ADVERTISEMENT

"வாழ்வை மாற்றிய ராமுடனான அந்த இரவு... ரஞ்சித் அனுப்பிய SMS..." - மாரி செல்வராஜ் சொல்லாத கதைகள்

08:53 AM Oct 02, 2018 | tarivazhagan

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படம், ஒரு மக்கள் படமாக வெற்றி பெற்றிருக்கிறது. 'பரியேறும் பெருமாள்' சொல்லிய கதைகள் இதுவரை சொல்லப்படாதது. அதிலும் சொல்லப்படாத சில கதைகளை நம்மிடம் பேசினார்.

ADVERTISEMENT



எழுத்தாளரில் இருந்து இயக்குனர்... எப்படி இருந்தது அந்தப் பயணம்?

எழுத்தாளர் என்பதற்கு முன் நான் துணை இயக்குனர். அந்தக் காலகட்டங்களில் நிறைய நேரம் இருக்கும். அந்த சமயங்களை எப்படி உபயோகமாக மாற்றுவது என்று எங்கள் இயக்குனர் ராம் அமைத்துக் கொடுத்ததுதான் எழுத்தாளன் என்பது.

இயக்குனர் ராமை எப்படி சந்தித்தீர்கள், உங்களுக்கும் அவருக்குமான உறவு எப்படி என்பதை சொல்லுங்கள்?

சினிமா பற்றி எதுவும் தெரியாமல் அதற்குள் வந்தவன்தான் நான். ஒரு நகரத்தில் வாழ வழியில்லாததால் வேறு நகரத்திற்கு வந்து எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்னைக்கு வந்தேன். அப்போ வேலை தேடி அலையும்போது, எதார்த்தமாக ஒரு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். பிறகுதான் தெரிந்தது அது 'கற்றது தமிழ்' படத்தின் அலுவலகம் என்று. முதலில் அங்கு ஆஃபிஸ்பாயாகத்தான் சேர்ந்தேன். ஒரு நாள் இரவு இயக்குனர் ராமுடன் தனியாகப் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரும் நானும் நிறைய பேசினோம். அப்போதுதான் அவர் முடிவு செய்து என்னை மறுநாளில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போய்விட்டார்.

'கற்றது தமிழ்' முடிந்து ஐந்து வருடங்கள் கழித்துதான் 'தங்கமீன்கள்' படம் துவங்கினார். அதுவரை அவருடனே இருந்தீர்களா?

அந்த ஐந்து வருட இடைவெளிதான் என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்வேன். ஏன் என்றால், அந்த ஐந்து வருடத்துக்குள் அவருடன் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டார்கள். அதனால் எனக்கும் அவருக்குமான பழக்கம் இன்னும் நெருக்கமானது. இன்னொன்று முக்கியமாக சொல்லவேண்டும். முதலில் கற்றது தமிழ் படத்தில் ஆஃபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தேன். பின் ஐந்து வருடங்கள் கழித்து தங்கமீன்கள் படம் வரும்போது அனைவரும் அறியும்படியான எழுத்தாளனாக எழுதத்துவங்கிவிட்டேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான்.

ADVERTISEMENT



இயக்குனராவதற்கு எப்படி தயாரானீங்க?

என் தொடரை படித்தவர்கள் என்னை எங்கே பார்த்தாலும் 'படம் எப்போ பண்ணுவீங்க?'னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேல் ராம் சார்கிட்டயும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பறம் அவர்தான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொன்னாரு. நாலு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அவர்கிட்ட சொன்னேன். அவர் அதில் இருந்து ஒரு ஸ்கிரிப்ட் ஓகே பண்ணி கொடுத்தார். அந்தக் கதைதான் 'பரியேறும் பெருமாள்'.

இயக்குனர் ரஞ்சித் எப்படி இதுக்குள் வந்தார்?

ராம் கூடவே இருந்ததால் 'காத்திருப்பதே தவம்' என்ற மனநிலைக்கு மாறிவிட்டேன். அதுமட்டும் இல்லாமல் அவசரம் ஏதும் படமால் பொறுமையாக அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துகொண்டே, சந்திப்பவர்களிடம் எல்லாம் இதைப் பற்றி பேசுவேன். அப்பொழுதெல்லாம் நான் ரஞ்சித் அண்ணாவுடன் ஃபோனில் பேசுவேன். அவரது படங்கள் பார்த்துவிட்டு வாழ்த்து சொல்வேன். ஒரு முறை அவரை சந்திச்சபோது 'என்ன பண்ற'னு கேட்டாரு. அப்போதான் ஸ்கிரிப்ட் லைன் மட்டும் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. "சரி ட்ரை பண்ணு, நானும் யாரவது இருந்தா சொல்றேன்"னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுக்கு அப்புறம் அவர் ’நீலம் ப்ரொடக்ஷன்’ ஆரம்பிச்சார். அதுல முதல் படமா உன்னுடையதே பண்ணலாம்னு சொன்னார்.



'பரியேறும் பெருமாள்' - தலைப்பை எப்படி தேர்ந்து எடுத்தீங்க?

எங்கள் குலதெய்வத்தின் பெயர்தான் பரியேறும் பெருமாள். அதுமட்டும் இல்லாமல் என் அண்ணனுடைய பெயரும் என் அப்பாவின் ஜாதகப் பெயரும் அதுதான். எனக்கும் அந்தப் பெயரின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. ரொம்ப நாட்களாகவே எனக்கு அந்தப் பெயர் வைக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன். அதனால் ஸ்கிரிப்ட் எழுதும்போதே முடிவு செய்துதான் எழுதினேன், கதாபாத்திரத்தின் பெயர் பரியேறும் பெருமாள் என்று. கதையும் அந்தக் கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இருக்கும். அதனால் கதை கேட்பவர்களுக்கும் அந்தத் தலைப்பு பிடித்துவிட்டது.

படத்தில் 'கருப்பி' நாய் ஒரு பாத்திரமாகவும் ஒரு குறியீடாகவும் அனைவரையும் ஈர்த்தது... அதன் உருவாக்கம் பற்றி?

கருப்பி என்னுடைய அகம். பொதுவாக இருபத்திநான்கு மணிநேரமும் ஒருவர் தன் நாயை கொஞ்சமுடியாது. வீட்டில் ஒரு விழா என்றால் நாயை தோட்டத்தில் கட்டிவிடுவோம். ஆனால் அதைத்தாண்டி மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான ஒரு வாழ்க்கையை இதில் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தென். முக்கியமாக கருப்பி காட்சிகளை எல்லாம் எடுக்கும்போது உடன் இருந்தவங்க எல்லாருக்கும் ரொம்ப நெருக்கமாச்சு. அப்போதான் புரிஞ்சுது கருப்பிதான் இந்தக் கதையின் முக்கிய கால்கள் என்று. அதனால் அதன் வழியே இந்தப் படத்தை எடுத்து சென்றோம். இது ஒரு அரசியல் குறியீடா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் கருப்பி, ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதன் குறியீடாகத்தான் இருக்கும். கருப்பி பாடல் வரிகள் அழுத்தம் கொடுப்பதாக பலரும் சொன்னார்கள். புதிதாக கேட்பவர்களுக்கு அப்படி தோன்றுவது சாதாரணம்தான். ஆனால், அந்த வரிகளை தினமும் கேட்கும் மக்களுக்கு அது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்குள் இருக்கும் அந்தக் கேள்விகளின் தொகுப்புதான் அந்தப் பாடல்.

இயக்குனர் ராம், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித்... இருவரும் என்ன சொன்னார்கள்?

இருவருமே பார்த்தார்கள். காட்சிகளை மட்டும் இணைத்து டப்பிங் செய்யாமல், இசை இல்லாமலேயே ராம் சார் ஒரே இரவில் மூன்று முறை பார்த்தார். 'நான் நினைத்ததைவிடவும் நீ பெரிதாக வளர்ந்துவிட்டாய்' என்றார். ரஞ்சித் பார்த்துவிட்டு அன்று இரவு ஒரு SMS அனுப்பினார். அந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தைகளைப் பார்த்தபின் ரஞ்சித் அண்ணன் மீதான என் பார்வை பலமடங்கு உயர்ந்தது. அதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால், இதுபோன்ற வாழ்த்து இதுவரை யாரும் பெற்றிடாதது என்று மட்டும் சொல்லமுடியும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT