/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_14.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?
அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது.
நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும்ஆரம்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத்தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)