ADVERTISEMENT

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 2-வது படத்தின் பின்னணி இசையில் படக்குழு செய்த தில்லுமுல்லு!

06:34 PM Jun 24, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'புதிய முகம்' திரைப்பட வெளியீட்டின்போது நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

பல நேரங்களில் நாம் எதிர்பாராத சம்பவங்கள் திரையுலகில் நடைபெறும். சில சமயம் அது சுவாரசியமான சம்பவமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். 'புதிய முகம்' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்தப்படத்தை நடிகை ரேவதியும் அவரது கணவரும் இணைந்து தயாரித்திருந்தனர். ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் அந்தப்படத்தை இயக்கினார். ரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இது ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டாவது படம். இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நேற்று இல்லாத மாற்றம்...', 'கண்ணுக்கு மையழகு...' ஆகிய பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமைந்தன. இந்தப்படத்திற்கு நான்தான் மக்கள் தொடர்பாளர். இலங்கை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப்படத்திற்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் படத்தின் இயக்குநர் சுரேஷ் மேனனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஆரம்பகாலங்களில் சுரேஷ் மேனன் இயக்கிய விளம்பரப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். சுரேஷ் மேனன் அவரை திலீப் என்றுதான் அழைப்பார்.

'புதிய முகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து எல்லா ஏரியாக்களும் பிசினஸ் செய்யப்பட்டுவிட்டது. ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர் சொந்த ஸ்டூடியோவில் வைத்து படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இரு வாரங்களில் ரீரெக்கார்டிங் வேலைகளை முடித்துவிடுவேன் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார். ஆகையால், இரு வாரங்கள் கழித்து சுரேஷ் மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்குச் செல்கிறார். மொத்தம் 15 ரீல்களில் 4 ரீல்கள் மட்டுமே ரீரெக்கார்டிங் செய்யப்பட்டு இருந்தன. ரீரெக்கார்டிங் முடித்து சென்சார் சான்றிதழும் வாங்கவேண்டும். ரிலீசுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் சுரேஷ் மேனன் பதட்டமாகிவிடுகிறார். உடனே, இயக்குநருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபுறம் ரீரெக்கார்டிங் செய்யட்டும். நாம் இன்னொரு ஸ்டூடியோவில் சிடி கேசட் வைத்து ரீரெக்கார்டிங் செய்வோம் என முடிவெடுத்து ஒரு ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் ரீரெக்கார்டிங் செய்கின்றனர். ரீரெக்கார்டிங் முடித்து சென்சார் சான்றிதழும் வாங்கிவிடுகின்றனர். பின்பு, அங்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான், எந்த இடத்தில் அவசியம் பிண்ணனி இசை தேவைப்படுகிறதோ அந்த இடத்திற்கு மட்டும் இசையமைத்தார். திட்டமிட்டபடி பட ரிலீஸ் தேதிக்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

தமிழ் சினிமா வியாபாரத்தில் திருநெல்வேலி - கன்னியாகுமரியைச் சேர்த்து டி.கே. என்பார்கள். அதுதான் இருப்பதிலேயே தூரமான இடம் என்பதால் அங்குதான் முன்கூட்டியே பிரிண்ட் அனுப்பிவைப்பார்கள். இரவு சென்னையில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்தில்தான் கொண்டுசென்று கொடுப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைக்காத அந்த பிரிண்ட் திருநெல்வேலி, கன்னியாகுமரிக்குத்தான் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு, வெளிநாடு எனத் திரையிட்ட அத்தனை இடங்களிலும் படம் மாபெரும் வெற்றிபெற்றது. அனைத்து இடங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையோடு 'புதிய முகம்' திரைப்படம் திரையிடுகையில், திருநெல்வேலி - கன்னியாகுமரியில் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை இல்லாமல் 'புதிய முகம்' திரைப்படம் வெளியானது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT