Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

indiraprojects-large indiraprojects-mobile
ramesh kannaஇன்னைக்கு என் ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு வாட்ஸப்பில் சில ஃபோட்டோக்கள் வந்தது. கேப்டன் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மேடம், பையன் சண்முகபாண்டியன் மூணு பேரும் இருக்கும் படங்கள். அமெரிக்காவில் இருக்காருன்னு சொன்னாங்க. தெளிவான முகம், அந்த கள்ளமில்லா சிரிப்புன்னு சில நாட்கள் இடைவெளிக்குப் பின் அவரை இப்படி பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு மட்டுமில்ல, நெறய பேருக்கு அவர் உடல் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியாதான் இருக்கும். இன்னும் நெறய பேருக்கு அவரை பழையபடி பாக்கணும்னு ஒரு ஏக்கமே இருக்கும். நானும் அவர்களில் ஒருவன்.

என்ன காரணம்...? அவர் ரொம்ப வித்தியாசமானவர், தனித்துவமானவர். சினிமா உலகத்துல அவர் கண்டிப்பா தனித்துவமானவர்தான். ஏன்னா, சினிமாவில் இருந்தபோதும் சரி அரசியலுக்கு வந்தபின்னும் சரி, அவர் மக்களோட நெருக்கமா இருந்தார். அவர் அளவுக்கு ஃபேமஸான வேற எந்த ஹீரோவும் அவர் அளவுக்கு இறங்கி மக்களை சந்திக்கல, இறங்கி வேலைகள் செஞ்சதில்ல. அவரை நம்பலாம், அவரை நம்பி எதுவும் செய்யலாம், நம்புறவங்கள கைவிடமாட்டார். அந்த வகையில் அவர் உண்மையிலேயே  கேப்டன்தான்.

 

dharmachakkaram1995-96 சமயம்... 'தர்மசக்கரம்' பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துக்கிட்டுருந்தது. நான் அஸோசியேட்டா வேலை செய்தேன். அந்தப் படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமும் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் விஜயகாந்த் சார்க்கு படம் பண்ணணும்னா முதலில் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்கிட்டதான் கதை சொல்லணும். நான், என் நண்பன் விவேக் கூடப் போய் ராவுத்தர்கிட்ட கதை சொன்னேன். அவர், "சூப்பரா இருக்கேப்பா... நீ போய் பொள்ளாச்சியில விஜிகிட்ட பேசு. நான் ஃபோன்ல சொல்லிடுறேன்"னு சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

 

 


தர்மசக்கரம் ஷூட்டிங்கும் அமைஞ்சதால அப்போவே விஜயகாந்த் சார்கிட்ட பேசுனேன். "கதை  ராவுத்தர் கேட்டாச்சுல்ல, பிடிச்சுருச்சுன்னா ஒன்னும் கவலையில்ல பண்ணிடலாம். நீ கவலப்படாத"னு சொன்னார். சந்தோஷம் அதிகமாச்சு. எல்லாமே ஒத்து வந்தாலும் நம்ம ராசின்னு ஒன்னு இருக்கு. ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பாதவர்களைக் கூட சினிமா நம்ப வச்சுடும். அந்த அளவுக்கு நிலையாமை உள்ளது சினிமா. நான் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடிச்சுட்டு வருவதற்குள்ள இங்க சென்னையில கேப்டன் படம் இயக்குற வாய்ப்பையும் முடிச்சு வச்சுட்டாங்க. ஆமா, 'நானும் ரமேஷ்கண்ணாவும் சேர்ந்துதான் இந்தப் படத்தை இயக்கப் போறோம்'னு விவேக் சொல்ல, அது குழப்பமாகி அப்புறம் அந்த படம் இயக்கும் வாய்ப்பே போய்விட்டது.

 

 

vanathai pola 

vanathai pola2கோடி கோடி பேர் இந்த உலகத்தில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையென்பது ஒரு நூறு பேர் கூடத்தானே? சினிமாவில் இருக்கவங்களுக்கு வேணா அது ஒரு ஐநூறு பேரா இருக்கலாம். ஆனாலும் மனசுக்கு நெருக்கமானவங்க, மனமுவந்து பழகுறவங்கன்னு எடுத்துக்கிட்டா அதுக்குள்ளேதான் வரும். அந்த மாதிரி சுத்தி சுத்தி திரும்பவும் விஜயகாந்த் சார்கிட்ட வந்துட்டேன். ஆமா, விக்ரமன் சார் 'வானத்தைப் போல' படம் ஆரம்பிச்சார். அதுலயும் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்துல செந்தில் சார், நாங்க, எல்லாம் வச்சிருந்த கடையையும் அந்த வடையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டாங்க. அந்த அளவு காமெடியிலும் சரி, சென்டிமென்டிலும் சரி, வானத்தைப் போல, வானத்தைப் போலதான். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்து, 'மரியாதை' படத்திலும் அவருடன் நடித்தேன். ஆனால், கடைசி வரை அவருக்காக நான் ரெடி பண்ணிய கதையை அவரை வைத்து இயக்க முடியவில்லை. அவரை வைத்து எடுக்க முடியலையே தவிர அந்த கதை படமாகி வெற்றியும் பெற்றது. ஆமா, 'ஆதவன்' கதைதான் அது. சூர்யா நடிச்சார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார், நான் இயக்கவில்லை. ராசி... ராசி... ஹி... ஹி...

 

 


அரசியல் வருவதற்காக, வந்த பிறகு சிலர் சில புதிய விஷயங்களை செய்வார்கள். அதற்கு முன்ன அப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா, விஜயகாந்த் சார்கிட்ட ஏற்கனவே இருந்த விஷயங்கள், அவர் ஏற்கனவே செய்த செயல்கள், அவரை அரசியலுக்கானவராக உருவாக்குச்சு. படங்களில் தொடர்ந்து நடித்தபொழுதே ஷூட்டிங்கில் அவர் கேரவனிலோ தனியாகவோ போய் உட்கார்ந்து நான் பார்த்ததேயில்லை. நடுநாயகமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். ஷூட்டிங்குக்கு எதுவும் தேவையென்றால் உடனே ஏற்பாடு செய்வார். எல்லார்கிட்டயும் 'சாப்பிட்டாச்சா, வேற எதும் குறைவா இருக்கா'னு கேட்டு செய்வார். யார் வேணும்னாலும் அவரை அணுகலாம். அப்படித்தான் இருந்தார்.

 

 


அப்பொழுது இருந்த அந்த எளிதாக அணுகும் தன்மை, அரசியலுக்கு வந்த பின்னும் இருக்கு. இப்பவும் நான் அவரது வீட்டுக்கு நேரா போனா, உடனே உள்ள வர சொல்லி பார்ப்பார். நான் நெருங்கி பழகுன ரஜினி சார், கமல் சார்கிட்டக் கூட இது முடியாது. ஏன்னா, அவர்களுக்கு பல பிரச்சனைகள், தடைகள் இருக்கு. முன்னாடியே நேரம் கேட்டு, சந்திக்கப் போறது அவர்களுக்கு சரியா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் போகணும். அவர்கள் மேல் தவறல்ல, புகழ் பெற்றவர்கள், பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அப்படித்தான் பிஸியா இருப்பாங்க. ஆனால் அந்த நிலையிலும் எளிதாய் அணுக முடிந்தவராக இருப்பது கேப்டனின் குணம்.

 

 

vanaithaipola success meetதமிழ் சினிமாவில் ஃப்லிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்றாலே ஒதுக்கிய காலத்தில், அவர்களை அழைத்து ஆதரித்து படம் செய்து அவர்களுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கியவர். ஆர்.கே.செல்வமணி சாருக்கெல்லாம் முதன் முதலில் நல்ல சம்பளம் வாங்கித்தந்தார்.  அவரோட தைரியமும் யாருக்கும் வராது. ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியிலேயே கலைஞருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். கலைஞர் செய்வது தவறென்று நினைத்தால், அதையும் சொல்லுவார். மீடியாவை சரியாகக் கையாளவில்லைனு அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா, கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்ட நிருபர்களைத்தான் அவர் திட்டினார். மற்றபடி அவருக்கு பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான்.

 

 


நடிகர் சங்க தலைவரா இருந்து அவர் செஞ்சது பெரிய வேலை. கடனை அடைத்தது, பல பிரச்சனைகளை முடித்தது என்று...அவர் இறங்கி வேலை செய்தார். அவரோட பிறந்த நாளன்னைக்கு அவரை சந்திக்கப் போவேன். அவர் பிஸியா இருக்காருன்னு நினைச்சு நாம கிளம்புனா, விடமாட்டார். 'இருங்க ரமேஷ்கண்ணா போலாம், மெதுவா'ன்னு உட்கார வச்சு நிறைய பேசுவார். ஒரு முறை, ரோட்டில் என் கார் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தேன். அவர் காரில் வந்தார், பிரேமலதாவும் இருந்தாங்க. என்னைப் பாத்துட்டு நிறுத்திட்டார். அவர் கூட மூணு நாலு கார் வந்தது. மக்களும் அவரை கவனிச்சுட்டாங்க. 'என்னாச்சு ரமேஷ் கண்ணா... டேய், இறங்கு என்னன்னு பாரு'னு சொல்றார். எனக்கு ஒரே பதற்றம், கூட்டம் கூடுது. "அண்ணே...நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன், நான் சரி பண்ணிட்டுப் போறேன்"னு சொல்றேன் கேக்கமாட்டேன்கிறார். கஷ்டப்பட்டு அனுப்புனேன். அவர் உயரத்துக்கு, என்னால் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனாலும் அப்படி நடந்துகொண்டார், அவர்தான் கேப்டன்.

அவர் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியலில் முழுவீச்சில் இறங்கவேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார். 'அவரை இவ்வளவு புகழ்றியே... நீ ஏன் அவர் கட்சியில் சேரல'னு கேக்குறீங்களா? நான் ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன், "அண்ணே... கட்சியில சேருறேன்'னு. வேற யாரா இருந்தாலும் பிரச்சாரத்துக்காவது பயன்படுவாங்கன்னு சேர்த்திருப்பாங்க. ஆனா அவரு, "சும்மா இரு ரமேஷ்கண்ணா, நீ போய் குடும்பத்தைப் பாரு. உனக்கு இந்த பிரச்னையெல்லாம் வேணாம். இது என் வேலை, நான் பாத்துக்குறேன். உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு" என்று சொன்னார். அவர்தான் கேப்டன்!
 

முந்தைய பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...