Skip to main content

அரங்கை அதிரவைத்த ஜெயராம்... குலுங்கி குலுங்கி சிரித்த ரஜினி

 

Actor Jayaram mimicry smiling Rajinijanth ponniyin selvan audio launch

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் நடிகர்கள் பார்த்திபனும் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பேச மேடை ஏறினர். மேடையில், பார்த்திபன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்களை பகிரச்சொல்லி ஜெயராமிடம் கேட்டார். ஜெயராம் அப்போது இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களை மேடையில் பகிர்ந்துகொண்டார். இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் குரலையும், அவர்களின் உடல் மொழியையும் வெளிப்படுத்தினார். இதனை கண்டு கீழே அமர்ந்திருந்த ரஜினி, பிரபு, மணிரத்னம் உள்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். 

 

முதல் விஷயத்தை பகிரும்போது ஜெயராம், நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தினரிடமும், பிரபுவிடமும், மனித்துவிடுங்கள் என்று ஆரம்பித்தார். இதிலேயே ரசிகர்கள் ஜெயராம் என்ன சொல்லபோகிறார் என ஆர்வம் அடைந்தனர். ஜெயராம், “படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பின்போது காலை 4 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சது. நான் கேரவேனில் இருந்தேன். அப்போ ஒரு குரல் என் பின்னாடி வந்து, “ஜெய், என்கிட்ட இரண்டு பொட்டலம் இருக்கு; ஒன்னு நீ சாப்பிடு, ஒன்னு நான் சாப்பிட்றேன்” என்றது. இதனை பிரபுவின் கரகரப்பான குரலில் ஜெயராம் பேசி காட்டினார். ஜெயராமின் உடல் மொழியையும், மிமிக்கிரியையும் கண்டு ரசிகர்கள் கொண்டாடினர். நான், “காலையில் 4 மணிக்கு சாப்பிட முடியாது” என்றேன். அதற்கு பிரபு, “மணி சாப்பிட பிரேக் விடமாட்டாரு” என சொல்லி எச்சரித்தார். நான் அதை சாதாரணமாக எடுத்துக்கிட்டேன். ஆனா, மதியம் 2 மணி வர சாப்பிடவே முடியல” என்றார்.

 

காலை உணவை சாப்பிட முடியாமல் பிரபும் ஜெயராமும் தவித்த காட்சிகளை மிமிக்கிரி செய்து அவர் சொன்ன விதம் அவர்களின் பரிதவிப்பை ரசிகர்களின் கண் முன்னே தோன்ற வைத்தது. அவர் அச்சு அசலாக பிரபுவின் கரகரப்பு குரலிலேயே மிமிக்கிரி செய்தது ரஜினி, பிரபு, கமல் உள்ளிட்ட அரங்கத்திலிருந்த அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. 

 

அத்துடன் பொன்னியின் செல்வன் படத்தில் அனுபவ நடிகர் ஒருவர் குதிரையில் ஏற பயந்தது குறித்து பேசினார். இந்த காட்சியை விவரித்தபோது அப்படியே மணிரத்னம் குரலை வெளிப்படுத்திய ஜெயராம், மணிரத்னத்தின் தமிழிலேயே பேசினார். அதனைக் கண்டு மணிரத்னம் ஆச்சர்யம் அடைந்து சிரித்து மகிழ்ந்தார்.

 

ஜெயராம், “நடிகர் ஒருவர் குதிரையில் வரும் காட்சியை மணிரத்னம் படமாக்கினார். சிறந்த நடிகரான அவருக்கு குதிரை என்றாலே பயம். அந்த நடிகர் மணிரத்னத்திடம் போய், ‘சார் நான் அப்படியே நெஞ்சை நிமிர்த்தி, வீரநடை போட்டு கோட்டைக்குள் என்ட்ரி கொடுக்கவா’ என்று கேட்டார். அதற்கு மணிரத்னம், ‘சாரி அப்படி வந்த நல்லா இருக்காது. குதிரையில் வந்தாதான் நல்லா இருக்கும்’ என்று கூறினார். அதன் பிறகு அங்கிருப்பதிலேயே லேகுவான குதிரைக்கு இரண்டு நாட்கள் பயிற்சி கொடுத்து அந்த சீனில் நடிக்க வைத்தோம். அது பார்க்க குதிரை மாதிரிக்கூட இருக்காது. கோவேறு கழுதை மாரி இருக்கும். அந்தக் குதிரையைப் பார்த்து டென்ஷனான மணிரத்னம், ‘அவருக்குனு ஒரு குதிரையை ரெடி பண்ணி வைத்திருக்கும் போது; யாரு, இந்த குதிரையை குடுத்தது’ என்றார். எனக்கு, ரொம்ப முரட்டுத்தனமாக இருக்குமே என ஒரே பயம். அதுல எப்படி இந்த நடிகர் ஏறி வருவார் என்றும் பயந்தேன். ஆனால் அந்த நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். மணிரத்னம் சார் சொன்னவுடன், நேராக அந்த குதிரையில் ஏறி அந்த சீனை ஈசியாக நடித்துவிட்டு சென்றார். அந்த நடிகர் வேறு யாருமில்லை அது பார்த்திபன் சார்தான்" என்றார். மேலும் இந்த உரையாடலில் நடிகர் ஜெயராம் மணிரத்னத்தை போலவும் மிமிக்கிரி செய்து அசத்தினார். இவரின் மிமிக்கிரியை பார்த்து மணிரத்னம் உட்பட பலரும் சிரித்து மகிழ்ந்தனர்.