ADVERTISEMENT

“முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்றால்...”- நடிகர் சூரி வேதனை

12:36 PM Nov 25, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

மேலும், தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் ஆறு மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே மூன்று முறை நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜரான நிலையில், நேற்று (24/11/2022) நான்காவது முறையாக மீண்டும் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சூரி, "முதல்முறை வந்தேன், விசாரணை நடந்தது. மறுமுறை வந்தேன், விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன், விசாரணை நடந்தது. இன்றும் வந்தேன், விசாரணை நடந்தது. முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்றால், குழந்தைகள் எங்கே ஷூட்டிங்? ஷூட்டிங் போறீங்களா? என்று கேட்பார்கள். இப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலே, குழந்தைகள் அப்பா எங்கே போறீங்க? போலீஸ் ஸ்டேஷனா? என்று கேட்கிறார்கள். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் கனவில் கூட வருகிறது.

நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நியாயத்தை நம்பியிருக்கிறேன்; காவல்துறையை நம்பியிருக்கிறேன்; கோர்ட்டை நம்பியிருக்கிறேன்; கடவுளை நம்பியிருக்கிறேன். விசாரணை திருப்தியாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விசாரணை காலதாமதத்திற்கு நாம் ஒன்றும் பதில் சொல்ல முடியாது. நாம் மட்டுமே கிடையாது. எத்தனையோ வழக்குகள் உள்ளது. எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினார்களா? என்பது எனக்கு தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT