ADVERTISEMENT

தேவர் கொடுத்த அரைப்படி அரிசி... கடைசி வரை விஸ்வாசமாக இருந்த எம்.ஜி.ஆர்... கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #4

12:35 PM Mar 29, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆருக்கும் சாண்டோ சின்னப்பத்தேவருக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியதில் அரைப்படி அரிசி வகித்த பங்கு குறித்துப் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

ஒருநாள் எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியா அம்மா, எம்.ஜி.ஆர் வருகையை எதிர்பார்த்து வீட்டிற்கு வெளியே நின்று நான்கு திசைகளிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சாண்டோ சின்னப்பத்தேவர் எம்.ஜி.ஆர் அம்மாவிடம், "என்ன ஆத்தா இங்க நிற்கிறீங்க?" எனக் கேட்டார். "சாப்பாட்டுக்கு ஒன்னும் இல்லடா... ராத்திரி வரும்போது அரிசி வாங்கிட்டு வாடான்னு சொல்லியிருந்தேன்... இன்னும் ஆள காணும்" எனக் கூறினார் எம்.ஜி.ஆர். அம்மா. அத்தனை பேரின் பசியாற்றிய வள்ளல் எம்.ஜி.ஆரின் ஆரம்பக்காலம் எப்படி இருந்துள்ளது என்று பாருங்கள். உடனே தேவர், "ஒன்னும் கவலைப்படாத ஆத்தா... பத்து நிமிஷத்துல நான் வாரேன்" எனக் கூறிவிட்டு அவர் வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.

தேவர் வீட்டு வாசலில் அவர் அம்மா வெளியே உட்கார்ந்து பக்கத்து வீட்டு ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவரைத் தாண்டி உள்ளே நுழைந்த தேவர், அவர் அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என நினைத்து, பித்தளை பானையில் தண்ணீர் குடிப்பது போல பாவனை செய்கிறார். பின், சட்டையிலும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நனைக்கிறார். நேரே அரிசி வைக்கப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் சென்று இரு கைகளிலும் அரிசியை அள்ளி டவுசர் பையை நிரப்புகிறார். அதன் அளவு எப்படியும் அரைப்படி இருக்கும். பின், அவர் அம்மாவிற்கு கேட்குமாறு பெரிய ஏப்பம் விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

எம்.ஜி.ஆர் அம்மாவிடம் வந்து, “முறத்தை எடு ஆத்தா” என்கிறார். அவரும் எதற்கு கேட்கிறார் என்பது புரியாமல் குழப்பத்துடன் முறத்தை எடுக்கிறார். தேவர், தன்னுடைய இரு பைகளிலும் உள்ள அரிசியை அள்ளி அந்த முறத்தில் போடுகிறார். "ஏதுடா சின்னப்பா இவ்வளவு அரிசி" என எம்.ஜி.ஆர் அம்மா கேட்க, "அதை விடு ஆத்தா... தம்பி வர்றதுக்குள்ள நீ போய் சோறாக்கு" என்கிறார் தேவர். எம்.ஜி.ஆர் அம்மா சமைக்க ஆரம்பிக்கிறார். அன்று எம்.ஜி.ஆரால் பணம் திரட்ட முடியாததால் அரிசி வாங்காத சோகத்துடன் வீடு திரும்புகிறார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் அரிசி வேகும் வாசனை கமகமன்னு வருது. "உனக்கு ஏதும்மா அரிசி வாங்க காசு" என எம்.ஜி.ஆர் கேட்க, “சின்னப்பன்தான் கொண்டு வந்து கொடுத்தான்” என எம்.ஜி.ஆர் அம்மா நடந்ததை விளக்கிக் கூறுகிறார். உடனே தேவரை கட்டியணைத்து கண்ணீர் வடிக்கிறார் எம்.ஜி.ஆர்.

அன்றைக்கு அரைப்படி அரிசி கொடுத்ததற்காக நன்றி மறக்காத எம்.ஜி.ஆர், வாழ்நாள் முழுவதும் தேவருக்கு உடன்பிறப்பாக இருந்து 16 படங்கள் நடித்துக் கொடுத்தார். சாதாரண ஆளாகத்தான் தேவர் சென்னைக்கு வந்தார். அவர் சென்னை வரும்போது அவரது நிலை என்னவென்று எனக்குத் தெரியும். அப்படி சாதாரண மனிதரை கோடீஸ்வரனாக்கி எம்.ஜி.ஆர் அழகு பார்த்ததற்கு காரணம், அந்த அரைப்படி அரிசிதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT