ADVERTISEMENT

தி கேரளா ஸ்டோரி பட விவகாரம் - அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றத்தில் முறையீடு

12:59 PM May 04, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்ப, படம் குறித்து பேசிய கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வி.டி.சதீசன், இப்படத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் எனத் தெரிவித்தார்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. சங்பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது" என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் முதலில் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்னர் தமிழ்நாடு உளவுத்துறை கேரளாவில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என தெரிவித்து இப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை செய்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிய மற்றொரு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், முன்பு கூறியது போல கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது.

இந்த நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இப்படம் நாளை வெளியாவதால் வழக்கை உடனடியாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த முறை வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணையை நாளை (05.05.2023) ஒத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT