ADVERTISEMENT

கேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு? - பக்கத்து தியேட்டர் #5

06:03 PM Dec 07, 2019 | santhoshkumar

சென்ற வாரம் ‘ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி’ படத்தை பார்த்துவிட்டு பக்கத்து தியேட்டரில் நான்காம் பகுதியாக எழுதி முடித்தபோதே அடுத்த படமாக 'ஐரிஷ் மேன்' வரப்போகிறது என்ற ஆர்வமும் பதற்றமும் இருந்தது. காரணம்... உலக சினிமா அரங்கில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர், அவரை பார்த்து இன்ஸ்பையராகி சினிமாவிற்குள் வந்தவர்கள் பலர். சினிமாவின் மீது காதல்கொண்டு, அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவருடைய ‘டாக்ஸி டிரைவர்’ படம் இன்றும் ஒரு பாடமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு திரை மேதையான மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப் படமான ‘தி ஐரிஷ் மேன்’ படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம்... அது தரும் உணர்வை அப்படியே உங்களுக்குக் கடத்தவேண்டும் என்ற பதற்றம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மார்டினுக்கு ‘வுல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்’ படம் எடுக்கும்போதே வயது எழுபதை தாண்டி விட்டது. அந்தப் படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள். அப்போதுதான் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். ஒரு இளைஞனால் கூட அவ்வளவு இளமையாக ஒரு படத்தை எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை கொடுத்தது அது. கலைக்கும் கலையை சார்ந்தவர்களுக்கும் வயதில்லை என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு எழுபது வயதை தாண்டிய இளைஞனாக மார்டின் அந்தப் படத்தை எடுத்திருப்பார். இந்தப் படத்திற்குப் பின் 2016ல் ‘சைலன்ஸ்’ என்று ஒரு படம் எடுத்திருந்தார். ஆனால், அந்தப் படம் பெரிதாகப் பேசப்படவில்லை. இதனையடுத்து மூன்று வருடங்கள் கழித்து மார்ட்டினின் இயக்கத்தில் தற்போது வெளியாகி உலகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்படும் படம்தான் ‘தி ஐரிஷ் மேன்’. மார்டினின் படங்கள் ஒன்று பிடிக்கும், இல்லையென்றால் கொஞ்சம்கூடப் பிடிக்காது. ஒரு மனிதனின் தனிமையை இத்தனை அழகாகக் காட்சிப்படுத்த முடியுமா என்று கேட்க வைத்தது மார்டினின் 'டாக்ஸி ட்ரைவர்'. அது வெளியானபோது பெரிய ஹிட் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் தற்போது நாற்பத்தி மூன்று வயதாகும் அந்தப் படத்தை தற்போதுவரை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை எடுத்த மார்டினுக்கு தற்போது எழுபத்தி ஏழு வயதாகிறது. ஆனாலும், 2K கிட்ஸ் வரை அவரை தெரிந்துவைத்திருக்கிறார்கள், அவருடைய படங்களை புரிந்து, கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்கள்.

சார்லஸ் பிராண்டட் என்பவர் எழுதிய‘ஐ ஹியர்ட் யு பெயிண்ட் ஹவுஸஸ்’ என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘தி ஐரிஷ் மேன்’. கடந்த 2007ஆம் ஆண்டே இந்தப் படத்தை எடுக்க சில முயற்சிகளை மேற்கொண்டார் மார்டின். ஆனால், சில காரணங்களால் இது தள்ளிப்போக, தற்போது இது மார்டின் மற்றும் ராபர்ட் டி நீரோ இருவரின் தயாரிப்பில் சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிட்டு, பின்னர்தான் நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியிட்டார்கள். மார்டின் இயக்குகிறார், அதுவும் அவருடைய கனவுப் படம் என்பதைத்தாண்டி, மேலும் இதில் பல சிறப்புகள் இருக்கின்றன. ராபர்ட் டி நீரோ, மார்டினின் இயக்கத்தில் ஒன்பதாவது முறையாக நடிக்கிறார். அல் பசினோ, முதல் முறையாக மார்டினின் இயக்கத்தில் நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஜான் பெஸ்ஸி நடிக்கிறார். இந்த மூவரும் நடிப்பிற்காக அகாடமி விருது பெற்ற நடிப்பு அரக்கன்கள். மார்டின் என்ற ஒரு மாமேதையின் படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர்... என பற்பல சிறப்புகள் இருக்கின்றன.

சரி, படத்தின் சிறப்புகள் குறித்து இவ்வளவு பேசியாகிவிட்டது. இனி படம் பார்த்த அனுபவம் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்துப் பேசலாம். ஃபிராங் ஷீரன் (ராபர்ட் டி நீரோ) இரண்டாம் உலகப் போரில் சரணடைந்த அல்லது பிடிபட்ட எதிரி நாட்டு சிப்பாய்களை கொலை செய்யும் பணிபுரிந்துவிட்டு, உலகப்போர் முடிந்தவுடன் ட்ரக் ட்ரைவராகப் பணிபுரிகிறார். பிலாடில்பியா நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய கேங்ஸ்டர் குடும்பத்தின் கீழ் இயங்கும் ஒரு இறைச்சிக் கடையில் இறைச்சியை எடுத்துக்கொண்டு ஹோட்டல்களுக்கு டெலிவரி செய்யும் பணி. அப்போதுதான் ரஸ்ஸல் பஃப்பளினோ (ஜான் பெஸ்ஸி) என்பவருடன் நெருக்கமாக நட்பு ஏற்படத் தொடங்குகிறது. ஜான் பெஸ்ஸி, பிலாடில்பியாவில் மிகப்பெரிய கேங்ஸ்டர். அவருக்கும் மேலானவர் ஏஞ்சலினோ புரோனோ என்பவர். இவர்கள் இருவருக்கும் நேர்மையான, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்பவராக ஃபிராங்க் இருக்கிறார். ட்ரைவரிலிருந்து படிப்படியாக முன்னேறி சின்னச் சின்ன கொலைகள் செய்வதை பணத்திற்காக சைட் பிசினஸாக வைத்திருப்பார் ஃபிராங்க். ஒரு கட்டத்தில் ரஸ்ஸலுக்கு மிகவும் பிடித்தமானவராக, விசுவாசமானவராக மாறுகிறார் ஃபிராங்க். அவருடைய குடும்பமும், பெஸ்ஸியின் குடும்பமும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். பெஸ்ஸி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை அதனால் ஃபிராங்கின் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறார். ஃபிராங்கிற்கு குடும்பம், குட்டி என இருக்கிறது. இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவதற்காகவும், நட்பிற்காகவும், உலகப்போரில் நாட்டிற்காக செய்துவந்த பணியான கொலையை சர்வைவலுக்கான பணியாக செய்யத் தொடங்குகிறார்.


இந்தப் பணியினால் தன்னுடைய குழந்தைகளிடமும் அவரால் ஒட்டமுடியாத நிலை. அதேபோல அவருடைய குழந்தைகளும் அவரிடம் ஒட்டவில்லை. பெகி என்ற பெண் குழந்தையை அதிக முக்கியத்துவத்துடன் காட்டுகிறார்கள். 3 மணி நேரம் 29 நிமிட படத்தில் பெகி, வசனங்கள் பேசியது என்று பார்த்தால் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், பல காட்சிகளில் அவர் காட்டப்படுகிறார். அவருடைய மௌனப் பார்வைகளே ஃபிராங்கிற்கு பல விஷயங்களை உணர்த்தும்படியாகக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் மார்டின் ஸ்கார்சஸி. இதன்பின் ‘ஜிம்மி ஹாஃபா’ (அல் பசினோ) என்னும் மிகப்பெரிய லாரி டிரைவர்கள் யூனியன் தலைவருடன் ஃபிராங்கிற்கு நட்பு ஏற்படும், ரஸ்ஸலிடம் எப்படி நேர்மையாக இருந்தாரோ அதேபோலத்தான் ஜிம்மியிடமும் நட்பு பாராட்டுவார். படிப்படியாக வளர்ந்து யூனியனிலும் பெரிய ஆளாகிவிடுவார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலிருக்கும் கேங்ஸ்டர்கள், இந்த யூனியனுக்கு வரும் பணத்தை பெற முயல்வார்கள். ஆனால், ஜிம்மி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். பின்னர், ஒரு வழக்கில் ஜிம்மி கைது செய்யப்படுவார். அவருக்கு பதிலாக ஃபிட்ஸ் என்பவர் யூனியன் பதவியை பிடித்துக்கொள்வார். அவர் கேங்ஸ்டர்களுக்குத் தேவையான பணத்தை யூனியனின் மூலம் லோனாகக் கிடைக்க ஏற்பாடு செய்வார், லாரி ட்ரக் ட்ரைவர்களின் பென்சன் பணத்திலிருந்தும் கொடுத்து ஊழல் செய்வார்.

நிக்சன் என்னும் அதிபர் தரும் பொது மன்னிப்பால் சிறையிலிருந்து வெளியே வந்த ஜிம்மி ஹாஃபா மீண்டும் 'டீம்ஸ்டர்' என்னும் அந்த யூனியலில் போட்டிபோட வேண்டும் என நினைப்பார். ஆனால், இவர் கேங்ஸ்டர்களுக்குத் தோதானவர் இல்லை, இவர் அந்தப் பதவிக்கு வந்தால் அவர்களுக்குப் பணம் வராது என்பதால் வரவிடாமல் தடுக்க நினைப்பார்கள் அமெரிக்க கேங்ஸ்டர்கள். அதை ஃபிராங்க், ரஸ்ஸல் என்ற இரு நண்பர்களை வைத்து அவருக்குப் பேசிப் புரிய வைக்க முயற்சி செய்வார்கள் கேங்ஸ்டர்கள். இருந்தாலும் அமெரிக்க அதிபரையே ஆட்டிவைக்கும் அளவிற்கு ஒரு காலத்தில் கெத்தாக இருந்த ஜிம்மியின் மனநிலை எப்படி ஒப்புக்கொள்ளும்? 'இது சரிப்பட்டு வராது' என்று கேங்ஸ்டர்கள் அவரைத் தூக்க ஸ்கெட்ச் போடுவார்கள். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை, இது நிஜக்கதையும் கூட.நிஜத்தில், மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடந்தபின், ஜிம்மி ஹாஃபா என்பவர் ஒரு ஹோட்டலுக்கு சென்றுவிட்டு வெளியே வருவார். அதன்பின் மாயமானவர் என்ன ஆனார் என்பது இப்போது வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு சார்ல்ஸ் பிராண்டண்ட் என்பவர் ஃபிராங்க் ஷீரன் என்பவரை இந்த வழக்கு தொடர்பாக சந்திக்கிறார். அப்போது அவர், ‘நான் தான் ஜிம்மி ஹாஃபாவை கொன்றேன்’ என்று சொல்ல, அதை அப்படியே ‘ஐ ஹியர்ட் யு பெயிண்ட் ஹவுஸஸ்’ என்னும் நாவலாக எழுதுகிறார்.

ஃபிராங்க் என்ற ஒரு சாதாரணமானவனின் கதை அமெரிக்க வரலாற்றின் மூன்று பெரிய நிகழ்வுகளான முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடியின் கொலை, அமெரிக்காவின் பெரும் அச்சமாக இருந்த ஃபிடல் கேஸ்ட்ரோவின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் இவை அனைத்துடனும் இணைந்துள்ளது. இதுவே இந்தக் கதையை பெரிதும் சுவாரஸ்யப்படுத்துகிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஸ்டீவன் ஜேயிலின். மூன்று அடுக்குகளாகத் திரைக்கதையை கட்டமைத்துள்ளார் இவர். அதேபோல படத்தில் காட்டப்படும் அனைத்து கதாபாத்திரங்களுமே உண்மையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதால், ஒரு கதாபாத்திரம் புதிதாகக் காட்டப்பட்டால் அவர்கள் என்ன ஆனார்கள், எத்தனை முறை துப்பாக்கி தோட்டாக்கள் அவர்கள் உடலை துளைத்து இறந்தார்கள் என்பது கதாபாத்திரம் காட்டப்படும் பிரேமை ஃப்ரீஸ் செய்து, அந்தக் கதாபாத்திரத்தின் தலையில் எழுத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கும். இது ஒரு திரைக்கதை யுக்தி என்பதைத்தாண்டி அமெரிக்காவின் வரலாற்றில் கேங்ஸ்டர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்னும் உண்மையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

மார்டின், கேங்ஸ்டர் படங்கள் எடுப்பதில் வல்லவர் என்பது உலகம் அறிந்ததே. அவ்வாறு அவர் சொல்லப்பட காரணம் ஒரு நிழல் உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். அதேபோல தமிழக ரசிகர்கள் எல்லாம் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படம் பார்த்து காண்டாகக் காரணமாக அமைந்த வாய்ஸ் ஓவர் ஸ்டைலுக்கு, ஒன் ஆஃப் த ஓனர்ஸ் இவர். இந்தப் படத்திலும் வாய்ஸ் ஓவர்கள் வருகிறது. ஆனால், அயர்ச்சி கொடுக்கவில்லை. கதையை நகர்த்த 'செம'யாக செட்டாகி இருக்கிறது. அதேபோல கேங்ஸ்டர் படம் என்றால் இரத்தக்களரி, துப்பாக்கி எடுத்து டொப்பு, டொப்பு என்று சுடுவது, ஸ்லோ மோஷன் காட்சிகளில் கெத்தாக நடிகனை காட்டுவது என்பதோடு நிற்காமல் அதற்குள் நுண்ணுணர்வுகளையும் கடத்துவார் மார்டின். கண்டிப்பாக அதில் நட்பு, குடும்பப் பிணைப்பு, பாசம், நேசம் என பல எமோஷன்களை வேறுமாதிரியான கண்ணோட்டத்தில் காட்டுவதுதான் அவருக்கு பிடித்த ஒன்று. அதற்கு ஏற்றார்போல் தனது படத்தின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று அனைத்திலுமே நிதானத்தை கடைப்பிடிப்பார். இந்தப் படத்திற்கு ராபி பேட்டர்சன் இசையமைக்க, ரோட்ரிகோ பிரிடோ ஒளிப்பதிவு செய்ய, தெல்மா ஷூன் மேக்கர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘டி-ஏஜிங்’ என்று ஒரு யுக்தியை கையாண்டுள்ளனர். இதனால் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார்போல் நடிகர்களின் வயது, தோற்றம் என்று வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். மற்ற படங்களில் இந்த யுக்தி கையாளப்பட்டதைவிட இதில் கொஞ்சம் நன்றாகவே கையாண்டிருக்கிறார்கள் என்று பாராட்டுகிறார்கள். படத்திற்கான செலவுகளில் இந்தத் தொழில்நுட்பத்திற்குதான் பெரும் பகுதி செலவிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் நடித்த அந்த மூன்று முக்கிய புள்ளிகளின் நடிப்பை பற்றியும் நாம் சொல்லவே தேவையில்லை. அவர்களின் நடிப்பை ரெஃபரன்ஸாக வைத்துதான் கடந்த முப்பது வருடங்களாகப் பல நடிகர்கள் நடிக்கிறார்கள். நம்மூர் கமல்ஹாசன் கூட, அல்பாசினோவின் நடிப்பை ரெஃபரன்ஸாக நடிக்கத் தொடங்கிய சமயத்தில் எடுத்துக்கொண்டார். சமயங்களில் அவர்களின் வயது மூப்பு என்பது பிஸிக்கலாக நமக்குத் தெரிய வருகிறது என்றாலும் அதை எப்படியாவது அவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மறைத்துவிடுகிறது. குறிப்பாக பல வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் ஜோ பெஸ்ஸியின் நடிப்பை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அதிலும் இறுதியில் சிறையில் மிகவும் வயதானவராக நடிக்க அவர் எடுத்திருக்கும் நுணுக்கமான முயற்சி நம்மை வாய்ப்பிழக்கச் செய்கிறது.

படத்தை முழுவதுமாகப் பார்த்தபின் தோன்றியது, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 95 சதவீதம் ஆண்கள்தான், அதிலும் வந்த ஆண்களில் பலரும் வயது முதியவர்கள்தான். ஆனால், இந்தப் படத்தில் அவர்களுடைய வேலையால் இளைஞர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இப்படி திரை மேதைகளாக ஒன்றிணைந்து எடுத்த காவியத்தை சற்று பொறுமையுடன், நெட்பிளிக்ஸ் என்பதால் பாஸ் செய்து பாஸ் செய்து பார்க்காமல் ஒரே மூச்சாகப் பார்த்து ரசியுங்கள் என்பதும் மொபைலில் பார்க்காதீங்க ப்ளீஸ் என்பதும் இயக்குனர் மார்டினின் கோரிக்கை. என்னுடைய பரிந்துரையும் அதே!

முந்தைய படம்: கார் ரேஸும் கார்ப்பரேட் அரசியலும்! ஃபோர்ட் v ஃபெராரி - பக்கத்து தியேட்டர் #4


அடுத்தப் படம்: அவெஞ்ஜர்ஸ் வசூலை மிஞ்சும்ன்னு சொன்னாங்க... எப்படி இருக்கு ஸ்டார்வார்ஸ்? - பக்கத்து தியேட்டர் #6

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT