ADVERTISEMENT

கஜா புயல் நிவாரணத்திற்கு கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி வழங்கினார்

05:09 PM Nov 20, 2018 | santhosh

ADVERTISEMENT

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாய் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ADVERTISEMENT

"புயலே புயலே என்செய நினைத்தாய் தமிழச்சாதியை என்று புலம்புவதில் இனிப் புண்ணியமில்லை. வாழ்விழந்த தமிழர்கள் மீட்கப்படவும் காக்கப்படவும் வேண்டும். அவர்களின் தலைக்கு மேலே வானம் கிழிந்துபோனது, கால்களுக்குக் கீழே பூமி அழிந்துபோனது. கஜா புயலால் விழுந்துபோன தென்னைமரங்கள் வீட்டில் விழுந்த இழவுகளாகிவிட்டன. மனிதன் சாவதைவிட மாடு சாவதுதான் ஒரு விவசாயக் குடும்பத்தின் பெருந்துயரம். தமிழ்நாட்டுக்கே சோறுபோடும் நிலம் தனக்குச் சோறில்லாமல் போவது அவலத்தின் அவலம். குழந்தைகளும் முதியவர்களும் தொழுதும் அழுதும் நிற்கும் துயரம் பதறும் இதயத்தைச் சிதறுதேங்காய் போட்டுவிட்டுப் போகிறது. என்னால் தொலைக்காட்சி பார்க்கமுடியவில்லை. அதை நிறுத்திவிடுகிறேன் அல்லது கண்களை அணைத்துவிடுகிறேன். வேதாரண்யத்திலிருந்து இலங்கை நெடுந்தூரமில்லை, பக்கம்தான். போரால் இலங்கைத் தமிழன் அன்று அடைந்த துயரத்தை இந்தியத் தமிழன் இன்று புயலால் அடைந்திருக்கிறான். ஒரு தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது.

அரசியல் – சாதி – மதம் என்ற எல்லா எல்லைகளையும் கடந்து தமிழர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இயற்கையைவிட மனிதன் சிறந்தவன். கொடுப்பதும் கெடுப்பதும் இயற்கையின் குணங்கள். ஆனால் கொடுப்பது மட்டும்தான் உயர்ந்த மனிதனின் சிறந்த குணம். அள்ளிக்கொடுப்போர் அள்ளிக்கொடுங்கள்; கிள்ளிக்கொடுப்போர் கிள்ளிக்கொடுங்கள். ஒரு செல்வந்தரின் அல்லது ஒரு நிறுவனத்தின் இரும்புப்பெட்டியில் உள்ளதெல்லாம் தமிழன் கொடுத்த பணம்தான். இயன்றதைக் கொடுங்கள். வரிகட்டுகிறோம் இல்லையென்று சொல்லவில்லை. அது ஆணைக்கு உட்பட்டுச் செய்வது. தர்மம் அறத்துக்கு உட்பட்டுச் செய்வது. உறைவிடம் – உணவு – உடை – அன்பு – ஆறுதல் – மீட்சி இவையே அவர்களின் இன்றைய முன்னுரிமைகள். ஊர்கூடி ஊரை மீட்டெடுப்போம். அரசு அதிகாரிகள் நேர்மையோடும் அக்கறையோடும் ஈரத்தோடும் ஈகையோடும் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறோம். அரசு ஆற்றும் நற்பணிகளுக்குப் பாராட்டு, நன்கொடை தந்தோர்க்கு நன்றி.

என்ன இருந்தாலும் சொல் என்பது பித்தளை, செயல் என்பதே தங்கம். எழுதிப் பிழைக்கும் இந்த எளிய கவிஞன் தமிழர் மறுசீரமைப்புக்காக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவழி அனுப்பியிருக்கிறேன். இந்தச் சிறுதொகை ஐந்து ஜோடிக் கண்களின் கண்ணீரைத் துடைத்தால் அதுபோதும் எனக்கு. எளிதில் அடையமுடியாத கிராமங்களில் மீட்சிப்பணியாற்ற வெற்றித்தமிழர் பேரவைத் தோழர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் விரைவில் களமிறங்குவார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT