ADVERTISEMENT

''சிம்புவின் புதிய லுக்கை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்'' - ஐசரி கணேஷ் 

12:29 PM Aug 09, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுவரும் நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியுள்ளார். அதில்...

"தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு ரசிகனாகவே மிக உற்சாகமாக இருக்கிறேன். சிலம்பரசன் டி.ஆர், ஏ.ஆர். ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி கிடைப்பது, எந்தவொரு தயாரிப்பாளருக்கும் பெரும் வரமாகும். அந்த வகையில் இந்த மூன்று உச்சங்களை வைத்துப் படம் உருவாக்குவது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நடிகர் சிலம்பரசன் எந்தவிதமான கதாபாத்திரத்தையும், எதார்த்தமாக, எளிதில் திறம்பட கையாளும் நடிகராவார். இப்படத்தில் அவரது புதிய லுக்கை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ படம் இதுவரை அவர் செய்திராத கதாபாத்திரத்தில், அவரது நடிப்பின் மொத்த பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தின் கதையைப் பற்றி என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவரது வழக்கமான கதைகளிலிருந்து இது வேறுவிதமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசை எப்போதும் மாயாஜாலத்தை நிகழ்த்தும். அதிலும் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியுடன் அவரது இசை இன்னும் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. இப்போது கதை பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது. 100% தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இப்படம் இருக்கும். ஜெயமோகன் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். ஒரு சிறந்த ஆக்சன் படமாக, கிராமம் மற்றும் நகர பின்னணியில் கதை நடைபெறும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் இனிய தமிழ் தலைப்புகளுக்கு நான் ரசிகன். அந்த வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ புகழ்பெற்ற பாரதியார் பாடலின் வரியாகும். அவரின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில் எங்கள் படைப்புக்கு அவரது தலைப்பு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆகஸ்ட் 6 அன்று படப்பிடிப்பு, திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டதில் தயாரிப்பு குழு மேலும் மகிழ்ச்சியில் உள்ளது. திருச்செந்தூருக்கும் தயாரிப்பு நிறுனத்தின் பெயரான 'வேல்ஸ்'க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT