ADVERTISEMENT

“ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்” - பா. ரஞ்சித்

04:43 PM Mar 08, 2024 | kavidhasan@nak…

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மகளிர் தினமான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா. ரஞ்சித், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். படம் குறித்த கேள்விக்கு, “நம்ம வீட்டில் இருக்கிற பெரியவங்களை நாம எப்படி பாக்குறோம். அந்த பார்வையை கண்டிப்பாக இந்த படம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் படி செய்யும். முதியோர் இல்லத்தில் விட்ட பெரியோர்களை, அந்த குடும்பங்களில் இருப்பவர்கள், இந்த படத்தை பார்க்கும்போது சின்ன புரிதல் ஏற்படும். சில மாற்றங்களை உருவாக்குவதற்கு இந்த படம் முதற்படியாக இருக்கும். நீலம் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது என்றால், எங்களுக்கு என்று சில அளவுகோல்கள் இருக்கிறது. சில சமூகங்களுக்கு எதிரான, பாலின சார்பு, தவறான கருத்துக்கள் கொண்ட படங்கள் எடுக்கக் கூடாது என்பது தான் ஐடியா. அந்த வகையில் இந்த பட கதை, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான படமாக இருந்தது.” என்றார்.

ADVERTISEMENT

புதுச்சேரி குழந்தை படுகொலை சம்பவம் தொடர்பான கேள்விக்கு, “அது உண்மையிலே பதட்டமாக இருந்தது. எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்த செய்தியை பார்த்தவுடன் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன். ஆனால் வீட்டில் சொல்லவில்லை. இந்த சம்பவம் பெரிய பயத்தை உருவாக்கியிருக்கு. அந்த பயம் வெறும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை மையப்படுத்தியே இல்லை. சமூகத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. அதை சரியாக நாம் கையாள்வதில்லை. சொல்லியும் கொடுக்கப்படவில்லை. நம்முடைய கல்வி நிலையங்கள் நமக்கு சரியான கல்வியை போதிக்கிறதா என்பது பிரச்சனையாக இருக்கிறது. அதோடு சேர்ந்து இந்த போதை பழக்கவழக்கங்கள். இது தனி மனித பிரச்சனையா என பார்த்தால் இல்லை. ஒரு சமூகத்தினுடைய பிரச்சனையாத்தான் இருக்கு. ஒட்டுமொத்த சமூகமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு.

இன்றைக்கு குற்றம் செய்தவன் மாட்டிக்கிட்டான். ஆனால் அப்பாக்களாக, மாமாக்களாக, சித்தப்பாக்களாக என நிறைய பேர் யாருமே இன்னும் மாட்டவில்லை. பெரிய தண்டனை தர வேண்டும் என்பது முக்கியம் தான். மாட்டாத நிறைய பேர், மாட்டியவர்களை குற்றம் சொல்லவே மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமூகம் இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் இதற்கு காரணம். இங்கிருக்கிற அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக கூடங்கள் என எல்லாருமே பொறுப்பேற்க வேண்டும். நாம் என்ன வாழ்க்கை வாழுறோம். என்ன மாதிரியான மனநிலையில் இருக்கோம். ஏன் இந்த எண்ணம் தோன்றுது. அதை எப்படி தடுத்து நிறுத்தலாம். அதற்கான பயிற்சிகளில் நாம் போக வேண்டும். இதற்கு அடிப்படையாக கல்விதான் பிரச்சனை என நினைக்கிறேன். கல்வியோடு இங்கு இருக்கிற பகுத்தறிவற்ற தன்மையும் ஒரு மோசமான இடத்திற்கு கொண்டு போகிறது. இந்த பயிற்சி அடிப்படையாக நமக்கு உருவாகும் போது கண்டிப்பா இதுபோன்ற பிரச்சனைகள் களையலாம். இது ஒவ்வொரு தனிமனிதனுக்கு உண்டான ஒரு பொறுப்புணர்வு. இதை எல்லாருமே உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT