ADVERTISEMENT

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் சர்ச்சை... விளக்கமளித்த சூர்யா தரப்பு!

06:37 PM Aug 07, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட்ஸ் நிறுவனமும் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை விதிக்கக் கோரி சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அளித்த புகார் மனுவில், இணை தயாரிப்பாளரான தங்களிடம் முறையான அனுமதியைப் பெறாமல் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 2டி நிறுவனம் விற்றுவிட்டதாகவும், இப்படம் தொடர்பாக இரு நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை 2டி நிறுவனம் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த 2டி எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், "கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தைத் தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை அவர்கள் தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT