ADVERTISEMENT

திரையரங்கில் நூறு சதவிகித அனுமதி... முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா!

04:30 PM Jan 04, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. கரோனா குறித்த அச்சம் இன்னும் நிலவி வருவதால், 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இந்த நிலையில், எதிர்வரவிருக்கும் பொங்கல் தினத்தையொட்டி நடிகர் விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. இதனையடுத்து, திரையரங்குகளை முழுமையாகத் திறக்க அனுமதி கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திரையுலகினர் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கு திரையுலகினர் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoP's) கருத்தில்கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.

திரைப்படம் பார்க்க வரும் அனைவரது பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT