/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/188_3.jpg)
தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 5 வயதில் கோவிலில் விட்டுச்சென்ற தன் அம்மாவை 14 வயதில் கே.பி. சுந்தராம்பாள் சந்தித்தது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"கே.பி. சுந்தராம்பாள் நாடகக் கம்பெனியில் இருந்து தப்பி திருச்செந்தூருக்குச் சென்றது குறித்தும், அங்கு கோவில் குருக்கள் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இந்தப் பகுதியில் கூறுகிறேன். கே.பி. சுந்தராம்பாள் தப்பி ஓடிவந்துவிட்டதால் அங்கு நாடகம் நின்றுவிட்டது. மக்கள் அனைவரும் 5 வயது கே.பி. சுந்தராம்பாளின் குரலை அந்த அளவிற்கு ரசித்தார்கள். கே.பி. சுந்தராம்பாள் இல்லாமல் நாடகம் நின்றுவிட்டதால் கே.பி. சுந்தராம்பாள் எங்கு என்று நாடகக் குழுவினர் தேட ஆரம்பிக்கின்றனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவில் குருக்கள், கே.பி. சுந்தராம்பாள் திருச்செந்தூரில் இருக்கும் விஷயத்தை நாடகக் குழுவினரிடம் தெரிவிக்க ஒருவரை அனுப்பியிருந்தார். அவர், கே.பி. சுந்தராம்பாளை தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த நாடகக் குழுவினரிடம் சென்று விஷயத்தைக் கூறுகிறார். அந்த நாடகக் கம்பெனியின் ஓனர் உடனே திருச்செந்தூருக்குக் கிளம்பி வருகிறார்.
அந்த ஓனரைப் பார்த்தது பயந்துபோன கே.பி. சுந்தராம்பாள், கதறி அழ ஆரம்பிக்கிறார். உடனே அந்த ஓனர், டான்ஸ் மாஸ்டரை திட்டிவிட்டுத்தான் தான் வந்ததாகவும், இனிமேல் விருப்பம்போல நீ நடிக்கலாம். உன்னை யாரும் ஏதும் சொல்லமாட்டர்கள் என்கிறார். திருச்செந்தூர் கோவில் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த அவர், மாதம் ஒரு பவுன் தங்கம் சம்பளமாகத் தருவதாக முருகன் மீது சத்தியம் செய்கிறார். ஆரம்பக்காலங்களில் எம்.ஜி.ஆரே ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சம்பளத்திற்குத்தான் நடித்தார். ஆனால், 5 வயதில் கே.பி. சுந்தராம்பாளின் சம்பளம் ஒரு பவுன். அவரும் சரி எனச் சம்மதித்து நாடகக்குழு ஓனருடன் கிளம்பிச் செல்கிறார். கே.பி. சுந்தராம்பாள் திரும்பி வந்ததும் மீண்டும் நாடகம் தொடங்குகிறது. பேசியபடியே மாதம் ஒரு பவுன் சம்பளமாகக் கொடுக்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்தத் தங்கத்தையெல்லாம் யாரிடம் கொடுத்து வைப்பது என்று அவருக்கு குழப்பமாக இருந்தது. பின், நாடகக் கம்பெனி ஓனர் மனைவியிடம், 'இந்த நகையை நீங்க வச்சுருங்கம்மா... எங்க அம்மா திரும்பி வந்தா அவங்ககிட்ட நான் இதைக் கொடுக்கணும்' எனக் கூறி கொடுத்துவைக்கிறார்.
காலங்கள் ஓடுகின்றன. 14 வயது இருக்கும்போது கே.பி. சுந்தராம்பாள் வயதுக்கு வந்துவிடுகிறார். அவர் வயதுக்கு வந்தது நாடகக் கம்பெனியினருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியென்றாலும் இன்னொரு புறம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் நாடகக் கம்பெனியில் பெரும்பாலும் ஆண்கள்தான் இருப்பார்கள். யாராவது ஒருவர் இருவர்தான் பெண்கள் இருப்பார்கள். இதனால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இந்த நேரத்தில், கே.பி. சுந்தராம்பாள் நாடகத்தைப் பார்த்த யாரோ ஒருவர் அவர் அம்மாவிடம் சென்று உன் மகளைத் திருநெல்வேலி ஜில்லாவில் நடந்த ஒரு நாடகத்தில் பார்த்தேன் என்று கூறியுள்ளார். தன் மகள் திருநெல்வேலியில் இருப்பது தெரியவந்ததும் அவர் அம்மா உடனே கிளம்பி திருநெல்வேலிக்கு வருகிறார். நாடகக் கம்பெனியில் கே.பி. சுந்தராம்பாளை பார்த்ததும் அவர் அம்மா ஓடிச் சென்று கட்டியணைத்து அழ ஆரம்பித்துவிடுகிறார். 5 வயதில் விட்டுச்சென்ற குழந்தையை 14 வயதில் ஒரு தாய் சந்தித்தால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். பின் நாடகக் கம்பெனி ஓனரின் மனைவி, கே.பி. சுந்தராம்பாள் வயதுக்கு வந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார். கே.பி. சுந்தராம்பாள் அம்மாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவர் கூறியதற்கு நாடகக் கம்பெனி ஓனரும் சம்மதித்துவிடுகிறார். கே.பி. சுந்தராம்பாள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த 100 பவுன் நகைகளையும் அவரது அம்மாவிடம் நாடகக் கம்பெனி ஓனரின் மனைவி கொடுக்கிறார். கே.பி. சுந்தராம்பாளின் அம்மா அதுவரை தங்கத்தைக் கண்ணில்கூட பார்த்திருக்கமாட்டார். மிகவும் வறுமையான நிலையில் அவர்களது வாழ்க்கை இருந்தது. மகளைக் கோவிலில் விட்டுச்சென்றதே வறுமை காரணமாகத்தானே. ஒரு பையில் எல்லா தங்கத்தையும் வாங்கிக்கொண்டு மகளுடன் சந்தோஷமாக நடக்க ஆரம்பிக்கிறார். பின், கொடுமுடியில் பழையபடி தங்களது வாழ்க்கையைத் தொடங்கினார்கள். கையில் இருந்த தங்கத்தை விற்றுவிற்று வாழ்க்கை நடத்தினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)