Skip to main content

கார் ரேஸும் கார்ப்பரேட் அரசியலும்!  ஃபோர்ட் v  ஃபெராரி - பக்கத்து தியேட்டர் #4 

Published on 29/11/2019 | Edited on 07/12/2019

மலையாளப் படம் 'ஜல்லிக்கட்டு'க்குப் பிறகு எந்தப் படத்துக்குப் போகலாம் என்று பார்த்திருந்து சில காரணங்களால் நிவின் பாலி நடித்த மலையாளப் படமான 'மூத்தோன்' படத்தையும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'பாலா' படத்தையும் தவறவிட்டேன். சரி, பொறுத்தது பொறுத்தாச்சு தலைவன் கிறிஸ்டியன் பேல் நடிச்ச ‘ஃபோர்ட் v  ஃபெராரி’ படம் வந்திருக்கிறது. இந்த முறை மிஸ்ஸாகிடாது என்று செம எதிர்பார்ப்போடு சென்று பார்த்தேன். சற்றும் ஏமாற்றவில்லை ‘ஃபோர்ட் v  ஃபெராரி’. 
 

ford vs ferrari

 

 

ஃபோர்ட் v ஃபெராரி படத்திற்கான எதிர்பார்ப்பை முதலில் தூண்டியவர்கள் கிறிஸ்டியன் பேல் மற்றும் மேட் டாமன் இருவரும்தான். கிறிஸ்டியன் பேல், ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னுடைய உடம்பை வருத்திக்கொண்டு, படத்தின் கதாபாத்திரமாக மாறுவதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் மெனக்கெடலுக்காகவே அவர் நடிக்கும் படங்களை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், போன படத்தில் அவருடைய தோற்றத்தை பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் அவர் எந்தத் தோற்றத்தில் இருக்கிறார் என்பதை பாருங்கள், நான் சொல்வது புரியும். அவரை தொடர்ந்து போர்னே சீரிஸ் படங்கள் இந்தியாவில் ஃபேமஸ் என்பதால் மேட் டாமனுக்கு நம்மூரிலும் ரசிகர்கள் உண்டு. 

இவர்கள் இருவர் மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் கதைக்களமும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தது. ஆமா, அப்படி என்ன கதைக்களம் என கேட்கிறீர்களா? இந்தப் படத்தின் டைட்டிலிலேயே இருப்பதுதான். ஃபெராரி கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருக்கும்போது அந்த கம்பெனியையும், ரேஸிங் டீமையும் வாங்கிக்கொள்ள விரும்புவதாக ஃபோர்ட் நிறுவனம் ஃபெராரி நிறுவனத்திடம் தெரிவிக்கும். டீல் பேசுவதற்காக ஃபெராரி நிறுவனம், ஃபோர்ட் நிறுவனத்தை ஒரு சந்திப்பிற்கு அழைக்கும். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க, கடைசி நேரத்தில் ஃபெராரி கம்பெனியின் தலைவர் என்சோ ஃபெராரி, ஃபோர்ட் நிறுவனத்தையும் ஃபோர்டின் அப்போதைய சேர்மேன் ஹென்ரி போர்ட்-2 வையும் அவமதித்துவிட்டு, தனது நிறுவனத்தை ஃபியட் நிறுவனத்திற்கு ஒரு நல்ல விலைக்கு விற்றுவிடுவார். அப்போதுதான், இவ்வளவு நேரம் தங்களுடன் ஃபெராரி நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை, ஃபியட் நிறுவனத்திடம் விலையை ஏற்றுவதற்கான ஒரு தந்திரம் என ஃபோர்ட் நிறுவனத்திற்குப் புரியும்.

உடனடியாக ஃபோர்ட் நிறுவனத்தின் தலைவர் ஹென்ரி ஃபோர்ட் 2, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ரேஸிங்கில் உன்னை தோற்கடித்தே தீருவேன்' என அண்ணாமலை பட ரஜினி ஸ்டைலில் சபதம் எடுக்கிறார். ரேஸிங்கில் கெத்தாக இருந்த ஃபெராரி கம்பெனியை எப்படி ரேஸிங்குக்குள் புதிதாக வந்த ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தோற்கடித்தது என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். இது ஒரு உண்மை சம்பவம். 1966ஆம் ஆண்டு லி மான்ஸ் 24 மணிநேர ரேஸிங்... மோட்டார் ரேஸிங் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த ரேஸிங், குறிப்பாக அந்த வருட டோர்னமெண்ட் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். ரேஸிங்கில் ஃபெராரி என்னும் டீம் தன்னுடைய ஆறாவது தொடர் வெற்றியை பதிவு செய்யும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், புதிதாக வந்த ஃபோர்ட் நிறுவனத்தின் கீழ், ரேஸிங்கில் கலந்துகொண்ட மூன்று கார்களும், முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினார்கள். அதுவும் ஒரு சேர ரேஸிங் எல்லைக்கோட்டினை தொடும் வரலாற்றுப் புகைப்படமும் அந்த ரேஸிங்கில் கிடைத்தது. இப்படி உண்மை சம்பவங்களை உள்ளடக்கியிருந்தாலும் தேவையான சம்பவங்களை மட்டும் படத்தில் சேர்த்து சினிமாவுக்கான சுவாரஸ்யத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் மேங் கோல்ட்.
 

racing


1966 லி மான்ஸ் ரேஸிங்கில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை பிடித்த டீமின் கன்ஸ்ட்ரக்டர் மற்றும் ரேஸசரை மையமாக வைத்துதான் படத்தின் கதை சொல்லப்படுகிறது. மேட் டாமன், 'கோரல் செல்பி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  2ஆம் உலகப்போரில் பணிபுரிந்த ஆர்மி மேன், பின்னர் ரேஸர், இறுதியாக ரேஸிங் கார் டிசைன் செய்யும் கன்ஸ்ட்ரக்டர், இப்படி பல வேலைகள் புரிந்தவராக வரும் மேட் டாமன் தனக்குக் கொடுத்த பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் டிசைன் செய்யும் காரை, ஓட்டத் தகுதியானவர் என்று தனது கோபக்கார நண்பரான கென் மைல்ஸை தேர்ந்தெடுப்பார். கிறிஸ்டியன் பேல்தான், 'கென் மைல்ஸ்' கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஒரு தந்தையாக, முன்னாள் ஆர்மி மேனாக, கஷ்டங்கள் இருந்தாலும் குடும்பத்தில் கோபத்தை காட்டாத, ஆனால் வெளியுலகில் பார்க்கும் அனைவரிடமும் முரடு பிடிக்கும் குணம் கொண்டவராக, 'இதெல்லாம் எனக்கு ஜுஜுபி' என்பதுபோல அசால்ட்டாக நடித்திருக்கிறார் பேல். இவர்கள் இருவரும் படம் நெடுக வர, மொத்தமாகப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் 10 பேர்தான் வருவார்கள். மற்றவர்கள் எல்லாம் அட்மாஸ்பியர் கணக்குதான்.

உலகின் இரண்டு பெரிய கார் நிறுவனங்கள் பற்றி இவ்வளவு அப்பட்டமாக எடுத்ததற்கே இந்தப் படத்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதற்காக, கதைக்களம் நன்கு வலுவாக இருந்தால் மட்டும் போதுமா? எந்தக் கதாபாத்திரத்தையும் திறம்பட நடிப்பவர்கள் படத்தில் நடித்தால் மட்டும் படம் நன்றாக இருந்துவிடுமா? திரைப்படத்தை முதலில் சுவாரஸ்யப்படுத்துவது என்பது அதன் எழுத்துதான். அதில் இந்தப் படம் பெரிதாக மெனக்கெடல் செய்திருக்கிறது. 'லோகன்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் மாங்கோல்ட், இந்தப்  படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையை இவருடன் சேர்ந்து ஜெஸ் பட்டர்வொர்த், ஜான் - ஹென்ரி பட்டர்வொர்த், ஜேசன் கெல்லர் எழுதியுள்ளனர். இந்தப் படம் ஒரு ரேஸிங் படமாக மட்டுமல்லாமல், கார்ப்பரேட் அரசியல், குடும்ப செண்டிமெண்ட் என்று பல தளங்களில் பேசியிருக்கிறது. பொதுவாகவே ரேஸிங் படங்களில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் ரேஸிங் என்பது ஒரு சின்ன பகுதியாகத்தான் வருகிறது. அந்த ரேஸிங் காட்சிகள் வரும்போது விறுவிறுப்பாகக் காட்டுவதற்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று மூன்றுமே கைக்கோர்த்து வெற்றி பெற்றிருக்கின்றன. ரேஸிங் காட்சிகள் இல்லாத மற்ற நேரங்களில், மிகவும் பொறுமையாக கதையை நகர்த்தியுள்ளனர். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை நம்மை புன்னகைக்க வைக்கிறது.

எந்தவொரு விஷயமாக இருந்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தெரிவது ரெவன்யூ என்னும் பணமும் பிராண்டிங் என்னும் பேரும் புகழும்தான். ஆனால், ரேஸிங் போன்று ஏதாவது ஒரு விஷயத்தை உயிராக நினைப்பவர்களுக்கு அப்படியில்ல என்பதை உணர்த்துகிறார்கள். ரேஸை பற்றித் தெரியாதவர்களுக்கும், ரேஸ் பிடிக்காதவர்களுக்கும் இந்தப் படத்தை பார்த்தால் புரியும், பிடிக்கும். அத்தனை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. மெலோ டிராமாபோல் இந்தப் படம் அணுகப்பட்டிருப்பதால் சிலருக்கு நீளம் அயர்ச்சியை தரலாம்.
 

christian bale

 

 

பிடோன் பாபமைக்கேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேஸிங் காட்சிகளில் வேகமாக நகரும் இவருடைய கேமரா யுக்திகள், படம் பார்க்கும்போது ஒரு படபடப்பை கொடுத்தது உண்மை. ரேஸிங் படம் என்றாலே வரும் டெம்பிளேட் ஷாட்களை தவிர்த்து நிறைய புதிய ஷாட்களை படத்தில் காட்ட முயற்சி செய்திருக்கிறார். மைக்கேல் மெக்கஸ்கர், படத்தொகுப்பு செய்துள்ளார். தேவையான செண்டிமெண்ட் சீன்களில் நிதானத்தையும், ரேஸிங் சீனில் வேகத்தையும் கையாண்டிருக்கிறார். படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப தேவையான படத்தொகுப்பை அவர் கொடுத்ததால்தான் இந்தப் படத்தை தற்போது ஒரு மாஸ்டர் பீஸாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பின்னணி இசையை மார்க்கோ பெல்த்ராமி வடிவமைத்திருக்கிறார். அவருடைய பின்னணி இசையும், சவுண்ட் எஃபெக்ட்ஸும் சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

மொத்தத்தில், மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்துக்காகப் பசியுடன் காத்திருப்பவர்களுக்கு ஃபோர்ட் vs ஃபெராரி ஒரு விருந்து படைத்திருக்கிறது. 
 

முந்தைய படம்: கேரளாவில் இருந்து ஒரு ஜல்லிக்கட்டு! - மனிதன் மிருகமாகும் தருணம்... பக்கத்து தியேட்டர் #3

அடுத்த படம்: கேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு? - பக்கத்து தியேட்டர் #5

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11

Published on 11/06/2020 | Edited on 11/06/2020
choked


பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை கேட்டிருப்போம். அதுபோல ஒரு வீட்டையும், நாட்டையும் பணம் என்ன செய்கிறது என்பதைத்தான் 'சோக்ட் : பைசா போல்தா ஹை' படம் விளக்குகிறது. ரொமான்ஸ், ஃபேமிலி, மசாலா என்று சென்றுகொண்டிருந்த பாலிவுட்டை உண்மையான வட இந்தியா, சாதாரண மக்கள் என்று சராசரி மனிதர்களின் வாழ்வியலை சினிமாத்தனத்துடன் படமாக்கி சர்வதேச அளவில் பிரபலமான அனுராக் காஷ்யப்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் எந்தத் திரையரங்கும் திறக்கப்படாத நிலையில் ரிலீஸுக்கு காத்திருந்த படங்கள் வேறுவழியின்றி ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அனுராக் காஷ்யப் டிஜிட்டல்தான் அடுத்த தலைமுறையினருக்கானது என்பதை முன்பே நன்கு அறிந்தவர், நெட்ஃப்ளிக்ஸின் சொத்தாகவே மாறிவிட்டார். இதுவரை இரண்டு குறும்படங்கள், ஒரு தொடர், தற்போது இந்த முழு நீளப்படம் என அவருடைய  நெட்ஃப்ளிக்ஸ் ஃபில்மோக்ராஃபி நீள்கிறது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய நடிப்பால் அனுராக் காஷ்யப்பை கவர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் ரோஷன் மேத்யூஸ். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படம் மட்டுமே நடித்த ஷயாமி கெர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய நாள் நவம்பர்  8 2016... 'டிமானிடைசேஷன்' என்ற வார்த்தை யாராலும் மறக்க முடியாதது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தை பின்னணியாக வைத்து, மும்பையில் வாழும் மிடில் கிளாஸ் குடும்பத்துடன் பின்னப்பட்ட பணமதிப்பிழப்பு கதைதான் 'சோக்ட்' (chocked). சரிதா, வங்கி வேலைக்குச் சென்று கணவன் சுஷாந்த் மற்றும் குழந்தை ஆகிய  இருவரையும் கவனித்துக்கொள்ளும் பெண். சுஷாந்த், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு வேலையிலும் நிரந்தரமாக இல்லாத, குடும்ப கஷ்டத்தை உணராத அப்பா. சரிதாவுக்கு பெரிய பாடகியாக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஒரு முறை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூடியிருந்த மக்களை பார்த்து வாயடைத்துப்போய் போட்டியை விட்டு வெளியேறுகிறாள். இது அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தான் ஒரு தோல்வியடைந்தவள் என்கிற வருத்தம் ஒரு பக்கம், கணவனும் வீட்டின் கஷ்டத்தை  உணர்ந்து செயல்படவில்லை என்கிற விரக்தி ஒரு பக்கம்... மொத்தமாக பணம்தான் இவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருந்தபோது கிச்சன் சிங்க்கிலிருந்து வெளியாகும் சாக்கடையில் சுருள் சுருளாகப் பணம் வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை!
 

choked


பெரும்பாலான மக்கள் 'இது நாட்டின் முன்னேற்றத்திற்காக' என்று நம்பி எவ்வளவு பெரிய சிரமம் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு கியூவில் நின்றனர். ஆனால், கியூவில் நின்றவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது, அந்த இரவில் இடப்பட்ட அந்த திடீர் உத்தரவு இந்திய பொருளாதாரத்தை சோதித்துப் பார்க்கும் என்று. டிமானைடைசேஷன் காலத்தில் நடைபெற்ற அவலத்தை விட அதற்கு ஆதரவாக வந்த வாட்சப் பார்வேர்ட் மெசேஜ்களை தற்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் பலரும் கடும் கோபத்திற்கு ஆளாவோம். அந்தக் கோபம், கால் கடுக்க கியூவில் நின்று கடைசியாக வங்கிக்குள் நுழைகையில் 'பணம் இல்லை நாளைக்கு வாருங்கள்' என்று சொன்னதை நினைத்துப் பார்த்தால் கூட  வரவில்லை. அவ்வளவு நம்பிக்கை தந்து ஏமாற்றிய அந்த மெசேஜ்களை நினைத்தால் வலிக்கத்தானே செய்யும். அத்தனை வலியையும் சோகமாக சீரியசாக சொல்லும் படமாக அல்லாமல், வேறு சில கோணங்களையும் காட்டியிருக்கும் கற்பனை கதையுடன் களமிறங்கியிருக்கிறார் காஷ்யப்.

இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 15 பேர்தான் இருப்பார்கள். அதில் நான்கு பேரின் நடிப்பு அட்டகாசம். மிடில் கிளாஸ் குடும்பமாகவே வாழ்ந்த சரிதா, சுஷாந்த், இவர்களின் மகன் மற்றும் 'தாய்' என்று அழைக்கப்படும் பக்கத்து வீட்டுக்காரப் பெண். இந்த பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அப்படியே மும்பை மனிதர்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அதுவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிமானிடைசேஷனை அறிவிப்பதை கேட்டவுடன் 'தாய்' கொடுக்கும் ரியாக்ஷனில் அவரது நடிப்பு புதுமையானது. கண்டிப்பாக பல மீம்களாக வலைத்தளத்தில் உலா வர வாய்ப்புள்ளது. நடிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அதே போல த்ரில்லிங்கான திரைக்கதை எழுத்தும், விமர்சனமாகவும் பிரச்சாரமாகவும் இல்லாமல் சுவாரசியமான திரைப்படமாக உருவாக வழிவகுத்துள்ளது. அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை கேட்டு  எழுதப்பட்டதுபோல வசனங்கள் இருக்கின்றன. நடந்ததை நடந்தபடியே, அதுவும் இந்த சினிமாவின் கதைக்கு என்ன தேவை இருந்ததோ அதை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறார் அனுராக். மசாலா படங்களில் மக்களை உணர்வுப்பூர்வமாகத் தூண்டுவதற்குப்  பயன்படுத்தும் சோஷியல் மெசேஜ் யுக்திகள் இல்லாமல் ரியலிசத்தை நம்பிப் பயணித்திருக்கிறது படம். வழக்கம்போல தொழில்நுட்பங்களிலும், கலை, இசை ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டிருக்கிறது அனுராக்கின் படக்குழு.

பல இடங்களில் ஆளும் அரசை, மோடியை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அது 'ரா'வான அரசியலாக இல்லாமல் சுவாரசியமாக இருக்கிறது. படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்திருந்தால் சென்சார் போர்ட் இதை லாக் செய்து வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். பெண்ணை மையமாக வைத்து நகரும் கதையை இந்தியாவில் நடைபெற்ற பெரும் நிகழ்வின் பின்னணியில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக எடுத்ததன் மூலம் அனுராக் காஷ்யப், பேக் டு ஃபார்ம்... 
 

முந்தைய படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10

 

Next Story

மலையாளத்தில் ஒரு 'சைக்கோ' படம்! இது எப்படி இருக்கு? பக்கத்து தியேட்டர் #9

Published on 09/02/2020 | Edited on 04/03/2020

2018ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ராட்சசன்'. இது ஏற்படுத்திய தாக்கம், வேறு எந்த சைக்கலாஜிக்கல்/ சீரியல் கில்லர் ஜானர் வகையறாக்கள் படம் பார்த்தாலும் அதோடு ஒப்பிட வைக்கிறது. இதன் தாக்கமோ என்னவோ சமீபத்தில் வெளியான 'சைக்கோ' படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. சைக்கோ வெளியான அதே வாரத்தில் மலையாளத்தில் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படமான ‘அஞ்சாம் பாதிரா’ வெளியாகியுள்ளது. மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவு, சரி இதை பார்க்கலாம் என்று தோன்றியது.

 

kunjako boban



தமிழக சினிமா ரசிகர்களுக்கு 'வைரஸ்' படத்தின் மூலம் அறிமுகமான குஞ்சாக்கோ போபன்தான் இதில் நாயகன். நாயகன் என்று சொல்வதை விட முக்கிய பாத்திரம் என்று சொல்வதுதான் மலையாளப் படங்களுக்கு சரியாக வரும். அந்த அளவுக்கு பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுபவர்கள் அவர்கள். இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில் உதவி செய்யும் கிரிமினாலஜிஸ்ட்டாக பணிபுரிந்திருக்கிறார். 'கும்பலாங்கி நைட்ஸ்' புகழ் ஸ்ரீநாத் பாஸியும் இந்தப்  படத்தில் சைபர் ஹேக்கராக நடித்திருக்கிறார். வழக்கம்போல அவருடைய வெகுளியான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். டிசிபியாக நடித்திருக்கும் உன்னிமயா பிரசாத், ஏசிபியாக நடித்திருக்கும் ஜினு ஜோசப் என்று படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மலையாளத்தில் சமகாலத்தின் சிறந்த நடிகர்களாக பெயர் பெற்று வரும் பலரும் படத்தில் இருப்பது பெரும் பலம்.


'அஞ்சாம் பாதிரா' என்றால் ஐந்தாவது நள்ளிரவு என்று அர்த்தம். கொச்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்கள் மற்றும் இதயம் பிடுங்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலருகில் அருகில் கண்கள் கட்டப்படாத ஒரு நீதி தேவதை சிலை கிடைக்கிறது. இந்தக் கொலை குறித்த விசாரணை நடக்கும்போது விசாரணைக்குழுவுடன் இருக்கும் கிரிமினாலஜி  துறை பேராசிரியர் அன்வர், இது ஒரு சாதாரண கொலை அல்ல, ஒரு சைகோவினால் செய்யப்பட்டதாக இருக்கும், இது தொடர வாய்ப்புள்ளது என்று கருதுகிறார். அதுபோலவே இரண்டாவதாக ஒரு போலீஸ்காரரும் கடத்தப்பட்டு, அதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்தத் தொடர் கொலைகளின் நோக்கம் என்னவாக இருக்கும், ஏன் போலீஸ் அதிகாரிகளை குறி வைக்க வேண்டும் என்பதுதான் 'அஞ்சாம் பாதிரா'.

 

 

anjam padhira



இதுவரை நாம் பார்த்த பெரும்பாலான சைக்கோ/சீரியல் கொலை வகை படங்களில் என்ன டெம்ப்லேட் இருந்ததோ அதில் எதுவும் மிஸ்ஸாகாமல் இந்தப் படத்தில் இருக்கிறது. அதே வரிசையில் காட்சிகள் வருகின்றன. ஆனால், அந்த டெம்ப்லேட்குள்ளேயே நம்மை பதற வைக்கும் கொலை காட்சிகளையும் அதிர வைக்கும் திருப்பங்களையும் உருக வைக்கும் ஃபிளாஷ்பேக்கையும் கொண்டு வந்ததுதான் படத்தின் வெற்றி. இந்த வகையறா படங்களில் திகிலை ஏற்படுத்த சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசையை ஆயுதமாகக் கையாழுவார்கள். அதை 'ராட்சசன்' படம் பக்காவாகக் கையாண்டிருக்கும். அதைப்போல இதிலும் சரியாகக்  கையாண்டிருக்கிறார்கள். சில இடங்களில் 'ராட்சச'னை நினைவுபடுத்துகிறார்கள். இந்தப் படத்தில் வரும் சைக்கோ வெறும் சைக்கோ அல்ல. அந்தப் பாத்திரத்தின் புத்திக்கூர்மையும் பின்னணியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.


முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாகத்தான் நகர்கிறது. மலையாளப் படங்களில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பவற்றில் முக்கியமாக இருப்பது அந்த நிலப்பரப்பும், கதையில் இருக்கும் யதார்த்தமும்தான். ஆனால், இந்தப் படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது. அதிகமான மலையாள சினிமாக்களில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகப் பார்த்த நமக்கு கொச்சி நகரை முழுவதுமாக மையப்படுத்திக் காட்டிய ஏரியல் ஷாட் புதுமையாக இருந்தது. ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உணர வைக்கிறார்.

 

 

anjam padhira2



மிஷ்கினின் 'சைக்கோ'வுடன் ஒப்பிட்டு பலரும்இந்தப் படத்தை பாராட்டுகிறார்கள். தமிழ் சைக்கோவில் 'கொலை செய்தது யார்?' என்பது கேள்வியே அல்ல, 'எப்படி எதற்காக' என்பதுதான் முக்கிய புள்ளி. ஆனால் 'அஞ்சாம் பாதிரா'வில் கொலை செய்தது யார், எதற்கு என்ற இரண்டு கேள்விகளும் முதல் பாதி முழுவதும் மிக அழுத்தமாக நம் மனதில் எழ, இரண்டாம் பாதியில் அதற்கான விடைகளும் ஓரளவு திருப்திகரமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக சினிமாக்களை கண்டு களித்தவர்களுக்கு இது ஒரு ஓகே ரேஞ்ச் படமாகத்தான் இருக்கும். ஆனால், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்கிற ஜானரை மோசம் செய்யாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் இது. படத்தை முழுவதுமாக பார்க்கும்போது 'இது ஒரு சைக்கோ படமா' என்ற கேள்வியும் எழுகிறது. நீங்களும் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது சைக்கோ படமா இல்லையா என்று. 

முந்தைய படம்: உலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா? பக்கத்து தியேட்டர் #8

அடுத்தப் படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10