ADVERTISEMENT

‘கூழாங்கல்’ மட்டுமில்லை, இவற்றையும் உங்க வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க... சினிமா ரசிகனுக்கான சில சிறந்த சர்வதேச படைப்புகள்!

03:37 PM Dec 03, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்திய 52வது சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில், உலக சினிமா ரசிகரும் திரைப்பட இயக்குநருமான 'உலக சினிமா' பாஸ்கரனிடம் இந்த விழாவில் 'உங்களைக் கவர்ந்த படங்கள் எவை?' எனக் கேட்டோம்.

"‘கூழாங்கல்’ திரைப்படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டுமே நிறைவாக இருந்தது. இன்றைக்கு உலகம் முழுவதும் இருந்து பல மாஸ்டர்களின் படம் திரைப்பட விழாக்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருடைய படங்களுக்கும் இணையான படமாக ‘கூழாங்கல்’ நிற்கிறது. எந்த இடத்திலும் செட் போடாமல் எளிய மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில்தான் முழு படத்தையும் எடுத்துள்ளனர். சினிமாவில் உள்ள அத்தனை துறை வேலைகளும் ‘கூழாங்கல்’ படத்தில் சிறப்பாக வந்துள்ளது. யுனஸ்கோ காந்தி மெடல் போட்டிக்கான பிரிவில் ‘கூழாங்கல்’ படத்தை சேர்த்திருந்தனர். ஆனால், படம் விருது பெறவில்லை. அதன் பின்னால் எதுவும் அரசியல் இருக்கிறதா அல்லது அந்த விருதைப் பெற்ற படம் இதைவிட சிறந்ததா என்று தெரியவில்லை. விருது பெற்ற படத்தை நான் பார்க்காததால் அதுகுறித்து விமர்சிக்கக் கூடாது. ஆனாலும் ‘கூழாங்கல்’ விருது பெறாதது எனக்கு ஏமாற்றமே.

சூஜா டெபராகூஸ் இயக்கியிருந்த 'பெபியா ஏ மாம் டிசைர்' என்ற ஜார்ஜியன் படம் மிகவும் பிடித்திருந்தது. 17 வயது பெண் தன்னுடைய பாட்டி இறந்துவிட்டதால் அவருடைய இறுதிச்சடங்கிற்காக வருகிறாள். இறுதிச் சடங்கின்போது ஜார்ஜிய மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கம், பண்பாட்டை அழகாகக் காட்டியிருந்தார்கள். தான் பயணித்துவந்த வழியெல்லாம் ஒரு நூல் கண்டிலிருந்து நூலை விட்டுக்கொண்டே அந்தப் பெண் வருவாள். அது அந்த மக்களின் பண்பாடு சார்ந்த விஷயமா அல்லது ஏதேனும் குறியீடாக அதைக் காட்டினார்களா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அது அழகாக இருந்தது. வெரோனிகா சோலோ ஏவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தத் திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த ஒளிப்பதிவு கொண்ட படம் என்றால் அது இந்தப் படம்தான்.

'ஹிண்டர் லேண்ட்' என்ற ஆஸ்திரேலிய படம் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் ஆர்ட் டைரக்ஷன் சிறப்பாக இருந்தது. ஸ்டிவன் ரூசோ விட்ஸ்கி இயக்கியிருந்தார். போருக்குப் பிறகு ஒரு நகரம் எப்படி சிதையுண்டு கிடக்கிறது என்பதை ஆர்ட் டைரக்சனில் சிறப்பாகக் காட்டியிருப்பார்கள்.

இயக்குநர் கிலியோ மூசி மற்றும் நடிகர் லூயிஸ் ரைமே ஆகியோருடன் 'உலக சினிமா' பாஸ்கரன்

ஹேமி ரமேசன் இயக்கியிருந்த 'எனி டே நவ்' (Any Day Now) என்ற ஃபின்லாந்து படம் சிறப்பாக இருந்தது. ஈரானில் இருந்துவந்த குடும்பம் ஃபின்லாந்தில் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாய்ப்பு மூலமாக மீண்டும் விண்ணப்பிப்பார்கள். அவர்கள் பையனுடைய படிப்பு கெடக்கூடாது என்பதற்காகப் பள்ளியில் சேர்ப்பார்கள். அந்தப் பள்ளியில் அவனுக்குப் புது நண்பர்கள் கிடைப்பார்கள். அந்தப் பையனுடைய பார்வையில் கதை நகரும்.

'ஹ்யூமனைசேஷன்' (Humanization) என்ற சுவீடன் படம் பார்த்தேன். தன்னுடைய குழந்தையை விபத்தில் பறிகொடுத்த பெண், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்துவிடுவாள். பின், சிகிச்சைக்காக ஒரு நர்சிங் ஹோமில் சேர்க்கப்படுவாள். அந்த நர்சிங் ஹோமில் உள்ள நர்ஸுக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையே ஏற்படும் நட்பை அழகாகக் காட்டியிருப்பார்கள்.

ஜேன் கேம்பியன் இயக்கிய 'தி பவர் ஆஃப் தி டாக்' (The power of the dog) திரைப்படம் மிக அற்புதமாக இருந்தது. நாம் சீண்டிக்கொண்டே இருக்கும் நாய் நம்மை பழிவாங்கினால் என்ன நடக்கும் என்பதே இந்தப் படத்தின் மையம். பலம் நிறைந்த ஆணாதிக்க திமிர் நிறைந்த ஒருவன், எல்லாரையும் சீண்டிக்கொண்டே இருப்பான். அந்த வீட்டில் வேலை செய்யக்கூடிய ஒருவன் இவனைக் கொலை செய்துவிடுவான். மிக புத்திசாலித்தனமாக அந்தக் கொலையை அவன் செய்வான்.

'சொவாத்' (Souad) என்ற எகிப்து திரைப்படம் நல்லா இருந்தது. சோசியல் மீடியா மூலமாக ஏற்படும் நன்மை தீமைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநர் பெண் என்பதால் ஒரு பெண்ணின் பார்வையிலேயே இந்தப் படத்தை நகர்த்தியுள்ளார். சோசியல் மீடியா மூலமாக ஒரு பையன் மீது பெண் காதல் வயப்படுகிறாள். திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், அவன் பிற பெண்களுடனும் தொடர்பில் இருப்பான். அதில் ஏமாற்றமடைந்து இந்தப் பெண் தற்கொலை செய்துவிடுவாள். பின், இவளுடைய தங்கை அவனைத் தேடிவந்து அவனுடன் ஒருநாள் பயணிப்பாள். தன்னுடைய அக்கா எங்கெல்லாம் அவனுடன் செல்ல வேண்டும் என்று நினைத்தாளோ அங்கெல்லாம் அவனை அழைத்துச் செல்வாள். இறுதியில் தன்னுடைய அக்கா பேசிய ஒரு ஆடியோவை அவனுக்கு அனுப்புவாள். அதை அவன் கேட்ட பிறகு வேறு எந்தப் பெண்ணையும் அவன் தொடர்புகொள்ள முடியாது. இவளையும் மறக்க முடியாது. அவனை அப்படியொரு குற்ற உணர்ச்சி தொற்றிக்கொள்ளும். படத்தின் முடிவு மிகவும் கவித்துவமாக இருக்கும்.

'ஸ்பென்ஸர்' (Spencer) என்ற படம் மிகவும் பிடித்திருந்தது. சார்லஸ் டயானா பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவருடைய இன்னொரு முகத்தை இந்தப் படம் காட்டும். எளிய பெண்ணாக இருந்து இளவரசர் ஒருவருக்கு வாக்கப்பட்டுப் போனதை மிக நுட்பமாக இந்தப் படம் பதிவு பண்ணியுள்ளது. மேட்டிமைத்தன்மையோடு ஒன்ற முடியாமல் என்ன மாதிரியான அகச்சிக்கல்களுக்கு அவள் உள்ளாகிறாள் என்பதை சிறப்பாக காட்டியுள்ளார்கள்.

'வெல்த் ஆஃப் தி வேர்ல்டு' (Wealth of the world) என்ற சிலி படத்தை மிகவும் ரசித்தேன். மனிதநேயம்தான் இந்த உலகின் மிகப்பெரிய சொத்து என்பது இந்தப் படத்தின் மையக்கதை. மிகப்பெரிய போருக்குப் பிறகு நாடு சிதிலமடைந்துவிடுகிறது. அதில் தப்பித்த இருவரைப் பற்றிய கதையே இந்தப் படம். அந்த இருவரில் ஒருவனுக்கு கண் பார்வை பறிபோயிருக்கும். மற்றொருவனுக்கு காது கேளாமல் ஆகியிருக்கும். கண் பார்வை இழந்தவன் முழுக்க சுயநலவாதி. காது கேளாதவன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவன். படம் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், 21 நாட்களில் மொத்த படத்தையும் எடுத்துவிட்டார்களாம்.

'எவ்ரித்திங் வென்ட் ஃபைன்' (everything went fine) என்ற பிரெஞ்ச் படமும் சிறப்பாக இருந்தது. 85 வயது முதியவர் படுத்த படுக்கையாகிவிடுகிறார். அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். அவருடைய பையன் மீது அவருக்குப் பாசம் இருக்காது. மற்ற இரு பெண் குழந்தைகள் மீதும் மிகப்பாசமாக இருப்பார். 'படுக்கையில் முடியாமல் கிடக்க நான் விரும்பவில்லை. நீதான் என்னுடைய உயிர் போக உதவ வேண்டும்' என்று தன்னுடைய இளைய மகளிடம் கூறுவார். ஆனால், பிரான்சில் அதற்கு வழியில்லை. சுவிஸ் சென்றால் நாம் விரும்பியபடி தற்கொலை செய்துகொள்ளலாம். கடைசியில் அவர் விருப்பப்பட்டபடியே அவரை அனுப்பிவைத்துவிடுவார்கள். ரொம்ப எமோஷலான படமாக இருந்தது.

'பேரலல் மதர்ஸ்' (Parallel mothers) என்று ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன். பெட்ரோ அல்மோடோவர் என்பவர் இயக்கியிருந்தார். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களுக்கு மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. இருவருடைய குழந்தைகளும் மாறிவிடும். அதில் ஒரு பெண்ணின் குழந்தை சில காலம் கழித்து இறந்துவிடும். மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டிருக்கும். இறந்த குழந்தையை வளர்த்த பெண் இந்தப் பெண்ணிடம் வேலைக்கு வருவாள். அந்தப் பெண்ணிடம் இது உன் குழந்தைதான் என அவள் சொல்ல வேண்டும் என நினைப்பாள். இந்தப் படமே வித்தியாசமாக இருந்தது.

'கம்பார்ட்மெண்ட் 6' (Compartment 6) என்று ஒரு படம் பார்த்தேன். ஜூஹோ குஸ்மானன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ‘அன்பே சிவம்’ படம் மாதிரியான கான்செப்ட்தான் இந்தப் படம். ரயிலில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

'ஒணாடா - டென் தவுசண்ட் நைட்ஸ் இன் தி ஜங்கிள்' (Onoda: 10,000 Nights in the Jungle) என்று ஒரு ஜப்பானிய படம் பார்த்தேன். 1944இல் ஜப்பான் போரில் தோல்வியைச் சந்தித்துவிடும். பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு தீவில் ஜப்பானிய ராணுவ வீரர்கள் இருப்பார்கள். ஜப்பான் வீழ்ந்துவிட்ட விஷயம் இவர்களுக்குத் தெரியாது. போர் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைத்து நீண்டகாலம் அவர்கள் அங்கேயே இருப்பார்கள். ஒருகட்டத்தில் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருத்தராக இறந்துவிடுவார்கள். ஒணாடா என்பவன் மட்டுமே மிஞ்சியிருப்பான். பின், ஜப்பானிலிருந்து ஒருவர் வந்து ஜப்பான் வீழ்ந்துவிட்ட விஷயத்தை அவனிடம் கூறுவார். அவன் அதை நம்ப மறுத்து, அங்கிருந்து கிளம்ப மாட்டான். பின், ராணுவத்தில் இருந்த ஒரு சீனியர் ஆபிசர் சென்று அவனை அங்கிருந்து அழைத்துச் செல்வார்.

கடைசியாக 'எ ஹீரோ' (A HERO) என்றொரு படம் பார்த்தேன். ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்ஹாதி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். நாயகன், ஒருவரிடம் பெரிய தொகை கடன் வாங்குகிறான். அவனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவரின் மகளுடைய திருமணம் நின்றுவிடுகிறது. கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் என இருவருடைய பார்வையிலும் கதை நகரும். மிகச்சிறப்பான படமாக ஹீரோ இருந்தது" என்று தான் ரசித்த படங்களைப் பட்டியலிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT