Skip to main content

“மீடியா முன்னால் விவாதிக்க தயார்’ : தீ-யின் அறிக்கையால் சூடுபிடிக்கும் அறிவு விவகாரம்

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

singer dhee explains enjoy enjaami song controversy

 

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு "இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. முடிவில் உண்மைதான் எப்போதும் வெல்லும்" எனக் கூறியிருந்தார். இதன் பிறகு இதற்கு விளக்கமளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

ad

 

இந்நிலையில் பாடகி தீயும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என்ஜாய் எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே . அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன்.

 

அதேநேரம், எங்களது பணி குறித்து மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இயக்குநர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற பெருமையை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து கொண்டாடவே விரும்பினேன்.

 

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னுடன் சேர்த்து அறிவையும் அழைத்தனர். ஆனால் அவர் அமெரிக்காவில் இருந்ததால் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதனால் அறிவின் குரலை மட்டும் இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தி கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்திலிருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து மீடியா முன்னாள் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

 

இந்த உலகத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்