ADVERTISEMENT

ஐந்து படங்கள் தொடர் தோல்வி... விஜயகாந்த் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய எஸ்.ஏ.சி !

06:17 PM Jul 26, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் விஜயகாந்த் குறித்தும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

திரைத்துறையில் இன்று சாதித்துள்ள கதாநாயகர்களில் 90 சதவிகித கதாநாயகர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே சாதித்துள்ளனர். அந்த 90 சதவிகித நாயகர்களில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்தும் ஒருவர். 'இனிக்கும் இளமை' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான விஜயகாந்த், அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. பெரிய அளவிலான வெற்றியைப் பெறமுடியாமல் தவித்துவந்த விஜயகாந்துக்கு 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நூறு நாட்கள் ஓடிய அந்தத் திரைப்படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் 'நெஞ்சிலே துணிவிருந்தால்' படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் தோல்விப்படமாக அமையவில்லை. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த 'நீதி பிழைத்தது', 'சாதிக்கொரு நீதி', 'சட்டம் சிரிக்கிறது', 'ஆட்டோ ராஜா', 'பட்டணத்து ராஜாக்கள்' என வரிசையாக 5 படங்கள் தோல்வியைத் தழுவின. ஐந்து தோல்வி படங்கள் கொடுத்தால் ஒரு நடிகனின் திரை வாழ்க்கை என்னவாகும்? எத்தனை காலத்திற்குத்தான் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கமுடியும்? மார்க்கெட் சரிந்து படவாய்ப்புகள் இல்லாத நிலைக்கு விஜயகாந்த் சென்றுவிட்டார். விஜயகாந்த் எப்படிச் சரிவைச் சந்தித்தாரோ, அதுபோன்ற சரிவை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்தார். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய எந்த படங்களும் வெற்றிபெறவில்லை.

பி.எஸ்.வீரப்பா தன்னுடைய கம்பெனி தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரை வைத்துப் படமெடுக்க முடிவெடுக்கிறார். அப்படத்தில் யாரை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் யோசித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த 'கோழி கூவுது' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. உடனே, தன்னுடைய படத்தில் பிரபுவை நடிக்கவைக்கலாம் என முடிவெடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபுவை அணுகுகிறார். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்த இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்ததால், அவர் படத்தில் நடிக்க பிரபு மறுத்துவிடுகிறார். பின், 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற காதல் படங்களில் நடித்து இளம் கதாநாயகனாக வலம்வந்து கொண்டிருந்த கார்த்தியை அணுகுகிறார். கார்த்தியும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. பிரபு, கார்த்தி என இருவரது கால்ஷீட்டுமே கிடைக்காத காரணத்தால் மீண்டும் விஜயகாந்த்திடமே செல்கிறார். படவாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த விஜயகாந்த் உடனே சம்மதித்துவிடுகிறார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் 'சாட்சி'.

'சாட்சி' திரைப்படம் வெளியானபோது நூறு நாட்கள் கடந்து வெற்றிகரமாக படம் ஓடியது. அந்த படத்தின் வெற்றி விஜயகாந்த்தை மீண்டும் பிஸியான கதாநாயகனாக மாற்றியது. பி.எஸ்.வீரப்பா - எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜயகாந்த் கூட்டணி 'வெற்றி' என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. அந்தப்படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு நிறுவனங்கள் வேறு இயக்குநர்கள் விஜயகாந்த்தை தங்கள் படங்களில் நடிக்கவைக்க போட்டிபோட்டனர். 'சாட்சி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்தார். ஒரு சமயத்தில் கமல்ஹாசன் இந்திப்படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த்திற்கு அடுத்த நடிகராக விஜயகாந்த் இருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT