ADVERTISEMENT

'பம்பரமாய் சுழலும் விஜயபாஸ்கர் முதல்வருக்குப் பக்க பலமாகச் செயல்படுகிறார்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

11:21 AM Apr 01, 2020 | santhosh


உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ள நிலையில் இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவிற்காகச் செய்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

ADVERTISEMENT

ADVERTISEMENT

''இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார்"

உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனைக் கட்சிகள்.இடம் வாய்த்ததென சிஸ்டத்தைச் சரிசெய்யப் புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி.எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியைப் பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார்.

மழை அதிகமாக வந்தால் எப்படிச் சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்.கண்மாய்களைப் புதுப்பித்தது,விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது, எனப் படிப்படியாகத் தமிழகத்தைக் கையிலெடுத்தார் முதல்வர் எடப்பாடி.

சிறந்த செயல்பாடுகள்.. அடுக்கடுக்கான திட்டங்கள்.. என இறங்கியபோது வந்து இடியாக இறங்கியது கரோனா.உடனடியான செயல்பாடுகள்..இரவு பகலாகத் திட்டமிட்ட முன்னேற்பாடுகள் பல தூக்கமில்லாத இரவுகளைச் சுமந்திருப்பார் முதல்வர் அவர்கள்.

சரியாக இல்லாதபோது திட்டுகிற நாம்,சரியாகச் செயல்படும்போது அந்த சிஸ்டத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.தமிழகத்தை முழு அடைப்பால் முடக்கினாலும், மக்கள் பசியால் பட்டினியால் வாடிவிடாமல் திட்டமிட்ட விதிமுறைகள்...

காவலர்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறை என அத்தனையும் இந்த இடரான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் நம் முதல்வர். உடன் பம்பரமாய் சுழலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வருக்கு மிகுந்த பக்க பலமாகச் செயல்படுகிறார்.

இன்னும் வேகமாகப் பரவும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் உணர்ந்து செயல்படுவதே ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பலன் தரும்.

சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படாமல் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் மீண்டுவிடலாம்.இப்போதைய நிலையில் ஏற்படும் நிதிப்பற்றாக் குறையைச் சமாளிக்க பணம் படைத்தவர்கள் முன் வந்து உதவலாம்.

கரோனா வந்து உயிர் போனால் பணத்தை வைத்து என்ன பண்ண??

எத்தனை கோடிகள் வைத்திருந்தாலும் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் கரோரனா வந்துவிட்டால் குணப்படுத்த மருந்து இல்லை அய்யா...

இன்று இத்தாலியில் அத்தனை பேரும் பணத்தைத் தெருவில் கொண்டுவந்து கொட்டிவிட்டு இந்தப் பணம் எங்களைக் காப்பாற்றவில்லை இதை எடுத்துக்கிட்டு உயிரைக் காப்பாத்துங்கன்னு கதறி இருக்காங்க...

அதனால் அரசு இன்னும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் செய்ய பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க பணம்படைத்த அனைவரும் நிதி கொடுக்க முன்வரலாம்.கட்சி பாகுபாடின்றி எல்லோரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள். நம் நாம் தமிழர் தம்பிகளும் இதைச் செய்யுங்கள்.

அண்ணன் சீமானின் தம்பிகளில் நானும் ஒருவன். நாம் தமிழர் கட்சியில் தீவிர செயல்பாட்டில் உள்ளவன்.ஆனாலும்... இக்கட்டான நேரங்களில் கைகோர்த்து மனிதர்களாய் நின்று பேரழிவினை ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத இந்தக் கரோனா கிருமியை ஒழித்துக் கட்டத் தீவிரமாகச் செயலாற்றும் முதல்வரைப் பாராட்டி உடன் நிற்கிறேன்.

இந்த சமயத்திலும் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்துகொண்டு விவாதங்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் முன் நிற்கும் ஆபத்தான நாட்களை உணர்ந்து செயல்படுங்கள்.அதற்குப் பதிலாக அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரியாத செய்திகளை அனுப்பி, பயத்திலிருப்பவர்களை மேலும் பதட்டப் படுத்தாமலிருங்கள்.இந்தச் செய்திகளைப் படிப்பதைவிட கொரனா வந்தே செத்திடலாம் போல இருக்கு.

தயவுசெய்து அறிவுப்பூர்வமான.. தேவையான செய்திகளை மட்டுமே பகிருங்கள்.

தன்னுயிர் மதிக்காது இந்நேரம், நேரம் காலம் பாராது சேவை செய்யும் ஒவ்வொரு மருத்துவரையும், செவிலியரையும், காவலரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.இன்று நாட்டைக் காக்க (மருத்துவம், காவல்) போர்புரியும் போர்வீரர்கள் இவர்கள். இவர்களுக்கு எந்த பாதிப்பும் நேரா வண்ணம் இறையோன் காக்க வேண்டிக் கொள்கிறேன்.

முதல்வரோடு நின்று இக்கரோனாவை வெல்வோம் !

மீண்டும் பழைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சீக்கிரம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு வீட்டிலிருப்போம்.பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருப்போம்.

அன்புடன் ,

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்/ இயக்குநர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT