ADVERTISEMENT

அரைநூற்றாண்டுக் கொண்டாட்ட நாயகன் ரஜினிகாந்த்

11:38 AM Dec 12, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அவரின் திரையுலக வாழ்வையும் அதனோடு தொடர்புடைய அவரின் சுவாரசியப் பயணங்களையும் இங்கு காண்போம்.

பேருந்து நடத்துநராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்று சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எனச் சுமார் 48 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளவர் ரஜினி.

தமிழ்த் திரையுலக வரலாற்றை எழுதும் போது ரஜினியைத் தவிர்த்து விட்டு எழுதுவது இயலாத காரியம். அந்த அளவிற்கு தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் உட்ச நிலைக்குச் சென்று, இன்றும் அந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டும் படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டும் உள்ளார். அரைநூற்றாண்டுக் காலம் தன்னிடம் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற பட்டமே அவரது திறமைக்கு உரிய அங்கீகாரம்.

1975 ஆம் ஆண்டு கா.பாலச்சந்தர் இயக்கி கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். வில்லன், குணச்சித்திர நடிகர் எனத் தொடர்ந்து திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தி கொண்டே இருந்த ரஜினி, பைரவி என்ற படத்தின் முழுமையாக நாயகனாகி அதன்பிறகு அடுத்த மூன்றே ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் எனும் நிலைக்கு உயர்ந்தார்.

கோடிகளில் வருமானம் வசூலித்த படங்களின் எண்ணிக்கையில் ரஜினியின் படங்கள் இன்றும் முதல் வரிசையில் இருக்கும். அவரே விரும்பி நடித்த ராகவேந்திரா கதாபாத்திரம் வரையிலும் எல்லாமே வெற்றி தான். அவரின் தனித்தன்மையான அபார ஸ்டைலால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டதால்தான் உலகம் முழுவதும் ரஜினி படங்களுக்கு இன்று வரையிலும் தனி இடம் உண்டு. இவரின் நடிப்பு திறமைக்கு உரிய அங்கீகாரமாக அரசு வழங்கிய பல்வேறு விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் கடந்த ஆண்டு இவர் பெற்ற திரை உலக வாழ்நாள் சாதனையாளருக்கான தாதாசாகேப் பால்கே விருது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

90களில் தனது திரைப்படங்களிலும் பொதுவெளியிலும் அவரால் உச்சரிக்கப்பட்ட அரசியல் சம்பந்தமான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களாலும் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தன. அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்த போதிலும், வெளிப்படையாக எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியின் போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் முன்னெடுக்க உள்ள அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார். பின்பு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரலாம், வராமலும் போகலாம். அவரது ஸ்டைலில் சொல்வதென்றால் அது ஆண்டவன் சொல்வார், ரஜினி செய்வார் என்றே வைத்துக் கொண்டாலும் வரப்போகிற ஜெயிலர் படமும் அதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்கிற படங்களாக இருந்தாலும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கொண்டே அவர் இருக்க வேண்டும். அவ்வளவு தான்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT