ADVERTISEMENT

"என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்" - சூர்யா உருக்கம்

05:00 PM Aug 09, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் சித்திக், தமிழில் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்', விஜயகாந்த்தின் 'எங்கள் அண்ணா', பிரசன்னாவின் 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். பின்பு மீண்டும் விஜய்யை வைத்து 'காவலன்' மற்றும் கடைசியாகத் தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனைக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்திக் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததால் எக்மோ (ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்பு நேற்று (08.08.2023) இரவு 9.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்தது. இவரது மறைவுக்குத் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், துல்கர் சல்மான் எனப் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருடன் 'ப்ரண்ட்ஸ்' படத்தில் பணியாற்றியதை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில், "என் இதயம் கனமாக இருக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.

ப்ரண்ட்ஸ் படம் பல்வேறு வழிகளில் எனக்கு ஒரு முக்கியமான படம். சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது அபிப்ராயங்களை அன்புடன் தெரிவிப்பார். ப்ரண்ட்ஸ் படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குநர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது நம் அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை அவர் கொடுத்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT