Skip to main content

கடைசி கட்டத்தில் அசுரன்... விரைவில் வெளிவருமா?

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தொடர்ந்து பணிபுரியும் படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
 

asuran


தமிழில் முதல் முறையாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் அறிமுகமாகிறார். இப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று கட்டங்களாக இப்படத்தை உருவாக்கி வருகிறது படக்குழு. இந்நிலையில் மூன்றாவது கட்டமான கடைசி கட்டத்தை நேற்று தொடங்கப்பட்டுள்ளதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 

அதனுடன் அசுரன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதில் கையில் அரிவாளுடன், ஆக்ரோஷமாக நடந்து வருகிறார் தனுஷ். பக்கத்தில் ஐயனார் சிலை ஒன்று இருக்கிறது.
 

devarattam


‘வெக்கை’ என்னும் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.