ADVERTISEMENT

இசை - இளையராஜா; பின்னணி இசை - தேவா... 90களில் வெடித்த ஆடியோ ரைட்ஸ் சர்ச்சை!

05:59 PM Jul 29, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இளையராஜா இசையமைத்த படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தார். பின்னணி இசையில் இளையராஜா மன்னன். பின்னணி இசையமைப்பதில் இளையராஜாவை யாரும் நெருங்கக்கூட முடியாது. அப்படி இருக்கையில், இளையராஜா படத்திற்குத் தேவா எப்படி பின்னணி இசையமைத்தார். இளையராஜா அதற்கு எப்படிச் சம்மதித்தார்? இளையராஜா படத்தில் தேவா பிண்ணனி இசையமைத்தார் என்பது இந்தத் தலைமுறையினருக்குக் கேட்க நம்பமுடியாததாகத் தெரியலாம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான 'கட்டுமரக்காரன்' படத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஏ.ஜி.சுப்ரமணியம்தான் அந்தப்படத்தைத் தயாரித்தார். வாழப்பாடி ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார் போன்ற முக்கிய பிரமுகர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் ஏ.ஜி.சுப்ரமணியம். காமராஜரையும் நன்கறிந்தவர். 'கட்டுமரக்காரன்' படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளர். நான் மக்கள் தொடர்பு அதிகாரி. 'கட்டுமரக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. பி.வாசு - பிரபு கூட்டணியில் உருவான சின்ன தம்பி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் பி.வாசு - பிரபு கூட்டணி குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. 'கட்டுமரக்காரன்' படத்தின் பூஜை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தபோது ஒட்டுமொத்த திரையுலகமுமே அங்கு வந்திருந்தது.

பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. பாடல் பதிவு உள்ளிட்ட எல்லா வேலைகளும் சுமூகமாக நடந்தன. இளையராஜா இசையமைக்கக்கூடிய படங்களின் ஆடியோ ரைட்ஸ் எக்கோ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்படும். இது இளையராஜாவின் நண்பர் கம்பெனி. ஆனால், இதனுடைய ஓனர் இளையராஜாதான் என்பார்கள். பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்தால் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படும். அதுபோக பாடல் பதிவுக்கான செலவு உள்ளிட்டவற்றிற்குப் பணம் வழங்கப்படும். ஆனால், இளையராஜா ஆரம்பகாலத்திலிருந்தே பாடலின் உரிமையையும் வாங்கிக்கொள்வார். படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் போடும்போது இதற்கான ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்வார். ஒரு கட்டத்தில் எக்கோ கம்பெனியோடு சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது இழுத்து மூடப்பட்டது. பின்பு, ராஜா கேசட் என்ற நிறுவனத்தின் மூலம் பாடல் உரிமையை இளையாராஜா வாங்கிவந்தார். தமிழ்நாடு ரைட்ஸ், வெளிநாடு ரைட்ஸ் என இரு வகை உண்டு. இதில், தமிழ்நாடு ரைட்ஸை மட்டும் இளையராஜா பெற்றுக்கொள்வார். ஓவர்சீஸ் ரைட்ஸை பிற நிறுவனங்கள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்வார்கள். அந்த ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் 50 சதவிகிதம் இளையராவிற்கும் 50 சதவிகிதம் தயாரிப்பாளருக்கும் பங்கு உண்டு. எல்லா நிறுவனங்களும் அப்படித்தான் வழங்கிக்கொண்டு இருந்தனர். இது தொடர்பான பிரச்சனை முதல்முறையாக 'கட்டுமரக்கார'னில் வெடித்தது.

அந்த ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் 50 சதவிகிதத்தை இளையராஜாவிற்கு வழங்க தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம் தயாராக இல்லை. நாம் ஏன் கொடுக்கவேண்டும் என நினைத்தார். இளையராஜா கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்தால்தான் பாடலைத் தருவோம் என ஏ.வி.எம்மில் கூறிவிட்டனர். அவர்கள் பாடல் கொடுத்தால்தான் கேசட் பதிந்து விற்பனை செய்யமுடியும். உடனே, ஏ.ஜி.சுப்ரமணியம் வேறொரு படத்தின் பாடல் பதிவில் இருந்த இளையராவை நேரில் சென்று சந்தித்தார். தனக்கு 50 சதவிகிதம் ஷேர் கொடுத்தால் கடிதம் தருவதாக இளையராஜா கூற, கொடிகட்டிப்பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்கூட இதெல்லாம் கேட்டதில்லையே என ஏ.ஜி.சுப்ரமணியம் கூறுகிறார். மேலும், தமிழ்நாடு ரைட்ஸ் உங்களுக்கு தருகிறேனே... பிறகு எதற்கு ஓவர்சீஸ் ரைட்ஸ் தரவேண்டும் என ஏ.ஜி.சுப்ரமணியம் கேட்க, எல்லா தயாரிப்பாளரும் கொடுக்கும்போது நீங்கள்மட்டும் எப்படித் தரமுடியாது எனக் கூறலாம் என இளையராஜா கூறுகிறார். இந்த வாக்குவாதம் அப்படியே நடந்துகொண்டிருக்க, ஒருகட்டத்தில் கடுப்பான இளையராஜா அங்கிருந்து நகர்கிறார். அவரைப் பின்தொடர்ந்த ஏ.ஜி.சுப்ரமணியம், 'பேசிக்கிட்டு இருக்கும்போது எப்படி நீங்க போகலாம்' என குறுக்கே கைநீட்டி அவரைத் தடுத்தார். அப்படியிருந்தும் இளையராஜா கடிதம் கொடுக்கவில்லை.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஏ.ஜி.சுப்ரமணியம் இளையராஜாவை சந்திக்கச் செல்கிறார். அப்போது வாலியும் இளையராஜாவும் ஒரு படத்திற்காக பாடல் பதிவு வேலையில் இருந்தனர். இளையராஜாவிடம் அனுமதி கேட்காமல் அவர் இருந்த அறைக்குள் ஏ.ஜி.சுப்ரமணியம் சென்றுவிடுகிறார். கடுப்பான இளையராஜா, 'நீங்க இந்த விஷயத்தை பெரிய பிரச்சனை ஆக்குறீங்க... ரெண்டு மாசம் கழிச்சு எங்கிட்டதான் ரீரெக்கார்டிங்க்கு வரணும்' எனக் கூறுகிறார். அதற்கு, 'ரெண்டு மாசம் கழித்து நடப்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்... இப்ப நடக்குறத பத்தி பேசுங்க சார்' என்கிறார் ஏ.ஜி.சுப்ரமணியம். இந்த விவகாரம் பெரிதாக ஆரம்பித்தவுடன் ஏ.வி.எம் பாடல்களைக் கொடுத்துவிடுகின்றனர். இதற்கு மேலும் இந்த பிரச்சனையை வளர்த்தால் விருப்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என நினைத்து அனைவருமே இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுகின்றனர். ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் ஒரு ரூபாய்கூட இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் தரவில்லை.

பின், பிண்ணனி இசை என்று வரும்போது தேவாவை இசையமைக்க வைத்தனர். இளையராஜாபோல யாரும் பிண்ணனி இசை அமைக்கமுடியாது என்பது ஏ.ஜி.சுப்ரமணியத்திற்குத் தெரிந்தாலும் சந்தர்ப்பச் சூழல் காரணமாக தேவாவை இசையமைக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்ப்பாராத சூழல் காரணமாகத்தான் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏ.ஜி.சுப்ரமணியத்தோடு இணைந்து இரண்டு படங்களில் இளையராஜா முன்னர் பணியாற்றியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் திரையுலகில் நடைபெறும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இந்த ஏ.ஜி.சுப்ரமணியம் - இளையராஜா விவகாரம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT