ADVERTISEMENT

“விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்” - தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை

03:21 PM Feb 21, 2024 | kavidhasan@nak…

2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது பொது வலைத்தளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ். குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்த்தரமான, வக்கிர மனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்க்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூற்றை, அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும், இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்கக் கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும், சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும். பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT