். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசிற்குத் தயாராகும்போது மீதி பணத்தைக் கொடுத்து பிரிண்ட் காப்பியை வாங்கிக்கொள்வார்கள்.

பட வேலைகள் முடிந்தபின் விநியோகஸ்தர்களுக்கு டூயட் படத்தைக் கே.பாலச்சந்தர் திரையிட்டுக் காண்பிக்கிறார். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாது என்ற முடிவிற்கு வருகின்றனர். ஆகையால், முதலில் பேசிய முழுத்தொகையை தங்களால் தர முடியாது; அட்வான்ஸ் கொடுத்த தொகையை முழுப்பணமாக எடுத்துக்கொண்டு படத்தை எங்களுக்கு தரவேண்டும் என விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒருசேர இணைந்து கேட்கின்றனர். பாலச்சந்தர் எவ்வளவோ பேசியும் விநியோகஸ்தர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

டூயட் படம் வெளியாகிறது; மிகப்பெரிய தோல்வி. எதிர்கொள்ள முடியாத அளவிற்கு மிகப்பெரிய இழப்பை அந்தப்படம் கவிதாலயா நிறுவனத்திற்குக் கொடுத்தது. இழுத்துமூடும் அளவிற்குக் கடுமையான பொருளாதார இழப்பை கவிதாலயா எதிர்கொண்டது. அப்போது ரஜினியை சந்தித்த கே.பாலச்சந்தர், கவிதாலயா நிறுவனத்தின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். மேலும், 'நீ மனசு வச்சாமட்டும்தான் விழுந்து கிடக்குற கவிதாலயா எழுந்து நிற்க முடியும்' எனக் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில், வெங்கடராம ரெட்டி தயாரிப்பில் உருவான 'உழைப்பாளி' திரைப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய அடுத்த படத்திற்கான கால்ஷீட்டையும் வெங்கடராம ரெட்டிக்கே ரஜினிகாந்த் கொடுத்திருந்தார். தன்னை உருவாக்கிய மனிதன், தனக்குப் பிள்ளையார் சுழி போட்ட மனிதன், தன்னை ஒளிவீச வைத்த உத்தமர் வந்து கேட்ட ஒரே காரணத்திற்காகத் தன்னுடைய அடுத்த படக் கால்ஷீட்டை பாலச்சந்தர் சாருக்கு ரஜினிகாந்த் வழங்கினார். அந்த கால்ஷீட்டில் உருவான திரைப்படம்தான் 'முத்து'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அந்தத் திரைப்படம் 100 நாட்களுக்கு மேலாக ஓடி வெற்றிபெற்றது. இழுத்துமூடும் நிலையில் இருந்த கவிதாலயா நிறுவனம் ரஜினி கைகொடுத்ததால் அந்தச் சரிவில் இருந்து மீண்டு, தொடர்ந்து செயல்பட்டது".

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT