ADVERTISEMENT

‘காதல் கோட்டை’ படத்திற்கு தேவயானியை தேர்வு செய்தது எப்படி? பத்திரிகையாளர் சுரா பகிரும் சுவாரசிய தகவல்!

12:53 PM Aug 05, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகை தேவயானி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தவர் நடிகை தேவயானி. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து, குடும்பப் பெண்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர். தமிழ் சினிமாவில் தேவயானி எப்படி அறிமுகமானார், எப்படி உயர்வு பெற்றார் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. தேவயானியின் வளர்ச்சியில் என்னுடைய சிறிய பங்கும் உள்ளது.

தேவயானி தமிழில் நடித்த முதல் படம் ‘தொட்டாசிணுங்கி’. கே.எஸ். அதியமான் இயக்கிய அந்தப் படத்திற்கு நான் மக்கள் தொடர்பு அதிகாரி. ரகுவரன், கார்த்தி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்த அந்தப் படத்தில் ரகுவரனின் தங்கையாக தேவயானி நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் புதுமுகம் யாரையாவது நடிக்க வைக்கலாம் எனப் படக்குழு யோசித்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் முன்னணி தயாரிப்பாளராக இருந்தார். அவர் கம்பெனி படங்களில் நக்மா மாதிரியான பாம்பே நடிகைகள் நடித்துவந்ததால் அவரிடம் பாம்பேவைச் சேர்ந்த ஏதாவது நடிகைகள் புகைப்படம் இருக்கிறதா எனக் கேட்டு, அவர் அலுவலகத்திற்கு ‘தொட்டாசிணுங்கி’ படக்குழுவினர் சென்றனர். அங்கு நிறைய புகைப்படங்கள் இருந்தன. அதில் ஒன்றொன்றாக எடுத்துப் பார்க்கையில் தேவயானி புகைப்படமும் இருந்தது. புகைப்படத்தில் பார்க்க நன்றாக இருக்கிறது. நேரில் எப்படி இருக்கிறார் எனப் பார்க்க அவரை நேரில் வரவழைக்க முடிவெடுத்தனர். சில பாம்பே நாயகிகள் புகைப்படத்தில் பார்க்க நன்றாக இருப்பார்கள். நேரில் பார்க்கும்போது வேறு மாதிரியாக இருப்பார்கள். அந்தப் புகைப்படத்தின் பின்னால் இருந்த முகவரியில் தொடர்புகொண்டு சென்னை வருவதற்காக தேவயானிக்கு விமான டிக்கெட் புக் செய்கின்றனர்.

நேரில் வந்த தேவயானியைப் படக்குழுவிற்குப் பிடித்திருந்தது. பின், அவரையே படத்தில் நடிக்கவைத்தனர். பிற்காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ‘தொட்டாசிணுங்கி’ படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருப்பார். படம் வெளியானபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சில நாட்கள் கழித்து சிவசக்தி பாண்டியன் அலுவலகத்திலிருந்து தயாரிப்பு நிர்வாகி முத் அம் சிவகுமார் என்னைத் தொடர்புகொண்டார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். பத்திரிகையில் தேவயானி புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு ஃபோன் செய்திருந்தார். ‘காதல் கோட்டை’ என்று அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க இயக்குநர் அகத்தியன் திட்டமிட்டிருப்பதாகவும் தேவயானியை இப்படத்தில் நடிக்க வைக்கும் யோசனையில் அவர் இருப்பதாகவும் கூறினார். அதனால் தேவயானியின் தொடர்பு எண் தர முடியுமா என்று கேட்டார். நான் இயக்குநர் கே.எஸ். அதியமானிடம் வாங்கித் தருவதாகக் கூறினேன். அதியமானிடம் நம்பர் வாங்கி அன்றே அவருக்குக் கொடுத்தேன். ‘காதல் கோட்டை’ குழுவினர் தேவயானியை தொடர்புகொண்டு அவரிடம் பேசியுள்ளனர்.

ஒருவாரம் கழிந்த பிறகு, முத் அம் சிவகுமாருக்கு ஃபோன் செய்து, தேவயானியை ஓகே செய்துவிட்டீர்களா எனக் கேட்டேன். தேவயானி கதைக்குப் பொருத்தமானவராக இருப்பதால் அவரையே ஓகே செய்யும் யோசனையில் இருப்பதாக முத் அம் சிவகுமார் கூறினார். அதே நேரத்தில், இன்னும் ஒருவார காலத்திற்குள் வேறு ஏதாவது சிறந்த நடிகை கிடைத்தால் அவரை ஓகே செய்யும் யோசனையில் இருப்பதாகவும் கூறினார். தேவயானியைவிட சிறந்த நடிகை கிடைக்காத காரணத்தால் அவரையே நடிக்கவைத்துவிட்டனர். ‘காதல் கோட்டை’ திரைப்படம் வெளியானபோது படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தேவயானியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக ‘காதல் கோட்டை’ திரைப்படம் இருந்தது. அஜித் திரை வாழ்க்கையிலும்கூட ‘காதல் கோட்டை’ முக்கியமான திரைப்படம். ‘காதல் கோட்டை’ படக்குழுவினருக்கு நான்தான் தேவயானி ஃபோன் நம்பர் கொடுத்தேன் என்ற விஷயம் தேவயானிக்கே தெரியாது. அன்று தேவயானியைவிட சிறந்த நடிகை கிடைத்திருந்தால் வேறு யாரையாவது நடிக்க வைத்திருப்பார்கள். ஆனால், கிடைக்கவில்லை. அந்தப் படத்தின் மூலம் தேவயானி மிகப்பெரிய நடிகையாக உயர வேண்டும், கணவன், குழந்தைகள் என தன்னுடைய குடும்ப வாழ்க்கையையே தமிழ்நாட்டில்தான் அவர் வாழ வேண்டும் என்பது கடவுளால் எழுதப்பட்ட விதி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT