/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/77_45.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலாக வெளியான ’பத்தல பத்தல’ பாடலில் இடம்பெற்றுள்ள ‘ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னுமில்லே இப்பாலே’ என்ற வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இப்பாடலை எழுதிய கமல்ஹாசன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த வரிகளைப் பாராட்டி கமல்ஹாசனுக்கு ஆதரவாக பாஜக எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த வரிகள்குறித்தும் அதனையொட்டி எழுந்த சர்ச்சை குறித்தும் கமல்ஹாசனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், ”தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இங்கு பத்திரிகையாளர்கள் கூடியுள்ளீர்கள் என்றால் இதுவும் ஒரு ஒன்றியம்தான். இயக்குநர்கள் கூடி ஒரு யூனியன் நடத்தினால் அதுவும் ஒரு ஒன்றியம்தான். தயாரிப்பாளர்கள் கூடி ஒரு யூனியன் நடத்தினால் அதுவும் ஒரு ஒன்றியம்தான். இதில் எந்த யூனியனில் தவறு நடந்தாலும் எங்கள் படத்தின் பணிகள் பாதிக்கப்படும். அந்த மாதிரியும்கூட இந்த வரிகளை எடுத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)