ADVERTISEMENT

மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் மனு

11:22 AM Jun 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சமீபத்தில் வெளியான ட்ரைலரும் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள மாமன்னன் படம்தான் தனது கடைசி படம் என உதயநிதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி, பாயல் ராஜ்புத் நடித்து வந்தனர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சில காரணங்களுக்காக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் ராம சரவணன் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முழுவதும் முடிந்துவிடும். ஆனால், மாமன்னன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார். இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம். ஏஞ்சல் படம் முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் உதயநிதி தர மறுக்கிறார். ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். அதுவரைக்கும் மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT