ADVERTISEMENT

மணிரத்னம் வழங்கும் 'பேரடைஸ்' திரைப்படத்திற்கு சர்வதேச விருது!

11:38 AM Oct 17, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையின் முன்னணி திரைப்படைப்பாளியான பிரசன்ன விதானகே இயக்கத்தில் தயாரான 'பேரடைஸ்' எனும் திரைப்படம்- 2023 ஆம் ஆண்டிற்கான பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் கிம் ஜிஜோக் விருதை வென்றது. இந்த விருதை மிர்லான் அப்டிகலிகோவின் 'பிரைட் கிட்நாப்பிங்' எனும் திரைப்படத்துடன் இணைந்து பெற்றிருக்கிறது.

ஆசிய சினிமாவின் வளர்ச்சியை கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த திரையுலக படைப்பாளி கிம் ஜிஜோக்.‌ அவரது நினைவை போற்றும் வகையில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆசிய சினிமாவின் சமகால நிலையை பிரதிபலிக்கும் இரண்டு சிறந்த திரைப்படங்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான கிம் ஜிஜோக் விருதை பிரசன்ன விதானகேயின் 'பேரடைஸ்' என்ற திரைப்படத்திற்கும், மிர்லான் அப்டிகலிகோவின் ' பிரைட் கிட்நாப்பிங்' எனும் திரைப்படத்திற்கும் இணைந்து வழங்கப்படுகிறது.

நியூட்டன் சினிமா எனும் பட நிறுவனம் தயாரித்து, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கியிருக்கும் திரைப்படம் 'பேரடைஸ்'. இந்த திரைப்படம் இலங்கையில் படமாக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கு வரும் ஒரு தம்பதிகளின் நிலையை இந்த படைப்பு விவரிக்கிறது.‌ சுற்றுலாவின் போது அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, தனிப்பட்ட மற்றும் பிரத்யேக சவால்களை குறித்தும், அதற்கான அவர்களின் போராட்டங்கள் குறித்தும் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திரா பெரேரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்க, ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் பணியாற்றிருக்கிறார்.

இந்த விருது குறித்து பிரசன்ன விதானகே பேசுகையில், '' கிம் ஜிஜோக் மறைந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பெயரிலான விருதை பெறுவது பெருமிதமாக இருக்கிறது. கிம் ஆசிய திரைப்பட படைப்பாளிகளுக்கு உற்ற நண்பராகவும் இருந்தார். அவரை என்னுடைய இல்லத்திற்கு எடுத்து செல்வதில் நான் பெருமை அடைகிறேன்.‌ என்னுடைய அன்பான தயாரிப்பாளர் நியூட்டன் சினிமா நிறுவனத்தை சேர்ந்த ஆன்டோ சிட்டிலப்பில்லி, இப்படத்தை வழங்கிய மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம், 'பேரடைஸ்' எனும் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விருது உங்களுக்கு தான் சொந்தம்'' என்றார்.

'பேரடைஸ்' படம் குறித்து மணிரத்னம் பேசுகையில், '' பேரடைஸ் ஒரு வித்தியாசமான பார்வையை கொண்ட படைப்பு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் பெரும் கொந்தளிப்பு இருக்கும்போது.. இன்றைய சிக்கலான சூழலில் பழைய காவியங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆண் - பெண் உறவை மறு மதிப்பீடு செய்யும்போது எம் மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதனை 'பேரடைஸ்' வித்தியாசமான பார்வையுடன் விவரிக்கிறது'' என்றார்.

இதனிடையே பூஷன் சர்வதேச திரைப்பட விழாவில் கிம் ஜிஜோக் விருதை வென்ற 'பேரடைஸ்' எனும் திரைப்படம், அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறும் ஜியோ மாமி எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT