Skip to main content

அவெஞ்ஜர்ஸ் வசூலை மிஞ்சும்ன்னு சொன்னாங்க... எப்படி இருக்கு ஸ்டார்வார்ஸ்? -பக்கத்து தியேட்டர் #6 

கடந்த 1977ஆம் ஆண்டு ஜார்ஜ் லூகாஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது ‘ஸ்டார் வார்ஸ்’ ஃபிரான்சைஸ். தற்போதைய காலகட்டத்தில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆனால், 70களில் அப்போதிருந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பான ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் படமாக ஸ்டார் வார்ஸ் வெளியாகி, பார்த்தவர்களுக்கு கண்கவர் விருந்தாக அமைந்தது. ஆனால், இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன. குறைந்த அளவிலான தியேட்டர்களிலே வெளியிடப்பட்டு, பின்னர் மக்களின் பேராதரவு கிடைத்தவுடன் உலகம் முழுவதும் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு, அப்போதே 775 மில்லியன் டாலர்களை சம்பாதித்து சாதனை படைத்தது, ஸ்டார் வார்ஸ். இதன்பின் இது ஒரு மிகப்பெரிய பிரான்சைஸாக உருவெடுத்து தற்போது ‘ஸ்டார் வார்ஸ்: ஸ்கை வாக்கர் சாகா’ மூலம் முடிவுரை கண்டுள்ளது.
 

starwars


'ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’, ஸ்டார்வார்ஸ் ஃபிரான்சைஸில் பார்த்தால் 11வது படம், மூன்று ட்ரையாலஜியாக பார்த்தால் 9வது படம். ஸ்டார் வார்ஸ் படங்களை மூன்றாகப் பிரிக்கலாம். ஒரிஜினல் ட்ரையாலஜி, ப்ரீக்வல் ட்ரையாலஜி, சீக்வல் ட்ரையாலஜி. தற்போது வெளியாகியிருக்கும் படம் சீக்வல் ட்ரையாலஜியில் அடங்கும். இத்துடன் ஸ்டார் வார்ஸ் முடியவில்லை, அதில் சொல்லப்பட்ட ஸ்கைவாக்கர் சாகா முடிவடைகிறது. மார்வெல் யுனிவெர்ஸில் அவெஞ்சர்ஸ்க்கு ஒரு எண்ட் கொடுக்க எப்படி எண்ட்கேமோ, அதேபோல ஸ்கைவாக்கர் சாகாவிற்கு இந்த ‘தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’.

ஸ்டார்வார்ஸ் படங்களில் வரும் கதை, நமது பால்வழி அண்டத்திற்கு மிக மிக தொலைவில் எங்கோ ஒரு அண்டத்தில் நடப்பது. மக்களாட்சியில் செழித்தோங்கி இருக்கும் அந்த அண்டம், ‘சித்’ என்கிற தீய சக்தியின் சூழ்ச்சியால் சர்வாதிகாரத்திற்கு உட்பட்டு, அதன்பின் நடக்கும் போர், அரசியல் குளறுபடிகள் இவைதான் ஸ்டார்வார்ஸின் டெம்ப்ளேட் கதை. தீய சக்தியான சித் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகள் மற்ற கிரகங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கிரகங்களை அழிக்கும் ஆயுதங்களை வைத்து மக்களை மிரட்டுவார்கள். ஒரு பக்கம் இவர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று மீண்டும் மக்களால் ஏற்படுத்தப்படும் குடியரசு உருவாக வேண்டும் என்று நல்ல சக்தியான ‘ஜெடாய்’யுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் செயல்படுவார்கள். இதுதான் இந்த மூன்று ட்ரையாலஜியிலும் இருக்கும் டெம்பிளேட் கதை. அதை திரையில் எப்படி சுவாரஸ்யமாகக் கொடுத்தார்கள் என்பதில்தான் ஸ்டார்வார்ஸ் படக்குழு பேசப்படுகிறது.
 

sillukaruppatti


‘தி லாஸ்ட் ஜெடாய்’ படத்தின் கதை முடிந்த அடுத்த ஒரு வருடத்திலிருந்து தொடங்குகிறது ‘தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’. ஸ்டார்வார்ஸ் கதையை எழுதிய ஜார்ஜ் லூகாஸ் எழுதிய மற்றொரு பிரான்சைஸ்தான் ‘இண்டியானா ஜோன்ஸ்’. அதில் ஒரு பொக்கிஷமோ, அல்லது மர்மமான ஒரு பொருளோ எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். அதை கண்டுபிடிக்க ஒரு வரைபடமோ அல்லது க்ளூவோ கிடைக்கும். அதை வைத்து ஒவ்வொரு இடமாக சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பயணிப்பார்கள். அந்த தேடல் யுக்தியை வைத்து முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒரு நீண்ட லீட் கொடுத்துவிட்டு படத்தை தொடங்குகிறார்கள். இருந்தாலும் அது கதைக்கும் திரைக்கதைக்கும் எந்தவொரு வலுவும் சேர்க்கவில்லை. இது கடைசி பாகம் என்பதால் கொஞ்சம் எமோஷன்ஸ் கொடுக்க வேண்டும், அனைவருக்கும் தொடக்கத்திலிருந்து சமமான இடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத்  தொடங்குகிறார்கள் போல. ஆனால், அது பெரிதாக வொர்க்கவுட்டாகவில்லை.

கைலோ ரென், ரே இந்த இரண்டு கதாபாத்திரங்கள்தான் மிகவும் முக்கியமானவை. இதில் தீய சக்தி பக்கம் இருக்கும் கைலோ நல்ல சக்தி பக்கம் இருக்கும் ரேவை தன் வசம் இழுப்பாரா அல்லது ரே, கைலோவை நல்ல சக்தி பக்கம் இழுப்பாரா என்பதுதான் முக்கியமே. இவர்கள் யார் பக்கம் இணைந்து இறுதியில் யாருடன் மோதப் போகிறார்கள் என்பது க்ளைமேக்ஸ். ஆனால், தொடக்கத்தில் வரும் பல காட்சிகள் சரசரவென நகர்ந்தாலும், முக்கிய பகுதிக்கு செல்லாமல் நீண்டுகொண்டே போவதால் தீவிர ரசிகர்கள் தவிர்த்த சாதாரண பார்வையாளர்கள் பொறுமையை இழக்கின்றனர். ஒன்றரை மணிநேரம் கடந்தபின்புதான் இது ஒரு முடிவுரை என்பதை நியாபகப்படுத்தும் விதமாக படத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இப்படியே படம் ஒரு வழியாக க்ளைமேக்ஸிற்கு வர, இந்த ஃபிரான்சைஸின் பழைய விஷயங்களை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்துவதற்காக மறைந்த கதாபாத்திரங்களான ஹான் சோலோ, லூக் ஸ்கைவாக்கர், பல ஜெடாய்களின் குரல் என்று ஆடியன்ஸுக்கு ஒரு எமோஷனல் கனெக்டை அருமையாகக் கொடுத்திருந்தார்கள். அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற  எமோஷனல் கனெக்ட் இருக்கும். இதனால்தான் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமை கொண்டாடினார்கள் ரசிகர்கள். ஆனால், ஸ்டார்வார்ஸில் அது கொஞ்சம் குறைவுதான். ஒரு வேளை உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்களோ என்னமோ!
 

starwars


மற்றபடி ஒளிப்பதிவு, இசை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்று அனைத்திலும் வழக்கம்போல நம்மை குறை சொல்ல வைக்காமல் பாராட்டவே வைக்கிறது 'தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' படக்குழு. ஆனால், எழுத்தில் கவனம் கொண்டிருந்தால் கண்டிப்பாக பலரும் எதிர்பார்த்ததுபோல அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்து, நாற்பது வருட சகாப்தத்திற்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜெ.ஜெ.ஆப்ரம்ஸ் இஷ்டத்திற்கு பட்ஜெட்டை செலவு செய்து நான்கு மணிநேரத்திற்கு படத்தை எடுத்துவைத்துவிட்டு, பின்னர் அதை இரண்டரை மணிநேரத்திற்கு வெட்டி வீசினார் என்கிறார்கள். அப்படி செய்தால் இப்படித்தான் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் போல. அதற்கு பல படங்கள் சான்றாகவும் சில படங்கள் விதிவிலக்காகவும் இருக்கின்றன. மொத்தத்தில் ஸ்கைவாகர்ஸ் சாகாவுக்கான முடிவு ஓரளவே திருப்தி தந்திருக்கிறது. ஸ்டார்ஸ் வார்ஸ் இன்னும் முடியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதல் தருகிறது. 

 

முந்தைய படம்: கேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு? - பக்கத்து தியேட்டர் #5

அடுத்தப் படம்: 'இது என்ன ஜெயலலிதா பில்லா?' - தமிழக நிலவரத்தை கிண்டல் செய்த தெலுங்குப் படம்! பக்கத்து தியேட்டர் #7