Skip to main content

கேரளாவில் இருந்து ஒரு ஜல்லிக்கட்டு! - மனிதன் மிருகமாகும் தருணம்... பக்கத்து தியேட்டர் #3

Published on 25/10/2019 | Edited on 07/12/2019

கடந்த அக்டோபர் நான்காம் தேதி தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 'அசுரன்' படம் வெறித்தனமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் 2ஆம் தேதி வெளியான ஜோக்கரும் தமிழ்ப் படங்களுக்கு நிகராக சென்னையில்  ஓடிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் சினிமா காதலர்கள் பலரும் 'இரண்டு நல்ல படமும் பாத்தாச்சு, அந்த இன்னொரு படமும் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆகியிருந்தா செமயா இருந்திருக்குமோ' என்று புலம்பிக்கொண்டிருந்தனர். ஆம், லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜல்லிக்கட்டு' படம் அக்டோபர் 4ஆம் தேதி கேரளாவில் மட்டும் வெளியானது. ஆனால், அந்தப் படத்தை எதிர்பார்த்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் பலர் காத்திருந்தனர்.
 

jallikattu


இயக்குனர் லிஜோவின் 7வது படமான இந்த ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கக் காரணம், 'அங்கமாலி டைரீஸ்' என்ற படத்தை அவர் இயக்கியதுதான். 'பிரேமம்' படத்தின் மூலம் தமிழர்கள் பலருக்கு மலையாள படங்களின் மீது ஆர்வம் ஏற்பட்டபோது அவர்களுக்கு ஒரு விருந்தாக அந்த சமயத்தில் அமைந்த படம்தான் 'அங்கமாலி டைரீஸ்'. நாயகன், சிட்டி ஆஃப் காட், ஆமின், டபுள் பேரல் என்று அங்காமாலி டைரீஸுக்கு முன்பாக நான்கு படங்கள் எடுத்திருந்தார் லிஜோ. ஆனால், அங்காமாலி... படத்திலிருந்துதான் இவரை கேரளாவைத்தாண்டித் தெரிய ஆரம்பித்தது. இந்தப் படத்தை அடுத்து 'ஈ.மா.யூ' என்ற படத்தை இயக்கினார். இதுவும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, லிஜோவுக்குப் பேர் வாங்கிக்கொடுத்தது. இதன்பின்தான் 'ஜல்லிக்கட்டு' என்ற படத்தை லிஜோ பெல்லிசரி இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தின் தலைப்பினால் தமிழகத்திலும் எதிர்பார்ப்பு எகிறியது.

முதலில் தியேட்டரில் ரிலீஸாகாமல் அமெரிக்காவில் நடைபெற்ற டொரண்டினோ திரைப்பட விழாவில் படம் பங்குபெற்று பலரின் கவனத்தையும் பெற்றது. பின்னர், ரிலீஸாகிய டீஸரும், ட்ரைலரும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்ப, அக்டோபர் நான்காம் தேதி நோக்கி காத்திருக்கையில், படம் இப்போது கேரளாவில் மட்டும்தான் ரிலீஸ் மற்ற மாநிலங்களில் இரண்டு வாரங்களுக்கு பின்புதான் ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டது. அதேபோல அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸானது.

சரி, படத்திற்கு வருவோம். கேரளாவில் இடுக்கி பகுதிக்கு அருகில் ஒரு மலை கிராமத்தில் கசாப்புக் கடைக்கு வந்த எருமை மாடு ஒன்று வெட்டப்படப்போகும் முன் கடைசி நேரத்தில் தப்பித்துவிடுகிறது. இதன்பின் அது செய்யும் அட்டகாசமும், அதை பிடித்தே ஆக வேண்டும், ஒரு எருமை நம்மை இவ்வளவு தொந்தரவு செய்யுமா, அதை கொன்றே தீர வேண்டும் என்கிற கிராம மக்களின்(குறிப்பாக ஆண்கள்) வெறியும்தான் கதை. உண்மையிலேயே இவ்வளவுதான் கதை. இந்தக் கதைக்கா மேலே இவ்வளவு பில்டப் கொடுத்தான் இவன் என்று யோசிக்க வேண்டாம். இந்தக் கதையும், சிறுகதை எழுத்தாளர் எஸ்.ஹரீஸ் என்பவருடைய மாவோயிஸ்ட் சிறுகதையிலிருந்து தழுவி படமாக்கப்பட்டது. இந்தப் படத்திற்காக திரைக்கதை எழுதியவர்கள் எஸ்.ஹரீஸ் மற்றும் ஆர்.ஜெயக்குமார்.

இந்தப் படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல திரை அனுபவமாக இருக்கும். ஒளியில் தொடங்கி ஒலிவரை புதுப்புது அனுபவத்தைக் கொடுத்து கதை பற்றியெல்லாம் யோசிக்கவிடாமல் ஒரு பதற்றத்துடனும் எழுத்தின் சுவாரஸ்யத்தால் அவ்வப்போது  வரும் காமெடிகளால் நம்மை கவர்ந்துகொண்டே இருப்பார்கள். படம் முதலில் எக்ஸ்ட்ரீம் குளோஸப் ஷாட்டில் தொடங்குகிறது, படத்தில் வரும் சில கதாபாத்திரங்களில் கண் விழிப்பை காட்சிப்படுத்திக்கொண்டே 'டிக் டிக்' என்று கடிகாரத்தின் சத்தம் நமக்கு ஒரு பதற்றத்தை கொடுக்கிறது. அதன்பின் ஒவ்வொருடைய மூச்சுக்காற்று சத்தம், அதன்பின் காட்டில் இருக்கும் பூச்சிகளின் சத்தம் என தொடர்ந்து பின்னர் கழுகுப் பார்வையில் கிராமத்தைக் காட்டுகிறார்கள். ஒரு கிராமத்துக்கான இத்தகைய அறிமுகமே நமக்கு முற்றிலும் புதிது. அந்த கிராமத்தின் உணர்வை, வாசத்தை, பழக்கவழக்கங்களை நமக்குள் கொண்டு வருகிறது இந்த அறிமுகம். 
 

kaithi


கிராமத்தில் கசாப்புக்கடை வைத்திருப்பவராக செம்பன் வினோத் ஜோஸ் இருக்கிறார். அவருடைய உதவியாளராக ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கிறார். செம்பனின் தங்கையாக சாந்தி பாலச்சந்திரன்(சோபி). கசாப்புக்கடையில் முன்னாள் உதவியாளராக சபுமோன் அப்துசமாத் நடித்திருக்கிறார். சபுமோன், குட்டச்சனாக வருகிறார். மாட்டை தவறவிட்ட ஆண்டனி வர்கீஸ், அந்த மாட்டை நான்தான் பிடித்துக் கொல்வேன் என்கிறான். முன்னாள் உதவியாளனும் அந்த மாட்டைக் கொல்வதற்காக வரவழைக்கப்படுகிறான். கிராமத்தில் விளைநிலத்தை சேதப்படுத்தியதாலும், மக்களை பீதி அடைய செய்ததாலும் எருமை மாட்டை கொல்ல வேண்டும் என்ற வெறியுடன்  அனைவரும் சுற்றுவார்கள். பல வேறுபாடுகள் இருந்தாலும் அந்த எருமை மாட்டைக் கொல்ல மட்டும் கிராமமே கூடுகிறது. இதற்கு நடு நடுவே கிராமத்தில் இருக்கும் சிலரை பற்றியும், அவர்களின் கதாபாத்திரத்தை பற்றியும் விவரிக்கிறார், லிஜோ. ஒரு விலங்கைக்  கொல்ல மனித கூட்டமே மிருகமாக மாறி அலையும். எத்தனை கல்வி, அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும் ஒரு கூட்டமாக சேரும்போதும் சந்தர்ப்பங்கள் வரும்போதும் மனிதனுக்குள் உருவாகும் 'மாப் மெண்டாலிட்டி' எனப்படும் கூட்ட மனப்பான்மை எப்படி மிருகத்தன்மையாகிறது என்பதை மிக சுவாரசியமாக சிறப்பான திரைமொழியில் சொல்லியிருக்கிறார் லிஜோ.  

முதலில் எருமை மாட்டை காட்டவே மாட்டார்கள், ஆனால் அந்த எருமை மாட்ட அவர்கள் காட்டுவதற்கு முன்பு கொடுக்கும் பில்டப் நமக்கு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் 'ஜாஸ்' படம் பார்ப்பதுபோன்ற உணர்வை தருகிறது. ஆமாம், அதில் சுறா வரும்போது சுறாவையே காட்ட மாட்டார்கள். சுறாவின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கேமரா நகரும். அதுவே நமக்கு ஒரு பதற்றத்தை கொடுக்கும் அல்லவா? அந்த வழியைத்தான் இதிலும் கையாண்டிருப்பார்கள். எருமை மாட்டை ஒரு சில காட்சிகளில்தான் உண்மையாக பயன்படுத்தியுள்ளனர். பல காட்சிகளில் எருமைபோன்ற அனிமாட்ரானிக்ஸ், வி.எஃப்.எக்ஸ்ஸும்தான். ஆனால் நமக்கு எருமையாகவே தெரிகிறது. ஒரு இடத்தில்கூட பிசிறு தட்டவில்லை. பின்னணி இசை, 'ஜிஜிஜிஜிஜீஈஈஈ' என்ற சத்தம் ட்ரைலரில் வரும்போதே நமக்கு ஒரு புது உணர்வை கொடுத்தது. இதைப் படத்துடன் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருந்தது. இசைக்கருவிகளை கொண்டு இசையால் மூழ்கடிக்காமல், குரலால் இசையாகக் கோர்த்த விஷயம் புதுமையாக இருந்தது. படத்தொகுப்பாளர் தீபக் ஜோசப்பின் படத்தொகுப்பு, புதிய அனுபவத்தை தருகிறது. 'திடீர் திடீர்' என்று படத்தில் வரும் ஜம்ப் கட் பேட்டர்ன்ஸ் நம்மை குழப்பாமல்  மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
 

jallikattu 2


கிரீஷ் கங்காதரன் படத்தை முழுவதுமாக லிஜோவுடன் சேர்ந்து தோளில் சுமந்தவர் என்று சொல்லலாம். லிஜோவின் படத்தில் எக்கச்சக்கமான லாங் ஷாட்கள் இருக்கும். ஆனால், இந்தப் படத்திலும் அப்படி இருப்பதுதான் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கண்டிப்பாக ஸ்டெடி கேமை போட்டுக்கொண்டு கேமராவை தோளில் சுமந்துக்கொண்டே ஓடியிருப்பார். எப்படிதான் காட்டில் அவ்வளவு ரியலிஸ்டிக்காக கேமாராவை கையாண்டாரோ தெரியவில்லை! இப்படி ஒவ்வொருவரையும் நாம் புகழ்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி. தொடர்ச்சியாக இவரது மூன்றாவது சோதனை முயற்சி, அதுவும் வெற்றியடைந்துள்ளது. 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரை பார்த்து தமிழரின் வீர விளையாட்டு குறித்த படம் என்று நினைத்து படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், எந்த முன்முடிவுகளும் இல்லாமல் வந்தவர்களுக்கு இது சிறப்புப் பரிசு.   
 

முந்தைய படம்: அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்தில்? பக்கத்து தியேட்டர் #2 ஜோக்கர் 

அடுத்த படம்: கார் ரேஸும் கார்ப்பரேட் அரசியலும்!  ஃபோர்ட் v  ஃபெராரி - பக்கத்து தியேட்டர் #4 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.