Skip to main content

சரத்குமார் - ராதிகா... என்ன கம்பீரம், என்ன கெமிஸ்ட்ரி! வானம் கொட்டட்டும் - விமர்சனம்

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

இயக்குனர் மணிரத்னம், அவ்வப்போது எழுத்தாளர் மணிரத்னமாக செயல்படுவதுண்டு. சுகாசினி, பாரதிராஜா என தனக்கு நெருக்கமானவர்களுக்காக சில முறை. சுபாஷ், அழகம்பெருமாள் என தனது சீடர்களுக்காக சில முறை. இம்முறை தனது சீடர் தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார் மணிரத்னம். சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், பாலாஜி சக்திவேல், ஷாந்தனு, மடோனா என ஒரு பெரிய நடிகர் கூட்டம் நடிக்க தனா இயக்கியுள்ள 'மெட்ராஸ் டாக்கீஸ்' படம் 'வானம் கொட்டட்டும்'.

 

sarathkumar radhika



தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை வெட்டியவரை ஆத்திரத்துடன் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் சரத்குமார். அந்த வன்முறை பின்னணியில் வளர்க்க விருப்பமில்லாமல் பிள்ளைகள் இருவரையும் தங்கள் கிராமத்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் ராதிகா. சென்னையில் வளரும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு புதிய தொழில் தொடங்குகிறார்கள். எல்லாம் நன்றாக செல்லும் வேளையில் பதினாறு வருட சிறை தண்டனை முடிந்து வெளியில் வருகிறார் அப்பா சரத்குமார். இத்தனை வருடங்களாக அவர் இல்லாமல் வாழப் பழகிய அந்தக் குடும்பத்தில் அவரது வரவு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதும் இன்னொரு புறம் சரத்குமாரை பழிவாங்கக் காத்திருப்பவர் என்ன செய்தார் என்பதே 'வானம் கொட்டட்டும்'.

 

vikram prabhu aiswarya



படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு, நடிகர்கள். ஒரு படத்தின் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரும் இத்தனை சிறப்பாக நடிப்பதை பார்த்து சில காலம் ஆகிறது. முதல் காட்சியிலேயே, சரத்குமார் நம் மனதில் கம்பீரமாகப் பதிகிறார். இவரை ஏன் நாம் அடிக்கடி திரையில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வி ஏற்படுகிறது. ராதிகா, அதிர்ச்சியையும் அழுத்தத்தையும் அன்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். நடிப்பில் அத்தனை பரிமாணங்கள்! ஓவர் ஆக்ஷன் என்பது சிறிதுமின்றி மிக இயல்பாக அழுத்தமான நடிப்பை தந்து கவர்கிறார். விக்ரம் பிரபுவுக்கு வெகுநாள் இடைவெளிக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம், நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், எப்போதும் போல இயல்பான நடிப்பு. பாலாஜி சக்திவேல், ஒரு ஆச்சரியம். நடிகராக அசுரனின் அறிமுகமாகி இருந்தாலும் இதில் கிராமத்து பெரியப்பா பாத்திரத்தில் செம்மையாக நடித்து சிரிக்கவைக்கிறார், ரசிக்கவைக்கிறார், நெகிழ வைக்கிறார். ஷாந்தனு, மடோனா, அமிதாஷ் ஆகியோருக்கு பாத்திரங்கள் சிறிது என்றாலும் நடிப்பில் எந்தக் குறையுமில்லை. குழந்தைகளுடன் சென்னை வரும் ராதிகா, வாழும் இடம், வாழ்க்கை, அவரது தொழில் என அந்தக் களம் இயல்பாக ஈர்க்கிறது. விக்ரம் பிரபு செய்யும் தொழிலும் நாம் அதிகம் பார்த்திராதது. விரிவாக, சுவாரசியமாக காட்டப்பட்டிருக்கிறது.

இத்தனை நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் பல பாத்திரங்கள் அழுத்தமில்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் பெரும் குறை. சரத்குமார் - ராதிகா உறவு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா - பாலாஜி சக்திவேல் உறவு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா - சரத்குமார் உறவு... என இவையே ஆழமாக அழுத்தமாக சொல்லப்பட போதுமானதாக இருக்க, மற்ற டிராக்குகள் அத்தனையும் தேவையில்லாதது போன்ற உணர்வை அளித்து படத்தையும் பாதிக்கின்றன. மடோனா விக்ரம் பிரபுவிடம் உதவி கேட்பது போன்ற பல காட்சிகள் இயல்பை மீறி இருக்கின்றன. நந்தாவின் பழிவாங்கும் முயற்சியும் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கிறது. படத்தின் மைய நோக்கம் பலமாக இல்லாமல் பல பிரச்னைகளில் கவனம் செலுத்தி திடீரென முடிவை நோக்கிப் போவது போன்ற உணர்வால் படம் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் முடிகிறது.

 

 

balaji sakthivel



சித் ஸ்ரீராமின் பாடல்களில் ஒரு புதிய தன்மை தெரிகிறது. கண்ணு... தங்கம்... பாடல் மனதில் ஒட்டினாலும் அது அடிக்கடி ஒலித்து நம்மை சோதிக்கிறது. சித் ஸ்ரீராம் - கே இணைந்து அமைத்துள்ள பின்னணி இசையில் ஆங்காங்கே சோதனையாக செய்யப்பட்ட புது முயற்சிகள் சில, நம்மை சோதிக்கின்றன. சில இடங்களில் அமைதியின் தேவை இருப்பதை உணர முடிகிறது. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு உயர்தரம். கோயம்பேடு மார்க்கெட் வாழைக்காய் கடையும் தேனி வாழைத்தோப்பும் விதம் விதமாக கண்ணை கவர்கின்றன.

நேர்மறையான பல விஷயங்கள் இருக்க, குறையாகத் தெரியும் சில விஷயங்கள் படத்தை பின்னுக்கிழுக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில் மோசமான அனுபவமில்லை 'வானம் கொட்டட்டும்'.                 

 

                  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.