Skip to main content

எம்.ஜி.ஆரையும் தேவரையும் மிரள வைத்த பெண்... கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #3

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்ப தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து பகிர்ந்தவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதிக்கு இங்கே ஃக்ளிக் செய்யவும்

 

"திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒரு பெண், சாண்டா சின்னப்ப தேவர் மீது கழுத்துச் செயினை தூக்கி போட்டுவிட்டுப் போனது குறித்தும், அதுகுறித்து எம்.ஜி.ஆரும் தேவரும் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில், அந்த ஊர் மருத்துவச்சி அந்த வழியாகச் செல்கிறார். அந்த மருத்துவச்சியை அழைத்த எம்.ஜி.ஆர், அவரிடம் அனைத்தையும் விளக்கிக் கூறுகிறார். பின், ‘என்ன ஏதுன்னு விசாரிங்க அம்மா... ஏதும் விபரீதமா போயிரக்கூடாது... நீங்கதான் அந்தப் பொண்ண கண்டித்து வைக்கணும்’னு சொல்லி அந்தச் செயினை மருத்துவச்சியிடம் கொடுக்கிறார். 

 

‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என உறுதியளித்த மருத்துவச்சி, நேராக அந்தப் பெண் வீட்டிற்குச் செல்கிறார். அந்தச் செயினைக் காட்டி, நடந்தது குறித்து கண்டிப்பான குரலுடன் கேட்கிறார். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அந்தப் பெண், இது எதிர்வீட்டில் உள்ள விதவை பெண் எறிந்த செயின் என்றும் அந்தப் பெண் எறிந்ததைப் பார்த்தே தான் சிரித்தாகவும் கூறுகிறார். அந்த விதவை பொண்ணு, ரொம்ப சின்ன பொண்ணு... 14 வயசுதான். தேவர் மேல ஆசைப்பட்டு இப்படி பண்ணியிருக்கு.

 

kalaignanam

 

அந்தக் காலத்துல விதவை பொண்ணு யாரையாவது விரும்புதுன்னு தெரிஞ்சா கொன்னுருவாங்க. இல்லை, அந்தப் பையனக் கொன்னுருவாங்க. இந்த விஷயத்தை வந்து எம்.ஜி.ஆர் மற்றும் தேவர்கிட்ட சொன்னதும் அவங்களுக்கு இன்னும் பயம் அதிகமாகிருச்சு. உடனே தேவர் அந்த மருத்துவச்சியிடம், ‘பாட்டி உடனே இதை முடிவுக்கு கொண்டுவா... இல்லனா அவங்க ஆளுக இந்த மாருதி உடற்பயிற்சி கூடத்தையே தீ வச்சு கொளுத்திருவாங்க’ என்றார். 

 

‘சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்’ எனக் கூறிவிட்டுச் சென்ற மருத்துவச்சி, அந்த விதவை பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ‘அந்த பயலுக இரண்டு பேரும் ஸ்டூடியோல நடிச்சு பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க... இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாத... அவனுக பிழைப்பு கெட்டுப்போயிரும்... இனிமேல் இந்தப் பக்க ஜன்னல் திறக்கக்கூடாது’ என எச்சரித்தார். அந்தப் பொண்ணும் சரின்னு சொல்லிருச்சு.

 

பின், அந்தப் பொண்ணை எச்சரித்துவிட்டதாகவும், இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று தேவரிடம் வந்து மருத்துவச்சி கூறியுள்ளார். ‘ஒரு மாசம் கழிச்சு வருவோம்... ஜன்னல் மூடி இருந்தா இங்கயே தொடருவோம்... இல்லனா வேற உடற்பயிற்சி கூடத்திற்கு போயிருவோம்’னு எம்.ஜி.ஆரும் தேவரும் முடிவெடுத்தாங்க. கொஞ்ச நாள்ல அந்தப் பொண்ணு வீடு மாறி போயிருச்சு. இது அவங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவம். இந்த சம்பவம் குறித்து தேவர் பலமுறை என்னிடம் பேசியுள்ளார்.”

 

 

சார்ந்த செய்திகள்