Skip to main content

நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா? அமைச்சரின் அதிரடி பதில்

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
actor soori and vimal

 

 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை. கடந்த மாதம் ஓய்வுபெற்ற ஆசிரியர் பால் கிறிஸ்டோபர் திடீரென இறந்ததை கண்டு அவரது குடுபத்தினரை சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோது நான்கு பேருக்கும் கரோனா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவி இருப்பது தெரியவே, நகர் முழுவதும் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, வெளியூர்க்காரர்கள் யாரும் கொடைக்கானலுக்கு வரக்கூடாது என நகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பையா குழு தடைவிதித்தது.

 

கடந்த 15ம்தேதி கொடைக்கானல் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிக்கு நடிகர்கள் விமல், சூரி உள்பட 4 பேர் அனுமதி இல்லாமல் சென்று, மீன் பிடித்து அதை இணைய தளத்திலும் வெளியிட்டனர். இந்த விஷயம் கொடைக்கானல் மக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலரான பேத்துப்பாறை மகேந்திரனுக்கும் எட்டியதின் பெயரில்தான் இந்த ஊரடங்கு நேரத்தில் அனுமதி இல்லாத பகுதிக்கு சென்று மீன் பிடித்த நடிகர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிக்கு அவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடமும் மாவட்ட வனத்துறை அதிகாரியிடமும் புகார் கொடுத்தனர். மாவட்ட வன அதிகாரி தேஜஸ் வியோ, விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்ற நடிகர்கள் நான்கு பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவதாரம் விதித்தாரே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணைபோன வனத்துறை சுற்றுச் சூழல் காவலர்களான சைமன், அருண். செல்வம் ஆகிய மூன்று பேரை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து பைலை குளோஸ் செய்து விட்டார்.

 

kodaikanal

 

 

"இதே பேரிஜம் ஏரி பகுதிக்கு உள்ளூரை சேர்ந்த 7 பேர் அப்பகுதியில் கடந்த மாதம் நடந்து சென்றனர். அதைக் கண்ட வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் 7 பேர் (வின்சன்ட், தங்கேஸ்வரன், சங்கர் கணேஷ், அந்தோணி, கோவிந்தன், ரமேஷ், பிரபு) நுழைந்ததாக கூறி அவர்களை கைதுசெய்து கொடைக்கானல் வனஅலுவலகம் முன் கொலை குற்றவாளிகள்போல் உட்கார வைத்து, சுற்றி டி.எப்.ஓ. உட்பட அதிகாரிகள் நின்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த பின் அந்த ஏழு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

சாதாரண மக்களை கம்பி எண்ண வைத்த வனத்துறையினர், நடிகர்கள் தங்கள் உல்லாசத்தை உலகம் முழுக்க வாட்ஸ்ஆப்பில் பரப்பிய பிறகும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிட்டனர். நடிகர்களுக்கு ஒரு நீதி? உள்ளூர் மக்களுக்கு ஒரு நீதியா?

 

kodaikanal

 

பேரிஜம் போகும் வழியில் உள்ள இரும்பு கேட்டின் சாவி, வனத்துறை அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. அவர்களின் அனுமதியின்றி எதுவும் நடக்காது. எனவே நடிகர்கள் மீதும் அவர்களுக்கு உதவிய வனத்துறையினர் மீதும் வனத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடக்கும்'' என்றார் சமூக ஆர்வலரான பேத்துப்பாறை மகேந்திரன்.

 

இது சம்பந்தமாக சுகாதாரத்துறை ஆய்வாளர் சுப்பையாவிடம் கேட்ட போது, "ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்ததிலிருந்தே நகரில் எந்த ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் நகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறோம். வெளியூர் மக்கள் உள்ளூருக்குள் அனுமதிக்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்படி இருக்கும்போதுதான் உள்ளூர் பிரமுகர் மூலம் நடிகர்கள் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்து, தடையை மீறி பேரிஜம் ஏரிக்கு சென்றதன் மூலம்தான் பிரச்சனை பெரிதாகியுள்ளது. இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ.வும் வழக்குப்பதிவு செய்துள்ளார். நாங்களும் விசாரணை செய்து வருகிறோம்'' என்று கூறினார்.

 

இது பற்றி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, "சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான். அதனால வனத்துறையில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சென்று மீன் பிடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கையை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். அதோடு இனி யாரும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையாத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். நடிகர்கள் விவகாரம் கொடைக்கானல்வாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.