ADVERTISEMENT

அதிர்ச்சி தகவல் வெளியிட்டு அதிரடி முடிவெடுத்த சந்தோஷ் நாராயணன்

06:01 PM Mar 05, 2024 | kavidhasan@nak…

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியுள்ளார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்கள கடந்துள்ளது.

ADVERTISEMENT

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளதாகத் தெரிவித்து இதுவரை இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த பாடலுக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றி. இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

இந்த அனுபவத்தால் நான் சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு, தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கும் வருவாயைப் பெறுவதற்கும் எந்த இடையூறும் இல்லாமல் எதுவாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதைப் பதிவிட காரணம், நான் சுயாதீன இசைக் கலைஞர்களுக்காக இருக்கிறேன். அவர்களின் வருவாயை உறுதி செய்வேன். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத் தளத்தில் சொல்ல விரும்பினேன். ஆனால் சுயாதீன இசைக் கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT