ADVERTISEMENT

"சின்னப் பசங்களா... யாருகிட்ட" - கமல் ரசிகர் எடுத்த கமல் படம்! 

01:15 PM Nov 07, 2019 | vasanthbalakrishnan

2019 - ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமா உலகத்திற்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் அளித்தது 'பேட்ட - விஸ்வாசம்' இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான பொங்கல். ஒரே நாளில் வெளியான இந்த இரு படங்கள் பெற்ற வெற்றியை இப்போது வரை பிற படங்கள் பெறவில்லை. அதிலும் 'பேட்ட' ரஜினியை வைத்து ஒரு ரஜினி ரசிகர் எடுத்த படமாக இருந்தது. இடையில் சில வருடங்களாக ரஜினி ரசிகர்கள் மிஸ் பண்ணிய பல அம்சங்களை சேர்த்து கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்திருந்தார். அதுபோல 2006 ஆம் ஆண்டு கமலை வைத்து ஒரு கமல் ரசிகர், ரசிகர்கள் விரும்பிய கமல்ஹாசனை சிறப்பாகத் திரையில் காட்டி ஒரு படத்தை உருவாக்கி அது பெரிய வெற்றியையும் பெற்றது. அந்தப் படம்தான் 'வேட்டையாடு விளையாடு'. அப்போது இளம் இயக்குனராக, நியூ வேவ் டைரக்டராக இருந்த கௌதம் மேனன் தான் அந்த கமல் ரசிகர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


மின்னலே, காக்க காக்க என இரண்டு பெரிய வெற்றிகளை அதற்கு முன்பு கொடுத்திருந்த கௌதம் மேனன் காதல் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் பெயர் பெற்ற இயக்குனர். அப்பொழுதே சில பேட்டிகளில் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'சத்யா' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்த பொழுது அதற்கு முன்பு சில ஆண்டுகள் ரசிகர்கள் மிஸ் பண்ணிய ஸ்டைலிஷான கமல்ஹாசனை தன் படத்தில் காட்டினார். வேட்டையாடு விளையாடு படத்தின் ஓப்பனிங் சீன் இன்றளவிலும் கமல்ஹாசனின் படங்களில் மிகச்சிறந்த ஓபனிங் சீனாகக் கருதப்படுகிறது.

"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என்று தொடங்கி "கேட்ட மூடுறா" என்று கோபத்துடன் கமல் சொல்ல அங்கு தொடங்கும் சண்டைக்காட்சி அப்படியே கற்க கற்க பாடலுடன் தொடர்ந்து அப்படியே ஓப்பனிங் பாடலாக அமைந்தது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. கமல் படங்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சிறந்த ஓபனிங் சீன்களில் அதுவும் ஒன்று.



'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் கதாபாத்திரம் வீரமாகவும் அதேநேரம் பெண்களை மதிப்பதாகவும் ஸ்டைலான ஆங்கிலம் பேசுவதாகவும் என அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்கத்தக்கதாக செதுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் கமலின் உடைகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கமலின் மேனரிசங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசிகனால் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டது. உச்சக்கட்டமாக "சின்னப் பசங்களா யார்கிட்ட" என்று கமல் கேட்பது அப்போதைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுவது போல ஒரு கமல் ரசிகனால் அனுபவித்து எழுதப்பட்டது. காதல் காட்சிகளும் பாடல்களும் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் என்றும் மறக்க முடியாதவை.

இப்படி ஒரு கமல் ரசிகராக கௌதம் மேனன் தன் அபிமான நடிகரை வைத்து உருவாக்கிய திரைப்படம் ரசிகர்கள் பார்க்க விரும்பிய கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்தது. அதேநேரம் இப்படி ஒரு படத்தை எடுக்க ரசிகராக மட்டும் இருந்தால் போதாது என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

"கமல்ஹாசனின் பெரும் ரசிகன் நான். ஆனால், அவர் இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையில் கால் பதித்துள்ளார். அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். அவரை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அவரை ஒரு நடிகராகத்தான் பார்க்க விரும்புகிறேன்" - இது சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற கௌதம் மேனன் பேசியது. இதுவே கமலின் நடிப்பை ரசிக்கும், நேசிக்கும் பெரும்பாலான ரசிகர்களின் ஆசையாகவும் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT