ADVERTISEMENT

"சரோஜாதேவியை அடிக்கிறியா, இல்ல நான் உன்னை அடிக்கட்டுமான்னு கேட்டார் இயக்குநர்" - கலைஞானம் பகிரும் சுவாரசிய நினைவுகள்!

03:18 PM Oct 25, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு கால அனுபவங்களைக் கொண்ட இவர் நமது நக்கீரன் ஸ்டுடியோவில் ஒளிபரப்பாகும் பொக்கிஷம் என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரைத்துறையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்துப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் எஸ்.ஏ. நடராஜன் குறித்தும் தன் திரை வாழ்வில் நடந்தது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு.

கடந்த 1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான "மந்திரி குமாரி" படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. நடராஜன் நடித்திருந்தார். இப்படத்தில் எம்.ஜிஆர்-ஐயும் தாண்டி இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் எஸ்.ஏ நடராஜன் பாடிய "வாராய் நீ வாராய்.." என்ற பாடல் அந்தக்கால ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நல்ல தங்கை" என்ற படத்தைத் தயாரித்தார். இதில் எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்திற்குப் பாடல் எழுதித் தரச்சொல்லி பாடலாசிரியர் காமாட்சி வீட்டிற்கு வந்தார் எஸ்.ஏ நடராஜன். அப்போது காமாட்சி பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல நான் தான் எழுதிக் கொடுப்பேன். அதன் பின்புதான் எனக்கும் எஸ்.ஏ. நடராஜனுக்கு நட்பு தொடங்கியது. அதனையடுத்து "நல்ல தங்கை" படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

எஸ்.ஏ நடராஜன் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் படங்களைத் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் நான் தங்கி இருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைமை வந்தது. அந்த நேரத்தில் தான் எஸ்.ஏ. நடராஜன் தயாரிக்கும் படத்தின் போஸ்ட்டரை பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. எஸ்.ஏ. நடராஜன் நன்கு பரிச்சயமானவர், அவரை நேரில் சந்தித்தால் சினிமாத்துறையில் ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். அதனால் என் அண்ணனிடம் நான் எஸ்.ஏ. நடராஜனை சந்திக்க மைசூர் செல்கிறேன். எனக்கு சாப்பாட்டுக்குப் பணம் எல்லாம் வேண்டாம், இங்கிருந்து மைசூர் செல்வதற்கு ரயில் டிக்கெட்டிற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றேன், இதைக் கேட்ட அவர் நீ மைசூர் போனவுடன் உனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து விடுவாரா என ஏளனமாகச் சிரித்துக்கொண்டே சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஹோட்டலில் டேபிள் கழுவிப் பிழைத்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டு அவரிடம் ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு மைசூர் வந்தடைந்தேன்.

அதன் பின் எனக்கு தெரிந்த காமெடி நடிகர் காக்கா ராதா கிருஷ்ணன் மூலம் மைசூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் எஸ்.ஏ. நடராஜன் அவர்களைச் சந்தித்தேன். என்னைப் பார்த்த எஸ்.ஏ நடராஜன் "வாயா பாலகிருஷ்ணா" என்றார். "அண்ணே, எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க" என்று கேட்டேன். அதற்கு என்ன, பத்து பேர் இருக்கும் இடத்தில் நீயும் ஒருவனாக இருந்துட்டு போ என்றார். மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும், அங்கு ஏதாவது வேடம் கொடுப்பார்கள் அதைச் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் தான் எஸ்.ஏ. நடராஜன் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் "கோகிலவாணி" என்ற படத்தை இயக்கினார். ரகுவரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாகவும் எஸ்.ஏ. நடராஜனே நடித்திருந்தார். இதில் எனக்கு திருடன், போலீஸ், குருடன் உள்ளிட்ட 7 வேடம் கொடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து கன்னட மொழியில் எடுக்கப்பட்ட கோகிலவாணி படத்தில் கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். அப்போது ஒரு காதல் காட்சியில் கதாநாயகனும், கதாநாயகியும் புல்வெளியில் படித்திருப்பார்கள். அவர்களை நான் குச்சியால் அடிக்கும் படியான காட்சி படமாக்கப்பட்டது. அதில் நான் படத்தின் கதாநாயகியான சரோஜாதேவியை குச்சியால் அடித்தேன், உடனே கட் கட் என்று சத்தம் வந்தது, யார் என்று பார்த்தால் எஸ்.ஏ. நடராஜன், "வேகமாக அடித்தால் தான் அவள் உணர்வுப் பூர்வமாக கத்துவா, ஓங்கி அடிக்கச் சொன்னா, செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்தவன் மாதிரி அடிக்கிற, அவளுக்கு வலிக்கிற மாதிரி அடிக்கிற, இல்ல உன்ன அடிக்கிற அடியில் நீ மெட்ராஸ் பக்கம் ஓடி போய்டுவ" என்றார். சரி இவரே ஒரு முரடன் நாம ஒழுங்கா அடிக்கவில்லை என்றால் இவர் நம்மை அடித்து விடுவார் என்று நான் சரோஜாதேவியை வேகமாக அடித்தேன். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்தோம், அதன் பிறகு அந்தம்மாவின் முகத்தை மெட்ராஸில் தான் பார்த்தேன் என்றார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT