ADVERTISEMENT

"வெற்றிமாறன் கூட அடிக்கடி டிபேட் நடக்கும்" - பாவக்கதைகள் இசையமைப்பாளர் சிறப்புப் பேட்டி...

06:19 PM Jan 04, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்திய, பிரபலமான பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா ’பாவக்கதை’ படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றியவர். அவர் பெண் இசையமைப்பாளராக அடையாளம் காணப்பட்டது குறித்தும், இயக்குனர் வெற்றிமாறன் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ நேர்காணலில் உற்சாகமாகக் கூறியதைப் பார்க்கலாம்.

இன்று பெண் இசையமைப்பாளர்கள் குறைவாகவே இருக்கின்ற சூழ்நிலையில், உங்களைத் தனித்துவமாகக் காட்டிக்கொள்ள என்ன முறையைக் கடைப்பிடிக்கிறீர்கள்?

எல்லா வகையான பாடல்களையும் தமிழ்த் திரையுலகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதை நாம் மறந்துவிடுகிறோம். காரணம், நாம் நம்முள் இருக்கும் அந்த தனித்துவமான திறமையை வெளிக்கொணராமல் பிறர் செயல்படுத்திய விதங்களில் நம்மை மாற்றிக்கொள்கிறோம். அவ்வாறு நடக்காமல், நம்முள் இருக்கும் திறமையை வெளிக்காட்டினாலே போதுமானது, வேறு ஒன்றும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. அவரவருக்கு என்று இயற்கையாக இருக்கும் ஸ்டைலை வெளிக்காட்டினாலே ஈர்க்கக்கூடியதாகவும் போதுமானதாகவும் இருக்கும். பிறரால் அடையாளம் காணப்பட்ட ஸ்டைலை பின்தொடராமல் இருந்தாலே போதுமானது .

படத்தைப் பார்த்ததும் யாராவது உங்களைத் தொடர்புகொண்டு வாழ்த்தினார்களா ?

படம் வெளியானதும் பலர் என்னை வாழ்த்தினார்கள். அதிலும் பல நல்ல கருத்துகள் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்காத ஒன்றாக நான் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொடர்புகொண்டு பேசினேன் அப்போது அவரும் என்னை வாழ்த்தினார். 'பீட்ஸா', 'பேட்ட' போன்ற அவர் இயக்கிய படங்களைப் பார்த்த சமயங்களில் இருந்து நான் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவருடைய மிகப் பெரிய ரசிகை. அவ்வாறு இருக்க அவர் என்னை வாழ்த்தியது எனக்கு அதிக ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. .

திரையுலகிற்குள் நுழைவதை உங்களுடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா?

பொதுவாகவே பெற்றோர்கள் படிக்க வேண்டிய வயதில் படிப்பை தவிர்த்து வேறு எதிலும் நமக்கு உள்ள ஆர்வத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதை போன்றே என் வீட்டிலும் அரங்கேறியது. குறைந்தது இன்ஜினியரிங்காவது முடித்துக்கொண்டு மற்ற முயற்சிகளை செய்துகொள் என்றார்கள். ஆனால், எனக்கு அதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. பிடிக்காத ஒன்றைச் செய்து என் நேரத்தை வீண்செய்யவும் தயாராக இல்லை. ஆனால், நான் அந்த சிறு வயதிலே ஒரு ஸ்திரமான முடிவு செய்து, இதுதான் வாழ்க்கை என எண்ணி முழுவதுமாய் இறங்கினேன். அதனால்தான் இன்றைக்கு வெற்றி சார் போன்ற பெரிய மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்தது. நான் எடுத்தது நிச்சயமாக ஒரு கடினமான முடிவுதான். இப்போது, நான் தோல்வி அடைந்திருந்தால் என் பெற்றோர்களே என் பேச்சைக் கேட்டியா என்று என்னைக் கண்டித்திருப்பார்கள். அந்தப் பயமே என்னை இங்குவரை கொண்டு வந்தது என்பதுதான் உண்மை .

திரையுலகில் பெண் இசையமைப்பாளர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

திரையுலகில் உள்ள பெண்களை நடிக்கிறீர்களா? பாடுகிறீர்களா? என்றுதான் மற்றவர்கள் கேட்கிறார்களே தவிர, இசையமைப்பாளர் பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணம் கூட யாருக்கும் ஏற்படுவது இல்லை. காரணம், அந்த ஒரு வட்டத்தை உருவாக்கியவர்களும் பெண்கள்தான். அதை உடைத்து காட்ட யாரும் போராடவில்லை. அதை நிரூபித்துக் காட்டவும் இல்லை. இன்று வரை பெண்கள் இசை வாத்தியங்களை வாசிக்கக் கற்றுக்கொள்வதிலும், டெக்னீஷியன் போன்ற வேலைகளைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதே இவைகளுக்கு முக்கியமான காரணமாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஏற்பட்ட அந்த ஒற்றை நோக்கம் கொண்ட மனப்போக்கை பெண்ணாக நாம்தான் உடைத்தெறிய வேண்டும். சமீபத்தில் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த பெண் இயக்குனராக அடையாளம் காணப்பட்டவர் சுதா கொங்கரா. இதனைக் கேட்கையில் பெருமையாக இருக்கிறது. நானும் இந்தப் பயணத்தில் பெண் இசையமைப்பாளராகக் கண்டுகொள்ளப்பட்டது ஒரு மகிழ்ச்சி அளிக்கிற விஷயம்.

இயக்குனர் வெற்றிமாறன் உடன் பணியாற்றிய அனுபவங்கள்?

என்னுடைய ஆரம்பக் கட்டத்திலே அவருடன் பணியாற்றியது எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. எனக்கும் இசையுடன் பயணிக்கப்போகும் வாழ்க்கைக்கும் கண்டிப்பாக தேவையானதாக இருக்கும் என நம்புகிறேன். அவருக்கும் எனக்கும் அடிக்கடி விவாதங்கள், அதிக கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. ஆனால், அதை எல்லாம் நானும் அவரும் கற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு பார்த்தோமே தவிர சண்டையாகவோ, விவாதமாகவோ கருதியதில்லை. சில விஷயங்களை நான் எதிர்ப்பேன், சில விஷயங்களை அவர் எதிர்பார். ஆனால் அது எங்களுக்குப் புதியதாக ஒன்று கற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது. இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT