ADVERTISEMENT

30 வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து... இன்றுவரை படுத்த படுக்கையாக இருக்கும் நடிகர்!

06:25 PM Sep 03, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் என்னுயிர் தோழன் பாபுவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து அவரது வாழ்க்கையையே முடக்கியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு நடிகருக்கு அவரது உடல்தான் மூலதனம். அந்த உடலை வைத்துதான் அவரது வாழ்க்கையே உள்ளது. நடனம், சண்டைக்காட்சி, சாதாரணக் காட்சி என எந்தக் காட்சியாக இருந்தாலும் மிகவும் கவனமாக நடிக்கவேண்டும். படப்பிடிப்பில் ஒரு நடிகருக்கு காயம் ஏற்பட்டால் அந்தப் படம் மட்டுமின்றி அடுத்தடுத்து அவர் கால்ஷீட் கொடுத்துள்ள படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படுகிற பணச்செலவு, நேர விரயம் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு நடிகர் கவனமாக இல்லாவிட்டால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு 'என்னுயிர் தோழன் பாபு' வாழ்க்கை உதாரணம்.

பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் படத்தின் மூலமாக திரைக்கு அறிமுகமானவர் பாபு. சென்னை தமிழை இவ்வளவு அழகாக பேசி, சேரி பையனை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறானே... யார் இந்த பாபு என்று படம் வெளியானபோது அனைவரும் பேசினர். தன்னுடைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபுவின் நடை, முக பாவனைகளைக் கண்டு அவரை ஹீரோவாக்கினார் பாரதிராஜா. என்னுயிர் தோழன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பாபுவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. என்னுயிர் தோழன் படம் வெளியான பிறகு மிகவும் பிஸியான நடிகராகிவிட்டார் பாபு.

எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்த நிலையில், 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் நடிக்க பாபுவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தில் பாபுவிற்கு ஜோடியாக சிவரஞ்சனி நடித்தார். சிவரஞ்சனிக்கு இந்தப்படம்தான் அறிமுகப்படம். பார்த்தீப ராமன் இயக்க, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்க, நான் அந்தப்படத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினேன். இலங்கைத்தமிழர் ஒருவரும் விநியோகஸ்தர் ஒருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்ய படக்குழு திட்டமிட்டிருந்தனர்.

50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கையில், இரவுநேர சண்டைக்காட்சி படமாக்கலின்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்துவிடுகிறது. உயரமான இடத்திலிருந்து கதாநாயகன் கீழே குதிப்பது போன்று ஒரு காட்சி. வழக்கமாக இது மாதிரியான ஆபத்துகள் நிறைந்த சண்டைக்காட்சியில் சண்டை கலைஞர்கள்தான் டூப் போட்டு நடிப்பார்கள். அன்றைக்கும், ஒருவர் டூப் போட்டு குதிக்க தயார் நிலையில் இருந்தார். ஆனால், அந்தக் காட்சியில் நானே நடிக்கிறேன் என பாபு கூறினார். இயக்குநர் எவ்வளவோ கூறியும் நான்தான் நடிப்பேன் என பாபு உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி இயக்குநரும் அனுமதித்தார். ஷாட் ஓகே என்று சொன்னதும் பாபு மேலே இருந்து கீழே குதிக்க, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு முதுகெலும்பு உடைந்துவிட்டது. பாபுவின் ஆர்வக்கோளாறினால் ஏற்பட்ட விளைவு இது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பாபுவை சென்னை அழைத்துவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். தயாரிப்பாளரின் செலவிலேயே மாதக்கணக்கில் சிகிச்சை நடந்தது. இருப்பினும், கடைசிவரை உடைந்த முதுகெலும்பை சரிசெய்ய முடியவில்லை. ஏதாவது காயம் ஏற்பட்டால் சரிசெய்திருக்கலாம். முதுகெலும்பே உடைந்துவிட்டதால் ஒன்றும் செய்யமுடியாது என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருந்த பாபு, ஒருகட்டத்தில் படுத்த படுக்கையாகிவிட்டார். பல மாதங்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலேயே இருந்தது.

இனி பாபுவை வைத்து இந்தப்படத்தை தொடரவே முடியாது என்ற நிலை வந்தவுடன், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். ஏற்கனவே எடுத்த 50 சதவிகித படப்பிடிப்பில் பாபு சம்மந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தனர். அதையெல்லாம் தற்போது மீண்டும் ஷூட் செய்தனர். கவித்துவம் கொண்ட நல்ல காதல் கதையாக 'மனசார வாழ்த்துங்களேன்' திரைப்படம் இருந்தபோதிலும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அன்று படுத்த படுக்கையான பாபுவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. பாபுவின் ஆர்வக்கோளாறு காரணமாக அவரது வாழ்க்கையே போய்விட்டது. இருமுறை அந்தப்படத்தை ஷூட் செய்ததால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் செலவு ஏற்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில் பட வசூல் இல்லாததால் மிகப்பெரிய நஷ்டத்தை அந்தத் தயாரிப்பாளர் சந்தித்தார். அதன் பிறகு, அவர் படம் தயாரிக்கவேயில்லை. அந்தப்படத்தை இயக்கிய இயக்குநருக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT